என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi amavasai"

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவபெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தொலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை என இரண்டும் இணைந்து வருகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருவதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பவானி சரக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடை யின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதே போல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்களள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் வந்து தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    • விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
    • சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது.

    தை முதல் ஆனி மாதம் வரை உள்ள பொழுது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பகல் காலம் முடிவடைந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த காலத்தை தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைப்பார்கள். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் முதல் நாளிலும், 31-ம் நாளிலும் 2 அமாவாசை வருகிறது. இது போன்ற விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.

    வழக்கமாக எல்லா அமாவாசை நாட்களும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஆடி மாத பிறப்பின் முதல் நாளில் அமாவாசை வருவதால் இன்று பல்வேறு இடங்களில் புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்புனித நீராடி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சுருளி அருவியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் இந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அதில் ஆனந்தமாக நீராடி அதன் பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் இங்குள்ள விஸ்வநாதர், பூதநாராயணன் கோவிலிலும் வழிபாடு செய்தனர். இது மட்டுமின்றி அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட சுருளி அருவி இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.

    இங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம்.
    • தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

    • கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
    • பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.

    ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.

    கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

    இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.
    • ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் அமாவாசை தினங்க ளில் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.

    இந்த நிலையில் ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் இரவு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கோவில் அருகே உள்ள குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் மூலவர் வீரராகவரை வழிப்பட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காக்களூர் ஏரிக்கரை யிலும் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்து இருந்தனர்.

    கோவிலுக்குள் செல்ல அதிக அளவு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பெரும்பாலானவர் கோவில் நுழைவு வாயிலில் அருகேயே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்று வழிபட்டு சென்றனர்.

    இன்று காலை பக்தர்களின் வருகை திடீரென அதிகரித்ததால் ஜெ.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று
    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புனித தீர்த்தங்களில் நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வருகிறது.

    இப்படிப்பட்ட சமயங்களில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும். என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

    இதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 2-வது அமாவாசையான வருகிற 16-ம் தேதி பூஜை நடக்கிறது. பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக முக்கடல் சங்கத்தில் உள்ள படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் பணியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • புனித நீராடிய பக்தர்கள் பாபநாசநாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
    • இந்த மாதம் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

    சிங்கை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நெல்லை மாவட்டத்திலும் இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அவர்கள் வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்து விட்டு புனித நீராடுவார்கள்.

    இந்த ஆண்டும் இன்று ஆடி அமாவாசையையொட்டி நெல்லையில் பாபநாசம் படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். எள்ளும், நீரும் இறைத்து வழிபட்டு புனித நீராடி கோவிலில் சுவாமி பாபநாச நாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். சிலர் குடும்பத்தினருடன் கார்களில் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்தை சரி செய்தனர். கார்கள் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியில் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் பழைய கோவில் ரோட்டில் நிறுத்தி பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட னர். அம்பை காசிநாத சுவாமி கோவில் படித்துறை, ஆஞ்சநேயர் கோவில் படித்துறை, ரெயில்வே பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரை, சின்ன சங்கரன்கோவில் ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்தே திரளானவர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    நெல்லை டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் ஒரு சிலரே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் நாளான இன்றும், கடைசி நாளான வருகிற ஆகஸ்டு 17-ந்தேதி என இந்த மாதத்தில் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

    மேலும் இந்த மாதத்தில் 2-வது வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் நல்லது என பெரும்பாலான ஜோதிடர்கள் தெரிவித்து இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஒரு சிலரே தர்ப்பணம் கொடுத்ததை காணமுடிந்தது.

    • பவானி ஆற்றில் குளித்து முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெற்றனர்.
    • அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

     மேட்டுப்பாளையம்,

    ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆடி மாத அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம்.

    மேலும்,ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    முன்னதாக பவானி ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு படையிலிட்டும், தர்ப்பணம் செய்தும் வழிபட்டு முன்னோர்களின் ஆசியினை பெற்றுச்சென்றனர்.

    கோவை, திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு ச்சென்றனர்.மேலும்,ஆடி அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், படையலிட்டும் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பதால் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து பொதுமக்கள் முன்னோர்களின் ஆசியினை பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நந்தவனத்தின் செயலாளர் சிபிஎஸ் பொன்னுச்சாமி செய்திருந்தார்.

    இதேபோல ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.
    • ஆகஸ்டு 16-ந்தேதி அப்பர் கயிலை காட்சி நடைபெறும்.

    அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆறு, புஷ்யமண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஐயாறப்பர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.

    இந்த ஆண்டு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அடுத்தமாதம் 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசை அன்று ஐயாறப்பர் கோவிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • யாகத்திற்கு 108 கிலோ மிளகாய் பயன்படுத்தப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ பெரிய கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து கோவில் முன்பாக பெரிய கருப்புசாமி வாகனமான குதிரை பசு கன்றுகளுக்கு பூஜை செய்தனர் . உற்சவமூர்த்தி, கருப்பசாமி வீச்சருவா உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பூஜைகள் செய்து தீ மூட்டி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு கோவில் பூசாரி சாமி ஆடி 11 படிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் படியேறி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற தேங்காய் உடைத்து ஏராளமான பக்தர்கள் கருப்பசாமிக்கு பொங்கலிட்டு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு பக்தர்கள் ஆடு, கோழி, மது, சுருட்டு, மற்றும் மிளகாய் உள்ளிட்டவைகளை நேர்த்திகடன்களாக செலுத்தி வழிபட்டனர்.

    • அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
    • மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    கடல் கூடும் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.

    கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்சம் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பா காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.

    பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள் .

    திருமண தடை நீங்கும்

    பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

    முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில்தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே. காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

    • சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும்.
    • தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.

    அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.

    சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    ×