என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தொழுகியின்போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர்.
    • இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது

    மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    மீட்பு பணிகள் தீவிரம்

    மியான்மரில் ஏராளமான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டு கட்டுகள் போல சரிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்களாக காட்சி அளிக்கிறது. இந்த கட்டிட குவியல்களில் இருந்த உயிரற்ற சடலங்களை மீட்பு படையினர் மீட்டு வருவது அனைவரையும் கலங்கடித்து உள்ளது.

    கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 3 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

     

    நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் உடைந்து போன கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் தங்களது கைகளால் கட்டிட குவியல்களை அகற்றி வருகின்றனர்.

    வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தொழுகியின்போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர் என்று வசந்த புரட்சி மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

    மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கு தான் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் நிர்மபி சவக்கிடங்காக காட்சி அளித்து வருகிறது. பலியானவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர். பலரை காணவில்லை. அவர்களை தேடி உறவினர்கள் அங்கும், இங்கும் சுற்றி அலைவது பார்க்க பரிதாபமாக உள்ளது.

    இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க போதுமான அதிநவீன கருவிகள், பணியாளர்கள் இல்லாமல் அரசு தடுமாறுகிறது.

    நகரத்தில் மட்டுமே தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மண்டலே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 நாட்களுக்கு மேலாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் துண்டிக்கப்பட்ட காலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். இது மீட்பு குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    குடிநீர் - மின்சார வசதி இல்லை

    இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுமக்கள் குடிநீர்- மின்சார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள், ரோடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அவை இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    உதவிக் கரம் நீட்டிய நாடுகள்

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

    அவசர கால குழுக்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதலாவதாக இந்தியா உதவ முன்வந்தது. மியான்மருக்கு ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் விமானங்களில் உடனடியாக நிவாரண பொருட்கள், பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து மியான்மருக்கு இது வரை நிவாரண பொருட்களுடன் கூடிய 5 விமானங்கள் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மியான்மர் நிலநடுக்க சேதங்களுக்காக சீனா 14 மில்லியன் டாலர்கள் நிவாரணம் அறிவித்துள்ளது. 126 மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஆறு நாய்களுடன் மருத்துவ கருவிகள், ட்ரோன்கள் மற்றும் பூகம்பக் கண்டுபிடிப்பான்களையும் அனுப்பியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் சர்வதேச நிவாரண அமைப்பான UNAIDS கடந்த ஜனவரியில் பதவியேற்றதும் நிறுத்தினார். இதனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் மியான்மர் நிலநடுக்கத்தின் பாதித்தவர்களுக்கான பெரிய அளவிலான உதவிகள் கிடைப்பது தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
    • இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.

    கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.

    • உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    உதகை மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    மருத்துவ சேவை, சரக்கு வாகங்கள் மற்றும் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    • அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது.
    • அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.

    அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு வழங்க முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தோம்.
    • எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.

    காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2006ஆம் ஆண்டு மத்திய அரசு, அரசியலமைப்பில் கொண்டு வந்த திருத்தத்தை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது அர்ஜூன் சிங் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    நமது அரசியிலமைப்பின் சட்டப்பிரிவு 15(5)ல், அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் என எந்த நிறுவனங்களாக இருந்தாலும் சரி எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு வழங்க முடியும் எனத் திருத்தப்பட்டது.

    இந்த புரட்சிக்கரமாக திருத்தத்தை, அரசு கல்வி நிறுவனங்கள், டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-க்கள் ஆகியவற்றில் நாங்கள் முதற்கட்டமாக செய்தோம்.

    2014ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஒருமனதாக அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்திருந்தது.

    அதன்பின் தேர்தல் நடைபெற்றது. மோடி அரசு வந்தது. 11 வருடங்கள் கடந்தாகிவிட்டன. இது முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.

    ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.

    நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.

    நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    • அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடத்தி ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது. இந்துக்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலான இதில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக அம்மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனாலிசா போஷ்லே என்ற 17 வயது பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் டிரண்ட் ஆகின. ஒரே இரவில் இந்தியா முழுவதிலும் மோனாலிசா பிரபலம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு மோனலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். டைரீஸ் ஆஃப் மணிப்பூர் என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு காதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் மனோஜ் மிஸ்ரா (45 வயது) பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.

    திருமணமான சனோஜ் மிஸ்ரா தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணை 2020 ஆம் ஆண்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ரா சந்தித்தார். படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளார். 2021 ஜூன் மாதம் அப்பெண்ணை ஜான்சி ரெயில் நிலையத்துக்கு இயக்குநர் அழைத்துள்ளார்.

    சமூக அழுத்தத்தை காரணம் காட்டி அப்பெண் வர மறுக்கவே தான் தற்கொலை செய்துகொள்வேன் என பெண்ணிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். இதனால் அப்பெண் ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

    அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    • பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
    • புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் அசாம் போலீசார் கடந்த 15-ந் தேதி தமிழகத்தில் சென்னை செம்மஞ்சேரியில் பயங்கர சதித்திட்டத்துடன் தங்கி இருந்த பயங்கரவாதி அபுசலாம் அலியை கைது செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள் ளிட்ட ஊர்களில் வங்க தேசத்தினர் 45 பேர் போலி ஆதார் கார்டு பெற்று தமிழகத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமின் விடுதலை பெற்று சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 45 பேரை காணவில்லை என்பதால் தமிழக போலீசார் அவர்களை பல இடங்களில் தேடி வருகின்றனர். அவர்களில் பலர் ஜமாத்உல் முஜாஹி தீன் மற்றும் அன்சூர்ல்லா பங்களா டீம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.

    மேலும் தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிரடி சோதனை நடத்தி பதிவேடுகள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரியில் வட மாநில தொழிலாளர் என்ற போர்வையில் சதித்திட்டத்துடன் வங்கதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டு மூலம் ஊடுருவி இருக்கலாம் என புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை தொழிற்சாலை மற்றும் கொதிகலன் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளர் முரளி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டைகளை பெற்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி இருப்பதாகவும், அது குறித்து தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது போன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

    உங்கள் தொழிற்சாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளை சரி பார்க்கவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி ஏதேனும் வட மாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில் உரிய பதிவேடுகள் ஆவணங்கள் இன்றி யாரேனும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது கண்டறிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
    • நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    வேளச்சேரி, அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வக்கீலானா இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தார்.

    இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

    கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

    கொலை தொடர்பாக வெங்கடேசனின் நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்கேதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசனிடம் ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
    • பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.

    • ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
    • வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    • தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
    • அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.

    பா.ஜ.க.வுடன் கூட் டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.

    டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-

    நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

    எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.

    கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.

    என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.

    அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.

    எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.

    அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

    ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

    இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.

    எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    ×