2024 ரீவைண்ட்: பூரி முதல் பழனி வரை.. இந்தாண்டின் டாப் ஆன்மீக தலங்கள் - OYO வெளியிட்ட பட்டியல்
- இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன.
- பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
இந்தியாவில் தற்போது ஆன்மீக சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஆன்மீக தளங்களை தேடி செல்வோர் தங்குவதற்கு அந்தந்த ஊர்களில் உள்ள ஓட்டல்களில் முன்னரே புக் செய்வது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் ஒயோ ஆப்பில் அதிகமானோர் முன்பதிவு செய்த ஆன்மீக இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
OYO வெளியிட்டுள்ள "Travelopedia 2024' அறிக்கையின்படி இப்பட்டியலில் 6 நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன. அதற்கடுத்த வரிசையில் தியோகர், பழனி, கோவர்தன் நகரங்கள் இடம்பிடித்துள்ளன. பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
பூரி:
ஒடிஷா மாநிலத்தில் பூரி நகரத்தில் தான் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக இந்தாண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கே. பாண்டியனை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
வாரணாசி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசி நகரத்திற்கு எண்ணற்ற பக்தர்கள் வருடம்தோறும் வந்து செல்கின்றனர். முன்பு காசி என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு வருவது புண்ணியம் என்று பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர்.
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் கங்கை நதியில் குளித்து தங்களது பாவங்களை கழுவவும் எண்ணற்ற பக்தர்கள் வாரணாசிக்கு வருகை புரிகின்றனர்.
ஹரித்துவார்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவிற்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் இந்நகரத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை தருகின்றனர்.
தியோகர்:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் நகரத்தில் சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளனமான பக்தர்கள் தியோகர் நகரத்திற்கு வருகை புரிகிறார்கள்.
பழனி:
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாநிலத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
பழனியாண்டவரான முருகனை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
கோவர்தன்:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோவர்தன் மலையை பகவான் கிருஷ்ணர் தூக்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோவர்தன் நகரத்திற்கு நிறைய பக்தர்கள் வருடம்தோறும் பயணம் செய்கின்றனர்.