என் மலர்
நீங்கள் தேடியது "cheetah"
- 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
- 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.
போபால்:
சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன.
இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கி புலி கண்டுபிடிக்கப் படவில்லை.
இதையடுத்து சீட்டாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டில் இருந்து 8 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் ஆகும்.
இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை கொண்டு வர இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ந்தேதி புறப்பட்டு சென்றது. அங்கு 12 சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
சிவிங்கி புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிவிங்கி புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும்.
அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விடுகிறார்கள்.
மேலும் 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
+2
- காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
- சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள தாயம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி என்ற விவசாயின் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் கடந்த 3ந்தேதி இரவு ஒரு செம்மறியாடு காணாமல் போனது.
சற்று தூரத்தில் கழுத்துப்பகுதி கடிக்கப்பட்ட நிலையில் ஆடு இறந்து கிடந்தது. சிறுத்தை, நாய் போன்ற விலங்கினங்கள் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப்பகுதியில் காங்கயம் வனத்துறையினர் கேமரா வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை ஒரு விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிறுத்தை அடித்துக்கொன்றதாக தெரிவித்தனர். எனவே சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஊதியூர் அடுத்த காசிலிங்கம்பாளையத்தில் சாமிநாதன் என்பவரது தோட்டத்தில் இருந்த 2மாத கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று 300 அடி தூரம் இழுத்து சென்றுள்ளது. அங்கு வேலி இருந்ததால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டு விட்டு சென்றது. மேலும் ஆடு, மாடுகளை கடித்து கொன்றுள்ளது. இன்று காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் ரேஞ்சர் தனபாலன், வனத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி உள்ளிட்ட குழுவினர் வட்டமலை பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உடுமலை வனச்சரகத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் வர வழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 5 கி.மீ., சுற்றளவுக்கு கண்காணித்து வருகிறோம். கண்டறியப்பட்ட கால்தடத்தின் அடிப்படையில் சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே வட்டமலைப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாலை 4மணிக்கு மேல் மலைக்கும், மலை மேல் உள்ள கோவில்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
வட்டமலைப்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை கரூர் வனப்பகுதியில் இருந்து இங்குவந்துள்ளது. ஊருக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் தவித்து வருகின்றனர்.
- சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
- விவசாயி ஒருவர் சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பதுங்கி இருக்கும் சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இதையடுத்து மலையை சுற்றி தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. ஆனால் பொதுமக்கள் சிலர் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்து வந்தனர்.
எனவே டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை எங்கு உள்ளது என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதி என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காசிலிங்கம்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கட்டியிருந்த நாயை காணவில்லை. அருகில் தேடி பார்த்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை நின்றதையும், அந்த சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
10 நாட்களாகியும் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை சிக்காததால் பொது மக்கள் வெளியே செல்ல பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் ஊதியூர் பகுதியில் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் உடனே அதனை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.
அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.
கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.
கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
- தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதை அருகே சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. கடந்த மாதம் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி தூக்கி சென்றது.
அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்றதால் சிறுவனை விட்டு சென்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மலை பாதையில் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதிகளில் ஆயுதம் எழுதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
இதை கண்ட பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுத்தை நடமாடிய பகுதியில் வலைகளைக் கொண்டு வேலி அமைத்தனர். இதன் மூலம் இந்த பகுதியில் சிறுத்தை நடைபாதைக்கு வராமல் தடுக்க முடியும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
- ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
- சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊரா ட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட் டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொண்றது.
அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. அதைத்தொ டர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறையினர் வைந்திருந்த கூண்டில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் பிடிபட்ட சிறுத்தை 4 வயதான பெண் சிறுத்தை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
- இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
- ஆண் மற்றும் பெண் சிறுத்தையை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், மேலவை மண்டலம், காக்கலகுண்டா அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த சிலர் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கால்வாய் ஓடையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மாவட்ட வன அலுவலர் ரவீந்திர ரெட்டி, பெனுகொண்டா வன அலுவலர் ஆனந்த், ரேஞ்சர் சீனிவாச ரெட்டி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த ஆண் மற்றும் பெண் சிறுத்தையை நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் விஷம் வைத்து சிறுத்தைகளை கொன்றார்களா அல்லது வனவிலங்குகளிடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தைகள் இறந்ததா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
- சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.
அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.
மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரவில் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் மர்ம விலங்கு கால்தடம் விவசாய நிலத்தில் பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கு ஒன்று நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த தகவல் காட்டு தீ போல இப்பகுதிகளில் பரவ துவங்கியது. மேலும் இந்த பகுதியில் உள்ள ஜகன், மற்றும் சின்னசாமி ஆகியோரின் தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கின் கால்தடம் பதிந்து இருப்பதை பார்த்து அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வனவர் பிரவின்ராஜ் தலைமையிலன வனகாப்பாளர் சுகுமார், உள்ளிட்ட குழுவினர். மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தாமோதிரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் சார்பில் மருதேரி ஊராட்சியில் பேருஅள்ளி கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு சிறுத்தையை பார்த்தால், வனத்துறைக்கோ அல்லது ஊராட்சி மன்ற தலைவருக்கோ தகவல் கொடுக்க அறிவுறுத்தினர்,
மேலும் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், சின்னசாமி என்பவர் தென்னந் தோப்பில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் கிராம மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
- நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
- தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.
திருப்பதி:
திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
இதையடுத்து நடைபாதையில் வனத்துறையினர் வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கியது.
இந்நிலையில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது.
விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைபாதையில் ஆய்வு செய்தனர்.
அப்போது நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
சிறுமியை கொன்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில் :-
நடைபாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.
மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைபாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் ஆய்வு செய்தனர்.
- இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பழைய பாளையம், ஊஞ்சப்பா பாளையம், வெள்ளி வலசு, வேமண்டாம் பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன் காடு, அட்டவணை அனுமன் பள்ளி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக மாடு, கன்றுக்குட்டி, ஆடு உள்ளிட்டவற்றை மர்ம விலங்கு கொன்று வந்தது. வனத்துறையினர் ஆய்வில் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் அல்லது அந்தியூர் பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை பிடிக்க 7 இடங்களில் கூண்டு , 13 இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதேப்போல் வனப்பகுதிக்கும் கால்நடைகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் பெருந்துறை அடுத்த கொங்கம்பாளையத்தில் ஒரு பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை இழுத்து சென்றது. அத்துடன் அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் சிறுத்தை நடமாட்டமும் பதிவாகி இருந்தது. இதனால் அரச்சலூரில் நடமாடிய சிறுத்தை தற்போது பெருந்துறை பகுதிக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.
ஒன்றரை மாதத்துக்கு முன் கொங்கம்பாளையம் பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்கு கொன்றது. அதன் பின் விலங்கு நடமாட்டம் இல்லை. இருந்தாலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.
அப்போதுதான் சிறுத்தை என உறுதி செய்து 7 இடங்களில் கூண்டு வைத்தோம். அதற்குள் பெருந்துறை பகுதிக்கு அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து ஆட்டை வேட்டையாடியதுடன் வனத்துறை வைத்துள்ள கேமிராவை கடந்து சென்றுள்ளது. இவை 2-ம் ஒரே சிறுத்தை என யூகித்துள்ளோம். இதனால் இப்பகுதிகளிலும் கூடுதலாக கூண்டு வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில்
மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு
விட்டு ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு
கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால்
தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள்
கடும் பீதி அடைந்துள்ளனர்.
மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில்
வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.