என் மலர்
நீங்கள் தேடியது "Coimbatore Car Blast"
- இறந்தவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
- கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) உடல் கருகி பலியானார். கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும்.
இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பெற வேண்டியிருப்பதால் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது.
அதன்படி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முறையான விசாரணை நடத்தி, கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பா.ஜ.க.வின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது.
இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
முத்துப்பேட்டை:
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் அந்தந்த மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அனந்தபத்மநாதன், உதயா, ஹேமலதா மற்றும் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட போலீசார் இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.
தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சோதனை செய்யப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து ஒரு இயக்கத்துடன் தொடர்புஉள்ளதாக கூறி கைது செய்ததும், பின்னர் அவர்கள் விடுதலை ஆனதும் குறிப்பிடத்தக்கது.
- ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிரிழந்து இருக்கிறார்.
- முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
கோவையில் கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றிய பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது. காரில் சிலிண்டர்கள், வெடி குண்டுகளை கடத்தி சென்று சதி வேலையில் ஈடுபட கோவை உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் முயற்சி செய்து இருந்தார்.
கார் வெடிப்பில் அவர் உயிர் இழந்த நிலையில் இந்த நாசவேலை சதி திட்டம் தொடர்பாக அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை போலீசாரிடம் இருந்து கார் வெடிப்பு வழக்கு தொடர்பான தகவல்களையும் சேகரித்து வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியான முபினும், அவனது கூட்டாளிகள் 17 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்ட திடுக்கிடும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முபினையும், அவனது கூட்டாளிகள் சிலரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தனர்.
அப்போது முபின் மற்றும் கூட்டாளிகள் 17 பேரிடம் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்வதற்கான விசாக்களும் இருந்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் போர் பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு சென்று இவர்களும் போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்து இருந்துள்ளனர்.
இந்த சதி திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், மாநில உளவு பிரிவு போலீசாரும் முபினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி இறந்து விட்டான். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பந்தமான அடுத்த கட்ட விசாரணையை அதிரடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் பதுங்கி உள்ள முபினின் கூட்டாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுககு சென்றும் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.
மாநில உளவு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்திற்குள் சென்ற பிறகும் முபின் ரகசியமாக செயல்பட்டு கார் வெடிப்பு சம்பவத்தை மிகவும் துணிச்சலாக அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முபினிடம் தற்போது தொடர்பில் உள்ளவர்கள் ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிர் இழந்து இருக்கிறார். மீதமுள்ள 17 பேர் யார்? யார் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கார் குண்டு வெடிப்பிலும் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தற்போது கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோவை போலீசார் கைதான 6 பேரில் 5 பேரை மட்டுமே காவலில் எடுத்து விசாரித்து இருந்தனர். இந்த நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவர்களில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர்.
இந்த விசாரணைக்கு பிறகு முபினுடன் வெளிநாடு சென்று பயங்கரவாத போர் பயிற்சி பெற திட்டமிட்ட 17 பேரின் தொடர்பு பற்றி தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
- சாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போலீசார் 7 தனிப்படை அமைத்து, இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோவையில் பயங்கர சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன.
இந்த வழக்கில் கடந்த 7 நாட்களாக போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இருந்து சிலிண்டர்கள், ஆணி, கோலி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதானவர்கள் வீடுகளிலும் 2 முறை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கினை என்.ஐ.ஏ.வுக்கு தமிழக அரசு மாற்றியது. என்.ஐ.ஏ.வும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
தென்மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, தமிழக போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதால் இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை மாநகர போலீசார் இன்றுடன் தங்களது விசாரணையை நிறைவு செய்தனர். இனி இந்த வழக்கினை என்.ஐ.ஏ. போலீசார் விசாரிக்க உள்ளனர்.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கோப்புகள், வீடியோ காட்சிகள், பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர போலீசார் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை கார் வெடிப்பு வழக்கு சம்பந்தமாக 6 பேரை கைது செய்துள்ளோம். வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு விட்டது. இனி இந்த வழக்கை அவர்கள் விசாரிப்பார்கள். இதுவரை நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றிய பொருட்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ.விடம் வழங்கும் பணி தொடங்கி விட்டது. ஓரிரு நாளில் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.
- வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
- கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.
சென்னை:
கோவை கார் வெடிப்பு குறித்து 18-ம் தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுற்றறிக்கையே. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரை பற்றி எந்த தகவலும் இல்லை.
வழக்கு விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.
- கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
கோவை:
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.
போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.
கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.
கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.
இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
- வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
- அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருப்பூர்:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தல்கா, அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 32) என்பவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர்.
தற்போது கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் இன்று காலை வீட்டில் இருந்த அப்துல்ரசாக்கை விசாரணைக்காக அழைத்து சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் அப்துல் ரசாக்கிற்கு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் வாலிபரிடம் விசாரணை நடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.
- குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.
தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி பாடினார்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மக்கள் எடுத்து கொடுத்ததாக கூறி பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளையும் அண்ணாமலை காண்பித்தார்.
கோவை 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு பின்னோக்கி சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மிக கடினமாக போராடி கோவையில் உள்ள மக்கள் தொழில் அதிபர்கள் இணைந்து கோவையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இருந்தால் நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. நிச்சயமாக கோவை 20 வருடம் பின்னோக்கி சென்று இருக்கும். அதை தடுத்து நிறுத்தியது நம்மை காக்கும் கடவுளாக இருக்கும் காவல் துறை நண்பர்கள்.
இந்த விபத்து நடந்த பிறகு மிக துணிவாக காவல்துறையினர் இதனை அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளை கைது செய்து, அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். தங்களது உயிரை பணயம் வைத்து வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி.
இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் தீய மனிதர்கள் நோக்கம் இதுபோன்ற வெடி விபத்தை நடத்தி மதத்தை வைத்து கோவையை பிரித்து சூழ்ச்சியாடி, தமிழகத்தை பிரித்து சூழ்ச்சியாடி மக்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காக தான் இந்த முயற்சி நடந்துள்ளது.
நாம் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறுகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் கூட பூசவில்லை.
சனதான தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. ஒன்றாக செல்ல வேண்டும். கோவை மாநகரில் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் நீங்கள் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. இது தவறான முன் உதாரணம். மதகுருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி யாராவது இளைஞர்கள் தவறான வழித்தடத்தில் சென்றாலும் கூட சொல்வது நமது கடமை.
மக்கள் எடுத்துக்கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.
மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே நாங்கள் சொல்லி வருகிறோம். தொடர்ந்து கருத்துக்களை சொல்வோம். அதனால் நாங்கள் சொல்வது யாருக்கும் எதிரானது கிடையாது.
தொடர்ந்து பா.ஜனதா கட்சி போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்கின்ற கேள்வி இங்கே சில தவறுகள் நடந்து இருக்கிறது. திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
அடுத்த கட்ட தாக்குதல் நடந்த பிறகு நாங்கள் உங்களை பார்த்து, நீங்கள் எங்களை பார்த்து குற்றம் சொல்லாமல் சரியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்காக தான் கேள்வியை எழுப்பி வருகிறோம்.
கடந்த ஜூன் 19-ந் தேதி மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இது போன்ற 96 நபர்கள் ஐ.எஸ்.எஸ். மூளை சலவை செய்யப்பட்டவர்கள், கைதானவர்களை கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதில் 89-வது நபராக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முபினின் பெயர் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என கூறியும் அது நடக்காததால் இந்த தவறு நடந்து இருக்கிறது.
மக்களை எச்சரிக்கைப்படுத்துவது காவல்துறையின் தலையாய பணி. பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் எதுவும் தவறாக நினைக்க போவதில்லை. அதனை வெளியில் சொல்ல வேண்டும். அதனை சொன்னால் மக்களுக்குள் பிளவு வந்து விடும் என்பது கிடையாது.
குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர். ஐ.எஸ். கொள்கை என்பது பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய குருமார்களே சொல்கின்றனர்.
நல்ல குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க. அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க.வினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.
- என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
கோவை:
கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. போலீசார் நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர். என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில், விசாரணை அதிகாரி விக்னேஷ்வரன் அடங்கிய 8 பேர் குழுவினர் சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் கோவில் பூசாரி சுந்தரேசனிடமும் விசாரணை நடத்தினர். அவரிடம் என்.ஐ. அதிகாரிகள், எத்தனை மணிக்கு சத்தம் கேட்டது. நீங்கள் எப்போது வந்து பார்த்தீர்கள்.
அப்போது சம்பவ இடத்தில் என்ன மாதிரியான சூழல் இருந்தது என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு பூசாரி, கோவில் எதிர்புறத்தில் எனது வீடு உள்ளது.
சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் நான் தூக்கத்தில் இருந்த போது பெரும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக வெளியில் வந்து பார்த்தேன். அப்போது தான் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து எரிந்து கொண்டிருந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்தார்.
அதனை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து கொண்டனர். பூசாரியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 40 நிமிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் கோவிலுக்குள் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவில் ஊழியர்களிடம், வழக்கமாக கோவில் எத்தனை மணிக்கு திறக்கப்படும். தினமும் வந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் கேட்டறிந்தனர். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர்.
சம்பவத்தின்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பாண்டியராஜன், ஏட்டு தேவக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் நடந்த இடம், அருகே உள்ள கோவில், கோவிலின் எதிர்ப்புற வீதியில் உள்ள அர்ச்சகர் தங்கி இருக்கும் வீடு உள்ளிட்டவற்றின் தூர இடைவெளியையும் அளவெடுத்து அந்த இடத்தை வரைபடமாக தயார் செய்து எடுத்து சென்றனர்.
என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து கோவையிலேயே முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
- இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.
சென்னை:
கோவை மாநகரில் கடந்த 23-ந்தேதியன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடக்கி விடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக 5 பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் 6-வது நபரும் கைது செய்யப்பட்டார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே மேற்கொள்ளப்பட்டன. இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மற்றும் போலீஸ் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.