search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன்.
    • மோசமான இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை

    போபால் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இன்று நான் போபாலில் இருந்து டில்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். அதற்காக நான் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கையில் அமர்ந்தபோது தான் அது சேதமடைந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவந்தது.

    சக பயணிகள் இருக்கையை மாற்றி நல்ல இருக்கையில் அமரும்படி என்னை வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் நான் ஏன் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.

    டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை.

    பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?

    ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    • போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி இந்து அமைப்பு தொடர்ந்து வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டருடன் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.

    அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

    இந்த கலவரம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பான 4,400 பக்க குற்றப்பத்திரிகையை உ.பி போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன் தினம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 79 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

    இந்த கலவரத்தை சம்பலைச் சேர்ந்த ஷாரிக் சாத்தா என்பவர் திட்டமிட்டு நடத்தியதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. தற்போது ஷாரிக் சாத்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பல் பகுதியில் கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    டெல்லி - என்சிஆர் பகுதியில் மட்டும் இவரது கும்பல் 300-க்கும் மேற்பட்ட கார் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது. சம்பலை சேர்ந்த ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    போலி பாஸ்போர்ட் மூலம் ஷாரிக் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கிருந்தபடியே சம்பல் கலவரத்துக்கு அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஷாரிக் கும்பலை சேர்ந்தவர்கள்தான் சம்பல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாவுர்ரகுமான் பார்க், எம்எல்ஏ இக்பால் மொகமூதின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, அவர்களுடைய பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    • அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்தினார்.
    • "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார்.

    வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய பாதுகாவலர் பூர்ணிமா தேவி பர்மன்(45), டைம் பத்திரிகையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.

    அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி பர்மன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் விலங்கியல் துறையில் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

     

    2007 இல் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டு உரிமையாளர் அருகில் இருந்த நாரை கூடு கட்டிய மரத்தை வெட்டுவதை பார்த்தார். இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது நாரை கெட்ட சகுனம் என்றும் அவை நோய்களை பரப்பும் என்றும் பதிலளித்தார். இந்த பதில் பூர்ணிமாவின் வாழ்க்கையையே மாற்றியது.

    அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டு, வன உயிர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் முக்கியத்துவம் குறித்த முழு நேர பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

     

    நாரைகள் பாதுகாப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், உள்ளூர் சமூகங்களிடம் வன உயிடீகள் பாதுகாப்பு விழ்ப்புணர்வு  ஏற்படுத்துவற்காக "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பறவைகளின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாத்தல், காயமடைந்த நாரைகள், பிற வன உயிரிகளுக்கு சிகிச்சை அளித்த மறுவாழ்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பு மூலம் பெண்களுக்கு தறிகள் மற்றும் நூல் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் துணிகளை நெசவு செய்து அவற்றை விற்கும் தொழில்முனைவோராக பல பெண்கள் மாறியுள்ளனர்.

     

    மூத்த வனவிலங்கு உயிரியலாளராக அறியப்பட்ட பூர்ணிமா தேவி, WiNN (இயற்கை வலையமைப்பில் பெண்கள்) அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநராகவும், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) நாரை, ஐபிஸ் மற்றும் ஸ்பூன்பில் பறவைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

    2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவில் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை பூர்ணிமா தேவி பெற்றார். அதே ஆண்டில், இங்கிலாந்து இளவரசி ராயல் அன்னே வழங்கிய கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் பூர்ணிமா தேவி பெற்றார்.  

     

    • உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • ரூ.13.86 கோடியை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.

    உத்தரக்காண்டில் காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஐபோன்கள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் வாங்குவதற்காகவும், கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும் பயன்படுத்தியது உட்பட பல நிதி முறைகேடுகள் CAG அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையில், தொழிலாளர் நல வாரியம் 2017 முதல் 2021 வரை அரசாங்கத்தின் அனுமதியின்றி ரூ.607 கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வன நிலத்தை மாற்றுவதற்கான விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    வனப்பகுதிகள் வளர்ப்புக்கான இழப்பீடு, மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் (CAMPA) தரவுகளின்படி, 2019-22 வரை காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.13.86 கோடியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலமாக, 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சார்ந்து அல்லாத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவாகியுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

    காடுகளில் நடப்படும் மரங்களில் 60-65% மரங்கள் வளரவேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், உத்தர்காண்டில் 2017-22 ஆம் ஆண்டில் நடப்பட்ட மரங்களில் 33% மட்டுமே வளர்ந்துள்ளது.

    CAG அறிக்கையை எடுத்துக்காட்டில் அரசாங்கத்தின் நிதியை பாஜக அரசு வீணடிக்க காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தரகண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர்.
    • விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியை சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (வயது48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.

    பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார். பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது அவர்களது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் செங்குத்தான பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.

    இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஜீப் விழுந்து கிடந்த பகுதிக்கு சென்றனர். ஜீப்புக்குள் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் மீட்டு பள்ளத்தாக்கில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்பு ஆம்புலன்சு மூலமாக 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், 3 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் வீராங்கனையின் சகோதரி உள்பட 3 பேர் பலியான சம்பவம் இடுக்கியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி மற்றும் அலிகார் சிறைக்கு கொண்டு வந்தனர்.
    • திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநில சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி மற்றும் அலிகார் சிறைக்கு கொண்டு வந்தனர். உ.பி. முழுவதும் உள்ள 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் நீராடினர்.

    இதுதொடர்பாக அதிகாரிகளின் கூறுகையில், திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. கைதிகள் புனித நீராடவும், ஜெயிலிலேயே பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினார்.

    லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறுகையில், சுமார் 90 ஆயிரம் கைதிகளுக்கு புனித நீராடினர். கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

    மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்ரா கூறும்போது, சிறையில் 757 கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைக் கொண்டு புனித நீராடினர். அனைவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் புனித நீராடியதாக அவர் கூறினார்.

    • கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை அருகே தொட்டி குண்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1995-ம் ஆண்டு முதல் இரட்டை குழந்தைகள் பிறந்து வருகின்றன.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சீனிவாஸ் என்பவர் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்.

    கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியரின் மனைவிக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தது.

    தற்போது ரங்கம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொட்டி குண்டாவை சேர்ந்த 60 இரட்டை குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

    • பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.
    • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

    இந்நிலையில், கும்பமேளாவில் டிஜிட்டல் நீராட ஒரு கும்பல் ரூ.1100 கட்டணம் வசூலித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    கும்பமேளாவில் நீராட நேரில் வரமுடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை வாட்சப்பில் அனுப்பினால் அப்புகைப்படங்களை திரிவேணி சங்கமம் நீரில் மூழ்கி எடுப்போம் என்று ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனை 'மூட நம்பிக்கை' என்றும் மோசடி என்றும் விமர்சித்து வருகின்றனர்.

    • இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
    • சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராகிணி சோங்கரின் கேள்விக்கு பதில் அளித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

    இந்தியா ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.

    2027-ம் ஆண்டில் அதைவிட உயர்ந்த நிலைக்கு இந்தியா செல்லும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக 140 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த (இந்திய மதிப்பில் சுமார் ரூ.86 லட்சம் கோடி) கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக 10 துறைகளில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

    தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வால் மாநிலத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.
    • சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியின் சிறப்புப் பிரிவு போலீசார் வடகிழக்கு டெல்லியில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் பிரபல தாதா ஹாசிம் பாபாவின் மனைவி சோயா கானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைபற்றப்பட்டது.

    போலீசார் விசாரணையில் சோயா கான் பற்றி பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    டெல்லியை கலக்கி வந்தவர் பிரபல தாதாவான ஹாசிம் பாபா, இவருடைய 3-வது மனைவி சோயா கான். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஹாசிம் பாபாவை திருமணம் செய்து கொண்டார்.

    கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தல் வழக்குகள் தொடர்பாக ஹாசிம் பாபா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து கணவரின் இடத்துக்கு சோயா கான் வந்தார். கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.

    பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட போதிலும் எதிலும் தனது பெயர் வராமல் பார்த்து கொண்டதால், போலீசார் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.

    இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதனால் பல ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் அவர் டிமிக்கி கொடுத்து வந்தார். தற்போது ஆதாரத்துடன் போலீஸ் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். சோயா கான் தலைமையிலான கும்பல், போதைப்பொருள் கடத்தலை முக்கிய தொழிலாக செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி திகார் சிறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக அவர் தனது கணவருக்கு பகிர்ந்து வந்துள்ளார்.

    பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, சோயா கானின் தாயார் கடந்த 2024-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு பிரதமர் மோடி உதவி செய்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    தலைநகர் டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுடன் சேர்ந்து, சரத் பவார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு மோடி கொடுப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளித்திருக்கிறது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

    சரத் பவாரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளது, இந்தியா கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    • உற்சாகமான திருமண கொண்டாட்டம் சட்டென்று அமைதியானது.
    • வீடியோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றது.

    திருமணம் என்றாலே மகிழ்ச்சி, உற்சாக கொண்டாட்டமாக இருக்கும். அப்போது மணமக்கள், அவர்களின் தோழிகள், நண்பர்கள் உற்சாகமாக நடனமாடுவது, கேலியாக பேசி சிரிப்பது வாடிக்கையே.

    ஆனால், ஒரு திருமண விழாவில், உற்சாக மிகுதியில் ஆடிய நடனம் களேபரத்தில் முடிந்தது. ஆம், தங்கையுடன் மற்றொரு வாலிபர் ஜோடி சேர்ந்து ஆடுவது ஒரு அண்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விபரீத விளைவை ஏற்படுத்தியது.

    அந்த சகோதரர் திடீரென மணமேடைக்கு வந்து, தனது தங்கையை கோபத்துடன் வெளியேறச் சொல்கிறார். அடுத்த கணமே தங்கையுடன் ஜோடியாக ஆட்டம்போட்ட வாலிபரின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். இதனால் உற்சாகமான திருமண கொண்டாட்டம் சட்டென்று அமைதியானது. வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாலிபர், நடனமாடியவரை தாக்கும் வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. வலைத்தளவாசிகள் அறைந்த வாலிபரை ஆதரித்தும், கண்டித்தும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். வீடியோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றது.



    ×