என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barge"

    • துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
    • அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

    அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    பேராவூரணி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.

    மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

    கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.

    விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
    • மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தடை மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ளன. நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். ஆழ்கடலுக்குள் மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    • கலெக்டர் விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.
    • நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தின் முதுகெலும்பாக மீன்பிடி தொழில் உள்ளது. இந்த மாவட்ட புதிய கலெக்டராக சமீபத்தில் ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்றார்.

    மீன்பிடி தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் கலெக்டருக்கு இருந்து வந்தது.

    இதனையடுத்து மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்து கொள்ள மீனவர்களுடன் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்.

    அதன்படி, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

    நடுக்கடலில் வைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் மீனவர்களை போன்று கடலில் வலைவீசி மீன் பிடித்தார்.

    தொடர்ந்து, அவர் வீசிய வலையில் சிக்கிய மீன்களின் ரகங்கள் என்ன என்பது குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

    அவ்வப்போது விசைப்படகையும் ஓட்டி மகிழ்ந்தார். மேலும், நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகை மாவட்ட கலெக்டர் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதி நவீன தொலைத்தொடர்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது காசிமேடு மீனவர்களின் 750 படகுகளில் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும். இது ஜிசாட்-6 செயற்கை கோள் வழியாக இயங்கும்.

    இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பட்டன் உள்ளது. இதை மீனவர்கள் அவசர காலத்தில் அழுத்தினால் அதில் இருந்து தகவல் மற்றும் படகு இருக்கக்கூடிய இடத்தை தகவலாக மீன்வளத்துறை, படகின் உரிமையாளர், மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவலாக சென்று அடையும். இதே போல் கடலில் மற்றொரு படகு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அதையும் மற்றொரு படகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டறிக்கூடிய தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆழ் கடலில் உள்ள மீனவர்களின் படகுகளை சுலபமாக கண்டறிந்து மீட்க முடியும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இந்த கருவி இயங்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கருவியை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் விசைப் படகுகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி உதவி வழங்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பலில் கடந்த 1-ந்தேதி சார்லஸ் மற்றும் 6 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
    • எதிர்பாராதவிதமாக அலை சீற்றத்தின் காரணமாக அந்த படகு அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கி தரை தட்டியது.

    திசையன்விளை:

    தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் பாஸ்கர் சார்லஸ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக இழுவை வலை விசைப்படகு உள்ளது. சுமார் ரூ.25 லட்சம் மதிப்பு கொண்ட இந்த நவீன வகை இழுவை படகானது கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் விரித்திருக்கும் வலைகளை சேதப்படுத்தாமல் கடந்து செல்லும் திறனுடையது. இந்த கப்பலில் கடந்த 1-ந்தேதி சார்லஸ் மற்றும் 6 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு அவர்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது உவரி தூண்டில் வளைவு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அலை சீற்றத்தின் காரணமாக அந்த படகு அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கி தரை தட்டியது. இதனால் மேற்கொ ண்டு அந்த படகு நகர முடியாமல் போய்விட்டது.

    இதனால் படகின் டிரைவர் பிச்சையா என்பவர் தூத்துக்குடியில் உள்ள சக மீனவர்களுக்கு வாக்கி-டாக்கியில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தருவை குளத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது விசைப்படகின் டிரைவர் சேசு தனது விசைப்படகில் சம்பவ இடத்திற்கு 6 மீனவர்களுடன் விரைந்துள்ளார். அவர்கள் இன்று காலை அங்கு சென்றனர்.

    பாறை இடுக்கில் சிக்கிய படகில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை மற்றொரு இழுவை படகுக்கு மாற்றிவிட்டு சிக்கிய படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உவரி கடலோர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். ஆனாலும் தூண்டில் வளைவிற்குள் தரைதட்டி நிற்கும் படகை மீட்க முடியவில்லை. கடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இன்று இரவுக்குள் படகை மீட்டுவிடலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
    • சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்தவர் காலின்ஸ். ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.

    அடுத்தடுத்த புயல் சின்னம் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை எதிரொலியாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலின்ஸ் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகினை தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களாக படகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இன்று முதல் கடலுக்கு செல்ல காலின்ஸ் திட்டமிட்டு இருந்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அவர் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு திடீரென படகில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்தது. அடுத்த ஒருசில விநாடிகளில் தீ பிடித்துள்ளது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதைப் பார்த்த மீன்பிடி தொழிலுக்கு தயாராகிக்கொண்டிருந்த சக மீனவர்கள் காலின்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பதறியடித்துக்கொண்டு அவர் கட லுக்கு ஓடி வந்தார். மேலும் மற்ற மீனவர்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். இருந்தபோதிலும் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகில் ஏற்பட்ட விபத்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது எதிர்பாரத விதமாக தீ பிடித்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஒரு படகு தீ விபத்துக்குள்ளானது சக படகு உரிமையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. படகில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    தீ விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும், விசைப்படகுகளை இலங்கைக்கு கொண்டு நாட்டுடமை ஆக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருசில சமயங்களில் மீனவர்களை விரட்டி அடிப்பதும், அவர்கள் காயங்களுடன் கரை திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியவர்களின் இரண்டு விசைப் படகை சிறைபிடித்தனர்.

    இதில், ஜேம்சன் படகில் இருந்த மீனவர்கள் வெக்கர் (27), மார்டின் (27), மணி, சிதம்பரம் (47), ஆரோன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஷ், சுதாகர், ஜெரால்டு, சுமுல், ஆக்கு மற்றும் சகாயராஜ் படகில் இருந்த படகில் இருந்த ராபர்ட் (40), ஜாக் ஷஷன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் 23 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கைதான மீனவர்கள் குறித்த விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படைக்கு ராமேசுவரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×