நம்பர் ஒன் கனவு நிறைவேறியது... உற்சாகத்தில் அல்காரஸ்
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.
முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.
19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.
அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.
கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது.