search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார்.
    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாக தெரிவித்தார்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் தங்கள் மகளின் கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கை போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை பற்றி கூற மறுத்து விட்டார்]

    தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படி ஒரு நிலைமை வேறு எந்த தாய்க்கும் வர கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். 

    • இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட அம்சங்கள் அதில் உள்ளன

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேலைக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

    மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின்மூலம் அரசுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நைட் சஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி,

    நகர்களில் முழு சிசிடிவி கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது,

    ஆபத்து சமயங்களில் போலீசை உடனே தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனையை கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது,

    பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீஸ் ரோந்தை அதிகரிப்பது,

    தெளிவாக தெரியும் வகையில் அடையாள அட்டைகளை மருத்துவமனை மற்றும் கல்லூரியை சேர்நதவர்கள் அணிவதை கட்டாயமாக்குவது,

    இங்குள்ள செக்யூரிட்டிகளை போலீஸ் மேற்பார்வையில் கொண்டுவருவது,

    பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

    • பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.
    • குற்றவாளிக்கு சிபிஐ தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமான வகையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நீதி வேண்டி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

    சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று பேரணியில் ஈடுபட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுடன் மம்தா பானர்ஜி பேரணி மேற்கொண்டார். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் "நாங்கள் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விரும்புகிறோம்" என கோஷம் எழுப்பினர்.

    "பொதுமக்களின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறோம். அவர்கள் சரியான விசயத்தை செய்தார்கள்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
    • பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது.

    மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் திடீரென வன்முறையில் இறங்கி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

    இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பான வாசகம் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தோல்வியடைந்ததைவிட மேற்குவங்கத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்தது என குற்றம்சாட்டினர்.

    பாஜக-வினர் கொல்கத்தாவின் ஷியாம்பஜார் ஐந்து முனை சாலையில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அதை முறியடித்தனர். பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது. இந்த செயல் பொதுமக்களின் எதிர்ப்பை முடக்கும் முயற்சி என பாஜக தெரிவித்தது. பல இடங்களில் பாஜக-வினர் கைது செய்யப்பட்டனர்.

    எம்எல்ஏ அக்னிமித்ரா பால், ருத்ரானில் கோஷ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த போராட்ட பேரணியில் கலந்த கொள்ள அங்கு திரண்டனர்.

    "இந்த எதேச்சதிகார அரசு போக வேண்டும். அம்மாநில மக்கள் மம்தா பானர்ஜி அரசை அகற்றுவார்கள்" என அக்னிமித்ரா பால் தெரிவித்தார். பாஜக மாநில தலைவரான சுகந்தா மஜும்தார் அந்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தீப பேரணியும் நடத்த உள்ளனர்.

    • உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    • பாஜகவும் இன்று பேரணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கால்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

    நாடு முழுவதும் பலவேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கல்கத்தாவில் இன்று மாலை மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    முன்னதாக மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் மடை மாற்ற முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் மூலம் இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக பேரணி அறிவித்துள்ள நிலையில், மம்தாவும் மாலையில் பேரணி நடத்த உள்ளார். கல்கத்தாவின் மவ்லாலி தொடங்கி தர்மஸ்தலா வழியாக இந்த பேரணியை நடத்த உள்ளார் மம்தா.

    வழக்கு இப்போது சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில் நியாமான விரைவான நீதியை வலியுறுத்தி மம்தா இந்த பேரணியில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பெண் மருத்துவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.
    • பெண் மருத்துவர் படுகொலையை எதிர்த்து போராட்டம் தீவிரம்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையை துவங்கினர். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

    மேலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை இந்த வழக்கின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

     


    இதன்படி, ஆகஸ்டு 17 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18 ஆம் தேதி காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மருத்துவர்களின் நியாயமான காரணங்களுக்கு நாட்டின் இரக்கம் எங்களுக்கு தேவை. மருத்துவர்கள் போராட்டத்திற்கு வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    • மருத்துவமையில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது.
    • ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையை சூறையாடினர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் பிரச்சினையைத் தூண்டி விடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சுமார் 40 பேர் கொண்ட குழு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து, அவசர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் அறை மற்றும் மருந்துக் கடையை சேதப்படுத்தியது.

    மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையையும் சூறையாடினர்.

    இதைக் கண்டித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் அரசியல் தலையீடு இருக்கிறது.

    மாணவர்களோ மருத்துவர்களோ தங்கள் போராட்டங்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. அதற்கு பதிலாக சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சிக்கின்றனர்.

    காவல்துறையினர் இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் மீதும், போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீதும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சி செய்கின்றன. வீடியோவை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராய் போலீசாரிடம் சிக்கினார்.

    இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நேற்று நள்ளிரவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை வார்டுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்கள் உட்பட வார்டு முழுவதையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள்ளும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

    அப்போது கும்பல் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்து எரித்தது. 2 போலீஸ் வாகனங்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் முடியாமல் போனதால் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சூறையாடியது என்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பான பாதை வழங்கி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போலீஸ் கமிஷனரை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

    • வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
    • ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இலிவான அரசியலில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் நிற்பதற்குப் பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுகின்றன. வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    நாங்கள் என்ன செய்யவில்லை? நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை?. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல் ஆணையரிடம் பேசினேன். பெண்ணின் பெற்றோரிடம் பேசினேன். குற்றவாளி தூக்கிலிடப்படுவார் என பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    இரவு முழுவதும் வழக்கை கண்காணித்து வருகிறேன். தகனம் செய்யும் வரை போலீசாருடன் தொடர்பில் இருந்தேன். போலீசார் 12 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்தனர்.

    டிஎன்ஏ சோதனை, சிசிடிவி காட்சிகள், மாதிரி சோதனை என முழுமையான விசாரணை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

    எந்தவொரு விசாரணைக்கும், நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ஞாயிறு வரை கெடு விதித்திருந்தேன். முறையான விசாரணை இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. மூத்த மற்றும் இளைய மருத்துவர்களை நான் மதிக்கிறேன். முறையான விசாரணை இல்லாமல் மக்களை கைது செய்ய முடியாது.

    உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் முழுமையாகப் பின்பற்றுவோம், சிபிஐக்கு நாங்கள் ஒத்துழைப்போம்.

    34 பேர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் பலர் பட்டியலில் இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

    குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிபிஐ நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 16-ந்தேதி பேரணி நடத்த இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது,
    • மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது- ராகுல் காந்தி.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு எதிர்ப்பு நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் குணால் கோஷ் பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்த குணால் கோஷ் "இதுபோன்று கருத்து தெரிவிக்கும்போது, ராகுல் காந்தி அதற்கு முன் சரியானதுதானா என சரிபார்க்க வேண்டும். ராஜிவ் காந்தி (முன்னாள் பிரதமர்) மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மோசமான சாதனையை அவர் மறந்துவிடக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

    மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்குவங்க அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க இருக்கிறது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் அரங்கேறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட அறைகளை இடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அதுவும் குற்றச் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது, தடயங்களை அழிப்பதற்கான முயற்சி என பாஜக குற்றம்சாட்டி உள்ளது.


    இது குறித்து பாஜக ஐடி செல் பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜியின் அக்கறையின்மை, கொல்கத்தா காவல்துறையின் மூடிமறைக்கும் முயற்சியால் மேற்கு வங்காளம் கோபத்தால் கொந்தளிக்கிறது."

    "இந்த வேளையில், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மார்பு மருத்துவப் பிரிவில் உள்ள அறைச் சுவர்களை உடைத்துள்ளனர். அங்கு தான் பணியில் இருந்த ஜூனியர் மருத்துவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் சிபிஐ விசாரணைக் குழுவை கொலையாளிகளிடம் கொண்டு செல்லக்கூடிய முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது."

    "ரெசிடென்ட் டாக்டர் ஏரியா எனக் குறிக்கப்பட்ட பகுதி மற்றும் மார்பு மருத்துவத் துறையின் உள்ளே கழிப்பறை (பெண்) ஆகியவையும் சீரமைப்பு என்ற பெயரில் உடைக்கப்படுகின்றன. இது, மம்தா பானர்ஜி எல்லாவற்றிலும் ஆதாரங்களை அழித்து, கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் குற்றச் சுவடுகளை மறைப்பதில் ஈடுபட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை," என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
    • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மேற்குவங்காள வழக்கறிஞர்கள் கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது எனக்கூறியதுடன், நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

    ×