என் மலர்
பாலஸ்தீனம்
- ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்தால், அது சரணடைவதாகும்.
- ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவை இரண்டு பகுதிகளாக பிரித்து, வடக்கு காசாவில் தரைவழி தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வரும்நிலையில், போர்நிறுத்தம் அவசியம் என உலகளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டது.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்கும் வகையிலும், காசாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையிலும் போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் இதை ஏற்கவில்லை.
நெருக்கடி அதிகமாக நேதன்யாகுவிடம் ஜோ பைடன் போனில் பேசினார். அப்போது நேதன்யாகு தினசரி நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று கூறியதாவது:-
நாங்கள் காசாவில் அரசு அமைக்க முற்படவில்லை. மீண்டும் ஆக்கிரமிக்க முற்படவில்லை. யாரையும் இடமாற்றம் செய்ய முற்படவில்லை. காசாவில் பொதுமக்கள் அரசாங்கம் ஒன்றை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அங்கும், எங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முற்படுவோம்.
இஸ்ரேல் ராணுவம் மிகவும் சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் என்பது சரண் அடைவது போன்ற அர்த்தமாகும். ராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு காலவரையறை இல்லை. எவ்வளவு நாட்கள் நீண்டாலும், அதை நாங்கள் செய்து முடிப்போம்.
காசாவுக்குள் மீண்டும் நுழைந்து கொலையாளிகளை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது போன்றதை தடுக்க முடியும்.
- வடக்கு காசாவில் மருத்துவமனை, ஐ.நா. முகாம்கள்தான் பாதுகாப்பு என பாலஸ்தீனர்கள் அங்கு சென்று தங்கியுள்ளனர்
- மக்கள் வெளியேறுவதற்கான தினந்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் என அமெரிக்கா தகவல்.
காசாவை இரண்டாக பிரித்து, வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்படியாவது உலக நாடுகள் போர் நிறுத்தத்தை கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசாவிலேயே தங்கியுள்ளனர். ஆனால், தெற்கு காசாவிற்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என உணர்ந்த பெரும்பாலான பாலஸ்தீன மக்கள், தெற்கு காசாவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நடைபயணமாக தெற்கு காசாவை சென்றடைந்து வருகிறார்கள்.
வடக்கு காசாவில் உள்ளவர்கள் இனிமேல் வீடுகளில் தங்கியிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கருதி மருத்துவமனைகள், ஐ.நா. அமைத்துள்ள முகாம்களுக்கு இடம்பெற முடிவு செய்துள்ளனர். அதன்படி காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆனால் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக, அங்கிருந்து தெற்கு காசாவிற்கு சென்றுள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும், மருத்துவமனை அறைகள், அறுவை சிகிச்சை செய்யும் ஆபரேசன் தியேட்டர்களில் கூட மக்கள் தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் தூங்குகிறார்கள்.
இவர்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவிலான உணவே கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த மூன்று பேரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இஸ்ரேல் தினமும் நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொண்டதாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால் பாலஸ்தீன மக்கள் அஞ்சியபடியே வாழ்ந்து வரும் அவலை நிலை நீடித்து வருகிறது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்யவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- காசாவில் நடைபெற்று வரும் சண்டை, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம்.
- காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் காசாவை வடக்கு, தெற்கு பகுதிகள் எனப் பிரித்தது. பின்னர் வடக்கு காசாவில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து முன்னோக்கி சென்று வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்கள் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக அறிவித்தது.
நேற்று காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நெருக்கிப்பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சண்டை நடைபெற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவை அடையும் வகையில் ஓட்டம் பிடித்துள்ளனர். பல மைல் தூரம் நடந்து சென்று தெற்கு காசாவை அடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர்களின் டாங்கிகள், வாகனங்களை அழித்தோம் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜபாலியா நிவாரண முகாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- ஞாயிற்றுக்கிழமை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் காசாவை இரண்டாக பிரித்தது இஸ்ரேல்.
- தரைவழி தாக்குதலை முழுமையாக செயல்படுத்த தயாராகி வருகிறது இஸ்ரேல்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.
இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர்
தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
- அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
- காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதி மீது இஸ்ரே லின் போர் தாக்குதல் இன்று 30-வது நாளாக நீடித்து வருகிறது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் காசா மீது வான், கடல், தரை என மும்முனை தாக்குதல் நடத்துகிறது. இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குழந்தைகள், பெண்கள் உள்பட 9,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் காசாவில் உள்ள மிகப்பெரிய ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். ஹமாஸ் அமைப்பு முக்கிய தளபதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. மத்திய காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டதில் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே அல்-மகாசி அகதிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும் பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 2 குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தது.
இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனிய மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள் என்று தெரிவித்துள்ளது.
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசாவுக்குள் புகுந்துள்ள இஸ்ரேல் தரைப்படை, காசா சிட்டியை சுற்றிவளைத்து முன்னேறி வருகிறது. அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
இருதரப்பினர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வடக்கு காசாவில் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல் போர் விதியை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அங்கு ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பலியானவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேற 4 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சலா அல்-தீன் தெருவை காசாவில் உள்ள மக்கள் வெளியேற்றுவதற்கான பாதையாக பயன்படுத்தலாம். அங்கு 4 மணி நேரம் தாக்குதல் நடத்தப்படாது பொதுமக்கள் தெற்கு நோக்கிச் செல்லுங்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- தரைவழி தாக்குதலை விரிவு படுத்திய நிலையில், காசாவை சுற்றி வளைத்துள்ளது இஸ்ரேல்
- போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதிரடி
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக அன்றைய தினத்தில் இருந்து, தற்போது வரை இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்குதலை தொடர்ந்து, கடந்து சில நாட்களாக தரைவழி தாக்குதலை விரிவு படுத்தி வந்தது.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காசா நகரை சுற்றி வளைத்து விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் (கொலை செய்யப்பட்டு உடல்கள் கருப்பு பைகளில் வைக்கப்பட்டு) சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எச்சரித்துள்ளது.
காசா சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் குறித்த கருத்து மேசையில் இல்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காசா பகுதியில் சண்டை உச்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது.
அகதிகள் முகாம், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக பெரும்பாலான அமைப்புகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேல், தாக்குதலை தொய்வின்றி நடத்தி வருகிறது.
- காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- இந்தத் தாக்குதலில் 195 பேர் பலியானதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2-வது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
- காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
- இருதரப்பிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காசா:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம். அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடத்துவோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், பாதிப்படைந்தோர் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை
- வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. சில ஏவுகணைகள் தவறுதலாக குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து, வெடிகுண்டு தாக்குதலால் தீப்பிடித்து எரியும் கட்டடங்கள், முகாம் மீது தாக்குதல் போன்றவற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கடந்த 25 நாட்களாக தொய்வின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால பலத்த காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படடது. இந்த நிலையில் நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது.
இரட்டை குடியுரிமை , வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இருந்த போதிலும், போருக்கு மத்தியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள்.
- இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
- எகிப்தின் ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
காசா:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.
இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி எகிப்தின் ராபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் சம்மதித்தது.
இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகள் காசாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காசாவில் இருந்து எகிப்து நாட்டின் ராபா எல்லை வழியாக வெளியேறுவதற்காக வெளிநாட்டினர் 12 பேர் காத்திருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் தொடங்கிய 3 வார காலத்துக்குப் பிறகு காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் வான்தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்
- கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்க முடியாத பரிதாபம்
அக்டோபர் 7-ந்தேதி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை, தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா சீர்குலைந்துள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலை தாக்குப்பிடிக்காமல் கட்டங்கள் இடிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதுவரை காசாவில் 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. நடத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். ஐ.நா. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தற்காலிக முகாமாக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் காசா மீதான போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை விமர்சித்த இஸ்ரேல், போரின் 2-ம் கட்ட நிலை தொடங்கியுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
- ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.
We are devastated to share that the death of 23 year old German-Israeli Shani Luk was confirmed.
— Israel ישראל ?? (@Israel) October 30, 2023
Shani who was kidnapped from a music festival and tortured and paraded around Gaza by Hamas terrorists, experienced unfathomable horrors.
Our hearts are broken ?.
May her memory… pic.twitter.com/cs0ii4XH7e
இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.