search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anmigam"

    • சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
    • நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.

    மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.

    மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.

    ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

    பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.

    இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.

    இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

    • மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
    • அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
    • கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.

    சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.

    அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.


    உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.

    எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.

    • தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.

    காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.

    தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


    தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.
    • 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடை முறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பைக்கு வந்து செல்ல ஆன்லைன் மூலமாகவே பஸ் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.

    கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தலைமையில் நடந்த முன்னேற்காடு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து மந்திரி கணேஷ்குமார் கூறி யிருப்பதாவது:-

    சபரிமலைக்கு யாத்திரை வரும் 40 பேர் கொண்ட குழுக்கள் 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே 220 பஸ்கள் அரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.


    இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.

    பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

    மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.

    7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

    9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.



    விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
    • சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரம மின்றி சபரி மலைக்கு வந்து செல்வதற்கும், அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டு மின்றி, முன்பதிவு செய்யா மல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற் கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.

    இந்தநிலையில் சபரி மலை ஐயப்பன் கோவி லில் பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்கள் அகற்றப்பட உள்ளன. மழை பெய்யும் போது படி பூஜைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், பதினெட்டாம் படியை பாதுகாக்கவும் பதினெட்டாம் படி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட கல் தூண்கள் அமைக்கப்பட்டன.

    ஆனால் அந்த தூண்கள் பதினெட்டாம் படி ஏறக் கூடிய பக்தர்கள் மற்றும் படிகளில் பக்தர்கள் ஏறிச்செல்ல உதவுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாருக்கும் மிகவும் இடையூறாக இருந்துவந்தது.

    இதன் காரணமாக பதினெட்டாம் படி பகுதியில் தேவையில்லாத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    இதையடுத்து ஆய்வு மேற்கொண்டதில், கல்தூண்கள் பக்தர்கள் செல்வதற்கு தடையாக இருப்பதும், நெரிசல் ஏற்படுவதும் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கல்தூண்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்களை கட்டிய கட்டுமான கலைஞர்கள் சன்னிதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். கல் தூண்களை இடித்து அகற்ற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கல் தூண்களை இடித்து அகற்றும் பணி உடனடியாக தொடங்கப் பட்டன.

    மண்டல பூஜைக்கு முன்னதாகவே கல்தூண்கள் முழுவதுமாக இடித்து அகற்றப்பட உள்ளது. இதனால் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கும், பக்தர்கள் படியேறுவதற்கு உதவும் போலீசார் தங்களின் பணியை சரியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

    • 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் நவக்கிரக கோயில் உள்ளது.
    • நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்கிற தலத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இந்த கோயிலில் வழிபட்டுள்ளதால் இக்கோயிலின் தொன்மையை குறிப்பிட்டுச் சொல்ல இயலாததாக இருக்கிறது.

    ஆனால், குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவக்கிரக கோயில் உள்ளது என்றும், இத்தனை ஆண்டு காலத்திற்கு பக்தர்கள் இங்கு வந்து தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் வரலாறு நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    புராண காலத்தில் இந்த ஊர் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலின் இறைவனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். இந்த கோயிலின் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கிறது.

    சீதாதேவி ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவரை மீட்க, ராமபிரான் தென் திசை வருகிறார். சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்வது வழக்கம்.

    அதன்படி, ராமபிரான் உப்பூரில் உள்ள விநாயகரைப் பூஜித்தார். பிறகு, தேவிப்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து, மணலை ஒன்பது பிடி எடுத்துப் பிரதிஷ்டை செய்தார். அந்த சமயத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே ராமபிரான் தன் திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதியானது.

    அந்த ஒன்பது கற்களாக "நவபாஷாணம்" என்ற பெயரில் நவகிரகங்களாக வழிபடப்படுகிறது. பிற ஸ்தலங்களில் நவகிரகங்கள் காட்சி தருகிறார்கள். பாஷாணம் என்றால் கல் என்று பொருள்படும். இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நவகிரகங்கள் உள்ள இத்தலத்தில் நீராடினால், மிகவும் புண்ணியம் சேரும்.

    நமது பூர்வ ஜென்ம பாவங்கள் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும் நவதானியங்கள் வைத்து வழிபட்டால், சகல நற்பலன்களும் கிடைக்கும்.

    ராமபிரானே பிரதிஷ்டை செய்த நவகிரகங்களாக இருப்பதால், மிகவும் சிறப்பான ஸ்தலம். இங்கு தான் ராமபிரானுக்குச் சனி தோசம் நீங்கியது. பக்தர்களே நேரடியாக நவகிரகங்களுக்கு அபிசேகம் செய்யலாம்.

    இந்த தலத்தைத் தரிசித்தாலே பூர்வ ஜென்ம வினை, பாவங்கள் நீங்கும் நவகிரகங்களில் எந்த கிரகங்களால் தோசம் இருந்தாலும், அவை நீங்கி விடும். 

    • நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது.

    பின்னர் சொந்த ஊருக்கு பக்தர்கள் செல்வதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.

    விழுப்புரம், சென்னை செல்லும் ரெயிலில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். ரெயிலில் இடம் கிடைக்காததால் பக்தர்கள், பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதேபோல தற்காலிக பஸ் நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லாததாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மதுரை, திருச்சி பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போதிய பஸ் வசதி இல்லாததால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தோம். இதனால் நாங்கள் களைப்பாக உள்ளோம்.

    போதிய பஸ் இல்லாமல் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் இது போன்று பக்தர்களை காத்திருக்க வைக்காமல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை உள்ளது.
    • முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை மீது அமைந்துள்ள சொக்கநாயகி உடனாய வேதகிரீஸ்வரர் கோவிலும், மலை அடிவாரத்தில் தாழக்கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி உடனாய பக்தவத்சலேஸ்சவரர் கோவிலும் இருக்கின்றன.

    திருக்கழுக்குன்றத்திற்கு, கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சிதீர்த்தம் என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.

    வேதமலையின் மீது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலம் பிரம்மன், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது. மேலும் கழுகுகள் பூஜித்த பெருமையும் கொண்டது.

    நான்கு வேதங்களும் மலையாக அமைந்ததால், இந்த மலைக்கு 'வேதமலை', 'வேதகிரி' என்று பெயர். வேதகிரியின் மீது எழுந்தருளி அருள்பாலிப்பதால் இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.

    வேதகிரீஸ்வரரை வணங்கி அருள்பெற 567 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஏறும் போது வலது புறத்தில் கம்பாநதி சன்னிதி உள்ளது. மலைக் கோவில் கருவறையில் இறைவன் சுயம்புத் திருமேனியாக வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.

    பிரகாரத்தில் நர்த்தன விநாயகரும், சொக்கநாயகி அம்பாளும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகார கருவறை கோஷ்டங்களில் புடைப்புச் சிற்பங்களாக அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    வழக்கமாக சிவாலயங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் பலிபீடமும், கொடிமரமும் மட்டுமே உள்ளன.


    பட்சி தீர்த்தம்

    கிரேதா யுகத்தில் சண்டன் - பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி - சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் - மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி வேதகிரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார்கள்.

    கலியுகத்தில் பூஷா - விருத்தா ஆகிய முனிவர்கள், இத்தல இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்கள் இருவரும் இத்தல இறைவனிடம் சாயுட்சய வரம் வேண்டும் என்று கேட்டதால், இறைவனின் அருளாசிப்படி கழுகாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு காலம் பகல் வேளையில் வேதமலை வந்து இறைவனை வழிபட்டு அமுதுண்டு வந்தனர். இரண்டு கழுகுகள் வலம் வந்த காரணத்தால் இந்த ஆலயம் 'பட்சி தீர்த்தம்' என்ற பெயர் பெற்றது.


    சங்கு தீர்த்தம்

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய முற்பட்டார். அப்போது 'ஓம்' என்ற ஒலியுடன் சங்கு ஒன்று தீர்த்தத்தில் தோன்றியது. அந்த சங்கைக் கொண்டு சிவபெருமானை, முனிவர் பூஜித்தார்.

    அன்று முதல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இதனால் இத்தீர்த்தம் 'சங்கு தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத்தீர்த்தத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.


    வேதமலையின் சிறப்பு

    வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள வேதமலையானது, சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மலையை வலம் வருகிறார்கள். வேதகிரீஸ்வரரை தரிசிக்க வேதமலையில் ஏறும்போது மலைப்பாதையில் இடை இடையே ஓய்வெடுத்துச் செல்ல சிறு மண்டபங்கள் உள்ளன.

    இந்த திருக்கோவிலில் இறைவனை தரிசிக்க ஏறிச் செல்ல ஒரு மலைப்பாதையும், தரிசனத்தை முடித்துக் கொண்டு இறங்கி வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியாகவே செல்லும்.

    • அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
    • பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.

    பெரியபாளையம்:

    பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.

    இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

    வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×