என் மலர்
நீங்கள் தேடியது "Aadi Festival"
- தினசரி இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.
- ஆடிப்பூர விழா 22-ந் தேதி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பெரியநாயகி அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு, விழாக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- 17-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
- 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஆடிப்பூரத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் உள்ள மட்டுவார் குழலம்மை (அம்பாள்) சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை செய்யப்பட்டு கொடி மரத்தின் முன்பு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.
இரவில் அம்பாள் கேடயம் வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் முறையே கமல வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று மலைக்கோட்டை உட்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது.
21-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 22-ந்தேதி காலை தீர்த்தவாரியும், இரவில் பூரம் தொழுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.
- தேரோட்டம் 21-ந்தேதி நடக்கிறது.
- 22-ந்தேதி கொடி இறக்கம் நடக்கிறது.
திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா 11 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டு விழா தர்ம சம்வர்த்தினி சன்னதியில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கொடி கம்பத்துக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினந்தோறும் சாமி புறப்பாடு நடைபெறும், மாலையில் அம்மன் கோவில் மண்டபத்தில் சொற்பொழிவும், கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 22-ந் தேதி(சனிக்கிழமை) கொடி இறக்கம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் உத்தரவு பேரில் திருவையாறு ஐயாறப்பர் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பிரம்மோற்சவ விழா 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது
- 22-ந்தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
வேலூர் கோட்டை வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் 4-வது மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந் தேதியும், அதைத்தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்றது. இந்த நிலையில் 25-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி, 10.30 மணிக்கு அம்பாள் அபிஷேகம், வளையல் சாற்றுதல், அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்துள்ளனர்.
- 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஆலய குருக்கள் வைரமணிசிவம், ரவி, சுப்பிரமணிய குருக்கள், சந்திரசேகர் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி தேரோட்டமும், 24-ந் தேதி சுவாமி-அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், கிராம நாட்டார்கள் செய்து வருகின்றனர்.
- 19-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
- 24-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.
இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற பூஜைகளை உதயகுமார், சிவமணி உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.
நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்பாள் தங்க பல்லக்கில் வீதி உலாவும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது. 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 21-ந் தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவின் 11-ம் திருநாளான 23-ந் தேதி தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக ராமநாதசாமி-பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.
- 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 22-ந் தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும், இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறி இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.
இக்கோவில் எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அருளும் தலமாகும். 59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான்கள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- 22-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 23-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு ஆடி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினந்தோறும் காலையில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு ஆண்டாளுடன் பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
19-ந் தேதி ஆண்டாளுடன் தங்க பல்லக்கு பாவை மற்றும் சூர்ணாபிஷேகம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆண்டாளுடன் குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்னவாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந் தேதி தேரில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்கதோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் மற்றும் ஆசிர்வாதம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 23-ந்தேதி ஆடிப்பூர திருக்கல்யாணம் நடக்கிறது
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி விருத்தாம்பிகை அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்திகளான விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விழா கொடியேற்றப்பட்டது.
11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. மேலும் 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தேரோட்டம், 22-ந் தேதி(சனிக்கிழமை) ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு, ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
- இரவு அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது.
கடலூர் புதுப்பாளையம் லோகாம்பாள் தெருவில் லோகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 104-ம் ஆண்டு ஆடி மாத திருவிழா வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதையடுத்து அன்று காலை 8 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வருதல் வீதி வலம் வருதல், தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
மதியம்12 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், 8 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பிறகு இரவு அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் 22-ந்தேதி வரை நடக்கிறது.
- ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.
அதன்பிறகு உற்சவர் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து ஜி.எஸ்.மாடவீதி, காந்தி வீதி வழியாக மங்கள வாத்தியங்கள் இசைக்க கங்குந்திரா மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து சிறப்புப்பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது. அங்கிருந்து கோவிலுக்கு ஆண்டாள் கொண்டு செல்லப்பட்டாா்.
- இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
- இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை உச்சியில் 3 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக வனத்துறை சார்பில் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை வருகிற 17-ந்தேதியும், 2-வது அமாவாசை ஆகஸ்ட் 16-ந்தேதியும் வருகிறது.
இந்த நிலையில் ஆடி அமாவாசை மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
சனிப்பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுவதாலும், அதுமட்டுமின்றி ஆடி அமாவாசையை முன்னிட்டும் இன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை விருதுநகர்-மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்திருந்தன.
மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மலை அடிவாரம் மற்றும் மலையேறும் பாதைகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்திலும், மலை மேல் உள்ள கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஆடி அமாவாசைக்கு 2 நாட்களே இருப்பதால் இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.