என் மலர்tooltip icon

    செய்திகள்

    • ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
    • வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன.
    • போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

    மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

    ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
    • தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போதுமான சாலை உள்கட்டமைப்பு இல்லாததால் பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். மோசமான பராமரிப்புள்ள படகுகளால் அவ்வப்போது விபத்துகளும் நேர்கிறது.

    இந்நிலையில் காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு 150க்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொண்டு மரப்படகு ஒன்று ருகி ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. படகில் எரிபொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.

    பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் சமையல் செய்துகொண்டிருந்தபோது தீயானது எரிபொருட்கள் மீது பற்றியது. தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆற்றில் குதித்த மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

    போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாததால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.
    • காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

    * சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.

    * பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல சிறுகுறு தொழில்கள் தமிழ்நாட்டை முன்னேற்றுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள்...

    1. அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீட்டுக்கான மானியம் ரூ.1 லட்சமாக வழங்கப்படும்.

    2. காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

    3. அம்பத்தூர் தொழில்பேட்டையில் செயல்படும் பாகம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வகம் ரூ.5 கோடியில் நிறுவப்படும்.

    4. சிறுகுறு நிறுவனங்களுக்கான காட்சிக்கூட கட்டண நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்படும்.

    5. காஞ்சி பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகுபாடு இல்லாத திட்டத்தை உருவாக்க நினைத்து உருவானது தான் கலைஞர் கைவினை திட்டம்.
    • தி.மு.க.வின் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, கொள்கையின் ஆட்சி.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பாரம்பரியமாக செய்த தொழிலை மட்டுமே ஒருவர் செய்ய முடியும்.

    * விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானியம் கிடையாது.

    * ஒரு காலத்தில் தந்தை செய்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என முறை இருந்தது.

    * சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது?

    * கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் 8,951 பேருக்கு ரூ.170 கோடிக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    * பாகுபாடு இல்லாத திட்டத்தை உருவாக்க நினைத்து உருவானது தான் கலைஞர் கைவினை திட்டம்.

    * தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும்.

    * தி.மு.க.வின் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, கொள்கையின் ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.

    பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பிப்ரவரி 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அது காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரும் அந்த உடலை தகனம் செய்தனர். சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    ஆனால் அவர்களின் மகன் ஏப்ரல் 17 ஆம் தேதி தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளான். அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு பேர் தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தான்.

    மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள் நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தான். சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ கால் செய்துள்ளான். நேபாளுக்கு கிளம்பிச் சென்ற சகோதரன், தம்பியை பத்திரமாக திருப்ப அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்தான்.

    போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த போலீசார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தனர். 

    • பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டமில்லை.
    • மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சமூக நீதியை, சம நீதியை, மனித நீதியை, மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டம்.

    * பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டமில்லை.

    * விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு 18 வயது முதல் அனுமதி என்ற வயதினை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    * 18 வயது என்பது ஒருவர் உயர்கல்வி பயிலும் வயதா? அல்லது குலத்தொழிலை செய்யும் வயதா?

    * மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், மாணவர்களை கல்வியை விட்டு வெளியேற்றும் திட்டம்.

    * மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    * விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பிக்கும் வயதை 35 ஆக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன்.

    * தாம் எடுத்துரைத்த 3 திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
    • மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை 2.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

    இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
    • பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

    இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாக தெரிவித்தார்.
    • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

    இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

    ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்களின் சாந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    • அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது.
    • என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

    ம.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக துரை வைகோ கூறியிருப்பதாவது:

    அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.

    இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் ம.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது.

    இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் ம.தி.மு.க. குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது.

    ம.தி.மு.க. ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தபோது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர்.

    கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன்.

    சட்டமன்றத் தேர்தல் வந்தபோது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கழகத்தினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன்.

    தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் அவர்களின் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கழக தோழர்கள் நன்கு அறிவார்கள்.

    தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி தி.மு.க. நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர்.

    பாராளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கணிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். பாராளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்தபோது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். எனக்கு வாய்ப்பினை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் பாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கழகத்திற்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு இயக்கத்தந்தையை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன்.

    இயக்க தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். தலைவர் உருவாக்கிய மறுமலர்ச்சி தி.மு.க. என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.

    நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் "வாழ்நாள் போராளி" என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி இரவி தீக்குளித்தபோது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.

    அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

    ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி சரவணகுமார் மற்றும் ஆதிலிங்கத்தையும் கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் மாடசாமி (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருக்கும், புதியம்புத்தூரை சேர்ந்த சரவணகுமார் என்பவரது மகள் சங்கீதாவுக்கும் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.

    மாடசாமி தனது மனைவி, குழந்தையுடன் புதியம்புத்தூர் கீரைத் தோட்டதெரு பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் மாமனார் சரவணகுமார் மற்றும் மனைவியின் அக்காள் குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.

    மாடசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர் மது குடித்துவிட்டு அடிக்கடி தன் மனைவி சங்கீதாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வந்த மாடசாமி தன் மனைவி சங்கீதாவிடம் மட்டன் குழம்பு கேட்டு தகராறு செய்துள்ளார்.

    அப்போது மனைவி சங்கீதாவை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். நேற்று குடிபோதையில் இருந்த மாடசாமி தன் மனைவி சங்கீதாவை அடித்துள்ளார். இதைப்பார்த்த சங்கீதாவின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் மாடசாமியை கண்டித்துள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாடசாமியின் மாமனார் சரவணகுமாரை மாடசாமி தன் காலால் மிதித்து கீழே தள்ளி உள்ளார். அருகில் கிடந்த கல்லை எடுத்து வந்து மாமனார் சரவணகுமாரை தாக்க முயன்றுள்ளார். உடனே மாடசாமியிடம் இருந்து கல்லை பிடுங்கிய மாமனார் சரவணகுமார் அந்த கல்லால் மாடசாமி முகத்தில் எறிந்துள்ளார்.

    அப்போது அருகில் நின்ற மாடசாமியின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் வீட்டின் முன்பு கிடந்த அம்மிக்குலவியை எடுத்து வந்து மாடசாமியை தாக்கி உள்ளார். இதனால் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கொலை பற்றிய தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி சரவணகுமார் மற்றும் ஆதிலிங்கத்தையும் கைது செய்தனர்.

    ×