என் மலர்
நீங்கள் தேடியது "CBCID"
- கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
- இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது.
கடந்த 2017-ல் இங்கு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து பலரிடமும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று சுதாகரன் விசாரணைக்கு ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
பின்னர் அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குள் சென்றார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாட்டின் முன்னாள் பங்குதாரர் என்பதால், பங்களாவில் என்னென்ன இருந்தது. கொடநாடு பங்களாவில் கொள்ளை போனது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளையும் கேட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் தனக்கு தெரிந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.
- கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
- தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
- பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
பின்னர், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- பல்லடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டனர்.
- இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்தி வந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கொலை சம்பவம் நிகழ்ந்து 110 நாட்களாகியும் துப்பு துலங்காமல் போலீசார் திணறிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.
- வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012 மார்ச் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் கல்லணை செல்லும் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியை நாடி சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.
அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7-ந்தேதி அன்று நடைபெற்றது.
அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.
தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
- கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து தற்கொலை செய்த தினேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் தினேசின் குடும்பத்தினர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் சென்றனர்.
இதுபற்றி தினேசின் தந்தை போஜன் கூறுகையில் நானும், எனது குடும்பத்தினரும் பணிக்கு சென்றபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டு சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர்.
கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.
மேலும் விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 பேர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாநகர சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பழைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று தனிப்படையில் இணைந்தனர். இவர்கள் விரைவில் பணியை தொடர உள்ளனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
- ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அதிரடி.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
- கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்தார்.
- சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர்.
இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து புறப்பட்டு நேராக திருச்கோடு வந்தனர்.
பின்னர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் ராஜகோபுரம், படிக்கட்டு, மேற்கு புற வாசல் மற்றும் கோவிலுக்குள் அனைத்து பகுதிகளையும், வீடியோ காட்சிகள் பதிவான இடங்களையும் பார்வையிட்டனர்.
கோகுல்ராஜ் தொடர்பாக கோவிலில் பதிவான வீடியோ காட்சிகளில் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வைத்து அந்த இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் சுவாதியும், கோகுல்ராஜிம் கோவில் கொடி மரம் வழியாக வரும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.
யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் கோவிலுக்குள் இருந்து 2 பேரையும் அழைத்து கொண்டு வெளியேறுவதையும் அந்த இடத்தையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலெட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
- வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம்:
கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி கடந்த 2003-ம் ஆண்டு குண்டலப்புலியூர் வந்தார். அங்கு மன நலம் குன்றியோருக்கு உதவும் பணிகளை செய்து வந்த இவர் 2005-ம் ஆண்டில் அறக்கட்டைளை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து காப்பகம் நடத்தி வந்த ஜூபின் பேபி கடந்த 2021-ம் ஆண்டில் போதை மறு வாழ்வு மையம் என்ற பெயரில் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி பெறாமல் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
காப்பகத்தை அனுமதி பெறாமல் தான் அவர் நடத்தி வந்ததாக தெரிவிக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
- அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.
- பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.
விக்கிரவாண்டி:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார்.
இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லாகாணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.
மேலும் பலரிடம் நிதி உதவிகளையும் இணையதளம் மூலம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.