என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check"

    • இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த இ-பாஸானது 3 வகை அடையாளக் கோடுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் பொதுமக்களுக்கு பச்சை நிற இ-பாசும், வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற இ-பாசும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறத்திலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பஸ்களில் வருபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறை மூலம் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இணையதளத்தில் சென்று இ-பாசுக்கு விண்ணப்பித்தனர். அதில், சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் இங்கு தங்க உள்ளீர்கள் என பல்வேறு விவரங்கள் அதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டனர். விண்ணப்பித்த உடனே எளிதாக இ-பாஸ் கிடைத்ததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரி வருவதற்கு 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு வருகை தர உள்ளனர்.

    இன்று காலை முதல் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. நீலகிரிக்கு வந்த அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், நாடுகாணி, தொரப்பள்ளி, சோலாடி, பாட்டவயல் உள்பட 16-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வரும் தனியார் பஸ்கள், வேன்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அவர்களிடம் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் போலீசார் இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வர்த்தக வாகனங்கள் தங்களுக்கான ஊதா நிறத்திலான இ-பாசையும், உள்ளூர் வாகனங்கள் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற இ-பாசை காண்பித்து சென்று வருகின்றனர்.

    அவர்கள் நீலகிரிக்குள் சென்றதும் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    நேற்று இரவு முதல் மழை பெய்ததால் தற்போது ஊட்டியில் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அங்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாகனங்கள் உடனுக்குடன் சென்றதால் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
    • தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.

    இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.

    அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மார்கழி 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணும்போது அதில் ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர்.

    அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

    உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்த உதவுகின்றன.
    • அவற்றால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம்

    வங்கியில் காசோலைகளை எழுதுவதற்கு  கருப்பு மையை பயன்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டாயப்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

    காசோலை எழுதுவதற்கு குறிப்பிட்ட மை நிறங்கள் தேவை என்று ஆர்பிஐ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) தெளிவுபடுத்தி உள்ளது.

    பொதுவான வங்கி நடைமுறைகளில், நீலம் அல்லது கருப்பு மை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

    ஏனெனில் இந்த வண்ணங்கள் தெளிவாக தெரியவும், காசோலையில் அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்தவும் உதவுகின்றன.

    நீல நிற மை பெரும்பாலும் விரும்பப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் தனித்து நிற்கிறது, வங்கிகள் கையால் எழுதப்பட்ட விவரங்களை எளிதாகக் வேறுபடுத்தும். கருப்பு மை அதன் தோற்றம் மற்றும் வாசிக்க எளிமையாக இருப்பதன் காரணமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

     

    ஆனால் சிவப்பு மையை படுத்துவதைத் தவிர்க்கவும். இது பொதுவாக முறையற்றதாக கருதப்படுகிறது. சிவப்பு மையால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம். இதேபோல், பென்சில் அல்லது அழிக்கக்கூடிய மை தவரிக்கப்டுகிறது.

    ஏனெனில் அது எளிதாக மாற்றப்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளன. பச்சை அல்லது ஊதா போன்ற பிற நிறங்கள் வங்கி ஸ்கேனிங் அமைப்புகளுடன் பொருந்தாமல் இருப்பதால் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே அதையும் தவிர்ப்பது நல்லது.

    • திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கோவை:

    அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.

    இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.

    இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.

    இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
    • இதையடுத்து தரமற்ற குளிர்பானங்கள், பிஸ்கெட்டுகளை உணவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதையடுத்து அந்த படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் வட்டார அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் தியேட்டரில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், பூச்சி விழுந்த கெட்டுப்போன பால், குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து லேபல்கள் இல்லாத ரோஸ் மில்க் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட 94 பாட்டில்கள், கோல்ட் காபி 250 மில்லி லிட்டர் எடை கொண்ட 56 பாட்டில்கள்,250 கிராம் பிஸ்கட் 9 பாக்கெட் இவை அனைத்தும் லேபுள்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் 5 லிட்டர் பால் குளிர்சாதன பெட்டியில் இருந்தது .இந்த பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து கேண்டீன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மேலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும், திரையரங்க உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கினார்.
    • பயனாளிக்கு சுயதொழில் தொடங்க ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 461 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து பாபநாசம் வட்டம் மாலினி என்ற மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000- மதிப்பிலான காசோலையினையும், தாட்கோ திட்டத்தின் சார்பில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற பயனாளிக்கு சுயதொழில் தொடங்கிட ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    • பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    கோவை:

    கோவையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கடைகளில் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சத்தி மெயின் ரோடு ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில், குட்காவை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்கா வியாபாரிகளான கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திரசேகர்(44), பிரதீப்குமார்(21), அழகுபாண்டி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், பாப்பநாயக் கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் குட்கா விற்றதாக வியாபாரிகளான கோவை பாப்ப நாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கவுதம் (21) மற்றும் அண்ணாதுரை (50) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 350 கிலோ புகையிலை- குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்ப டையில் டி.ஐ.ஜி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பேரையூர் முக்கு சாலைப் பகுதியில் குளிர்பானக் கடை வைத்திருக்கும் சம்சுதீன்(53) பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது தெரியவந்தத. இதையடுத்து பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 25 மூட்டையுள்ள 350 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக சம்சுதீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் முதியவரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிவி நடிகை மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் திலகவதி நகரில் வசித்து வருபவர் முத்தையா (72). கட்டுமான தொழில் செய்து வரும் இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த மனுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.வி. நடிகை ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

    கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் என் மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், அவரது மனைவி டி.வி. நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் சிலர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர்.

    என்னையும் என் மகன் கிறிஸ்டோபரையும் காசிமேடு, அண்ணாநகர், ரவுடிகள் மூலம் கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 லட்சம் உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டினர்.

    எதற்காக இந்த பணம் தர வேண்டும் என்று கேட்டதற்கு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் கேட்ட பணத்தை கொடு, இல்லையெனில் ரவுடிகளை வைத்து உன் குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என்று மிரட்டினர்.

    பணத்தை இப்போது தரவில்லை என்றால் என்னையும் என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து உயிருக்கு பயந்து ரூ.10 லட்சத்துக்கு ‘செக்’ எழுதி கொடுத்தேன். அதிகாலை 2 மணி வரை என்னை கத்தி முனையில் மிரட்டியதால் நான் வேறுவழி தெரியாமல் பயந்து செக்கினை கொடுத்து விட்டேன்.

    என்மகன் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை கூறினேன். போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் எங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், டி.வி. நடிகை சஜினி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×