search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளைச்சாவு"

    • கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.
    • டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நயினார் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ந்தேதி திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அவர் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் மந்திரமூர்த்தி நயினார் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.

    இதையடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நயினார் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் மகன் 8ம் வகுப்பும், கிஷோர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு நோய் ஏற்பட்டு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

    அங்கு சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
    • சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).

    இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.

    அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பும் போது மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் புஷ்பலதா காயமடைந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

    அதன் அடிப்படையில் 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் , மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் முருகேசன் மற்றும் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர். அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    • சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்தவர் தனபாண்டியன். இவரது மனைவி சுடர்கொடி (வயது 35) . இவர்களுக்கு சின்னத்தங்கம், அட்சயநிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சின்ன த்தங்கம் பிளஸ்-2 முடித்து முதலாம் ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார். அட்சய திதி 11-ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு செல்ல உள்ளார். தனபாண்டியன், சுடர்கொடி தம்பதியினர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வந்தனர்.

    கடந்த 21-ந் தேதி இரவு சுடர்கொடி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீரபாண்டி அருகே வந்தபோது, கண்ணில் பூச்சி அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுடர்கொடி தனது மகள்களுடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மகள்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சுடர் கொடியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுடர் கொடியின் உறவினர்கள் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


    இதையடுத்து சுடர் கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் உறவினர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுடர்க்கொடி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதால் சுடர்கொடி இறந்தாலும் மற்றவர்கள் உடலில் அவர் வாழலாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் மகள்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு சுடர்கொடி உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளை பாது காப்பாக அகற்றினர். பின்னர் ஐஸ் பாக்சில் வைத்து, மருத்துவர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்து வமனைகளுக்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

    திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சுடர்கொடியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    • சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டை பால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்தோஷ்குமார் (22) கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மருத்துவக் குழுவினர் மூளைச்சாவடைந்த சந்தோஷ்குமார் உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் 2, சிறுகுடல், கார்னியா ஆகியவை எடுக்கப்பட்டது. இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கார்னியா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • நவம்பர் 25லிருந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்ள தொடங்கினார்
    • சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது

    இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் (East Midlands) பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் (Lincolnshire) பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16-வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் (Layla Khan).

    சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.

    நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.

    டிசம்பர் 5 காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.

    இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி (Grimsby) பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா தாக்கபப்ட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

    டிசம்பர் 13 அன்று, ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.

    குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது.

    லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    • ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முது நிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும்,

    ஒரு மகனும் உண்டு. செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும், காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

    இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டது.

    செல்வின் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் "உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூறினர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

    அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரானாக் மாவட்டம் சரல்வி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம்-கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் ல்! உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உட லுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    • தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
    • மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.

    மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    • சிகிச்சையின் போது சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்து விட்டார்.
    • சண்முகத்துரையின் உடலுக்கு சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகத்துரை (வயது 52). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்து விட்டார். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரையின் உடலுக்கு நேற்று மாலை, அவரது சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
    • கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் கிராமம்- தென்காசி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சண்முக துரை(வயது 52). இவர் சம்ப வத்தன்று விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து இன்று காலை அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி விபத்தில் உயிரிழந்த சண்முகதுரை யின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவ மனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் நெல்லை அரசு மருத்துக்கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சண்முகத்துரையின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    ×