search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இருவரின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

     


    குடியரசு தலைவரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்தித்தார்.

    டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமின்றி கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இவர்களது சந்திப்பும் குடியரசு தலைவர் மாளிகையில் தான் நடைபெற்றது. இதனை குடியரசு தலைவர் மாளிகை அதன் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    • நமது கலாச்சாரத்தையும் மொழியையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை.
    • காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது.

    ஒரு பிரதேசத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை தகர்த்து  அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், ஒரு நாடு அதன் கலாச்சார செல்வம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் இந்தியா தனித்துவமானது, ஏனெனில் உலகில் எந்த நாடும் நம்மை ஒப்பிட முடியாது.

    நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை. அதுவே நமது வரையறுக்கப்பட்ட கடமை. இலக்கியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கை கொடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    கடந்த காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகளைக் குறிப்பிட்டு பேசிய ஜகதீப், ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை தகர்த்து முறியடித்து அதன் மொழியை அழிப்பதாகும்.

    அவர்கள் நம் மொழி, நம் கலாச்சாரம், நம் மத இடங்களை கைப்பற்ற மிகவும் அடக்குமுறை கொண்ட கொடூரமானவர்களாக இருந்தனர்.

    காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது. நம்மை காயப்படுத்த, அவர்கள் நம் மத இடத்திற்கு மேலாக தங்கள் இடத்தை உருவாக்கினர். நம் மொழிகளை மட்டுப்படுத்தினர். நம் மொழி செழிக்கவில்லை என்றால், நம் வரலாறும் செழிக்காது என்று தெரிவித்தார். 

     

    • ராம் குதிர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
    • காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.

    ராம் குதிர் தொண்டு நிறுவனம் என்ற பெயர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற பிரபல இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் ஒன்று கடந்த ஜூலை 2, 2024 இல் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்தது.

    இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.

    கூட்டநெரிசல் ஏற்பட்டபோது போலே பாபா அங்கிருந்து தனது காரில் தப்பினார். தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா கூறியதும் மக்கள் தல்லுமுல்லுப்பட்டதால் தான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் பலர் தெரிவித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

     

    இந்நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    உண்மையான காரணம், ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமும், அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியாகச் சேர்ந்த கூட்டமுமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் காவல்துறை தனது பொறுப்பை முறையாகச் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தை நிர்வகிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒருவேளை இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான விதிகளை அமல்படுத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதற்கிடையில் இதே உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா ஆன்மீக கூடுகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு (2024) ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள் தங்களின் வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்தனர். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு மக்களுக்கான மறுவாழ்வு பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்றும், அதனை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேரள அரசு வலியுறுத்தியது.

    ஆனால் கேரள அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் பேரிடர் நிவாரணத்துக்கு ரூ.2ஆயிரம் கோடி வழங்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில ஆளும் அரசான இடது ஜனநாயக முன்னணியின் வயநாடு மாவட்ட குழு அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் (25-ந்தேதி) காலை 10 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்படும் என்றும், முன்னதாக கேரள இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறும் எனவும் கூறியிருக்கின்றனர்.

    இந்த போராட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னார்வலர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள், பிற மாநில எம்.பி.க்கள், தேசிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ குறுகிய பார்வையுடன் பார்க்கிறது.
    • மோடிஜியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

     2022 இல் சென்னைக்கு வந்த செய்த மாண்புமிகு பிரதமர், "தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.  

    ஒரு மாநிலம் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) ஐ குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், அரசியல் கதைகளைத் தக்கவைக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவதும் மிகவும் பொருத்தமற்றது.

    இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. NEP 2020 மொழியியல் சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது . மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மொழியை தொடர்ந்து கற்க உறுதி செய்கிறது.

    இந்தியாவின் கல்வித் துறையின் முதுகெலும்பாக இருந்து வரும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் எழுத்து மற்றும் உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. இது பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் சரிவுக்கு வழிவகுத்தது.

    காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்ய NEP 2020 முயல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
    • ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

    புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.

    • 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
    • "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்"

    உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் கூகிள் நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகிள் நிறுவனம் திறந்து வைத்தது.

    பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய கூகுள் அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

    கூகிளின் ஆண்ட்ராய்டு, தேடல், பணம் செலுத்துதல், கிளவுட், மேப்ஸ், ப்ளே மற்றும் டீப் மைண்ட் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்ய உள்ளது.

    இந்த அலுவலகத்தில் 'சபா' என்று அழைக்கப்படும் மைய இடம் உள்ளது. இது கூட்டங்கள் மற்றும் பட்டறைகளுக்குப் பயன்படுத்தப்படும். பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக நடக்க சிறப்பு தொட்டுணரக்கூடிய தரை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அலுவலகம் குறித்து பேசியுள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் நாட்டு மேலாளருமான பிரீத்தி லோபனா, "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று தெரிவித்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன்களின் உற்பத்தியைத் தொடங்கியது. மும்பை, ஐதராபாத், புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் கூகுள் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது.
    • பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை டீலர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

    பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. துவாரகா மற்றும் பெட் துவாரகாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பிறகு 18 ஆண்டுகளாக அங்கு எந்த அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.) துவாரகா கடலில் ஆழ்கடல் அகழாய்வை தற்போது தொடங்கி உள்ளது. தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அலோக்திரிபாதி தலைமையிலான 5 ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை தொடங்கியதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முதல் முறையாக அபராஜிதா சர்மா, பூனம்விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்வினா என்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    • எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது
    • பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும்.

    உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

    சிறப்பு ரெயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தில் டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் தொடர்பான வீடியோக்களை அகற்ற இந்திய ரெயில்வே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும். கண்டதை பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பட்ட இந்த நோட்டீசில் எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது தற்போது பொது வெளியில் தெரியவந்துள்ளது.

    இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரெயில்வே செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர்களை இவ்வாறு சித்தரிப்பது தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.  

    • இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
    • லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது.

    ரெயில் இன்ஜின் ஓட்டுனர்கள் பணிக்கு முன் அல்லது பணியின் போது இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.

    திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், லோகோ பைலட்டுகள், இளநீர், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    ரெயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது

    ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

    இதுபற்றி கேட்டால் தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக ரெயில் இன்ஜின் டிரைவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இவை அனைத்தையும் உட்கொள்ள தெற்கு ரெயில்வே தடை விதித்துள்ளது.

    ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரெயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது. "பழுதடைந்த ஆல்கஹால் பரிசோதனை உபகரணங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்களை தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய குழு உறுப்பினர் பி.என். சோமன் வலியுறுத்தியுள்ளார்.

    • லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.
    • விபத்தின்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். மேலும் சில கார்கள் அவரது காருடன் அணிவகுத்து சென்றன.

    ஹூக்ளி புறநகரில் தேசிய நெடுஞ்சாலையில் தாதுபூர் என்ற பகுதியில் சென்றபோது கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வேகமாக வந்த லாரி ஒன்று கங்குலியின் கார் மீது மோதியது.

    இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் பிரேக் போட்டார். இதில் கங்குலி காரை தொடர்ந்து வந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கங்குலி காயமின்றி உயிர் தப்பினார். அதேபோல் மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

    இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்தது என்றும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    ×