search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminals"

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
    • சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக சாா்பில் மனு :

    விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும்பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சீனிவாசன்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலை யாமல் தேசத்தின்பாதுகாவலனாக இருக்கவேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடு த்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    நேரடி விசாரனை கூட இருப்பதில்லைமாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைக ளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வருகின்றனர்.

    சில புகார்கள் மீது கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது.

    வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வதில்லை.

    மேலும் காவல்நிலைய ஜாமீனிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கிறார்கள் என குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர்.

    மதுரை

    மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர். பின்னர் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர்த்தரப்பினர் மிரட்டி வந்தனர். இது தொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனவே குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருமங்கலம் டவுன் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

    • செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது.
    • இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் ராமசாமி, பாலகுரு, முத்துகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் வழங்கி தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார். இதில் ராமசாமி வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார்.

    மேலும் இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்களை தடுக்க, போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துவந்த 1315 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய ரவுடிகளை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

    சென்னையிலும் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், மகேஸ் குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன்படி பழைய குற்றவாளிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்த வகையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கும் பணியுடன் ரவுடிகள் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதில் 1555 ரவுடிகள் இதுவரை பிடிபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசிடம் சிக்கியுள்ள இவர்களிடம் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இனி தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி உள்ளனர்.

    இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த 1315 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்து வரும் அதே வேளையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் இதுவரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 629 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைபெற்ற இந்த சோதனை கடந்த 2 நாட்களாக புறநகர் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. #LokSabhaElections2019
    வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (வயது 45). இவருக்கு பூங்கொடி, லெட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சவடமுத்து தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வேன், லாரிகள் வைத்து ஓட்டி வந்தார். கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சவடமுத்துவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வந்தனர். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. ஏனெனில் சவடமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மாயமாகி இருந்தது.

    அதன் பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அந்த நகையை அவர் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே இந்த கொலை வேறு காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீர்மானித்தனர்.

    சவடமுத்துவுக்கு வேறு பெண்கள் யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போனில் அதிக முறை யாரிடம் பேசினார்? கொலை செய்யப்பட்டதற்கு முன்பாக அவருக்கு ஏதேனும் அழைப்புகள் வந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் எவ்வித தடயமும் சிக்க வில்லை. இதனால் கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 2 பேரையும் 48 மணி நேரத்தில் கைது செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் உறுதி அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலுடன் கூடிய உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது போராட்டக்காரர்களிடம் அவர் கூறியதாவது:

    குற்றவாளிகளான ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் 48 மணிநேரத்தில் கைது செய்வோம். மேலும், அவர்களை கைது செய்து குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்.


    சவுமியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீதும், கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி. விசாரணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்தார். #DharmapuriGirlStudent #GirlMolested 

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தனிப்படைகள் அமைத்து இருந்தார். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி, திருவட்டார், மணவாளக்குறிச்சி, அருமனை ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வரும், அருமனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 தலைமறைவு குற்றவாளிகளையும், மண வாளக்குறிச்சி பகுதியில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது என்று போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார்.

    போரூர்:

    போரூர் மங்களாநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் மங்களா நகரில் மொத்தம் உள்ள 16 தெருக்களிலும் புதிதாக 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டிக்காராம், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கேமராக்களின் செயல் பாட்டினை கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்.

    வடசென்னை கூடுதல் ஆனையர் தினகரன், மேற்கு மண்டல இனை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர்,மாநகராட்சி மண்டல உதவி கமி‌ஷனர் சசிகலா, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், சீத்தாராமன், மங்களா நகர் நலவாழ்வு சங்க தலைவர் நடராஜன் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழாவில் பேசியதாவது :-

    சென்னையில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றசம்பவங்களில் துப்பு துலக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா பெரும் உதவியாக உள்ளது. அதன் மூலம் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடிகிறது. சமீபத்தில் கூட வளசரவாக்கம் பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கண்காணிப்பு கேமரா பெருமளவு உதவியாக இருந்தது.

    நாம் தூங்கினாலும் தூங்காமல் கண் விழித்து கண்காணிக்கும் மூன்றாவது கண்களாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (வயது65). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர். இவர் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் நிலத்தை பார்வையிட்டு விட்டு அங்குள்ள மோட்டார் கொட்டகைக்கு வந்தார். அங்கு அப்துல் ஜபாரை மர்ம மனிதர்கள் சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    பின்னர் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கொலைசெய்யப்பட்ட அப்துல் ஜபாரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது 1 ஜோடி செருப்பு மட்டும் கிடைத்தது. வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் குற்ற வாளிகளை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ், சிவச்சந்திரன், அகிலன், திருமால் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபார் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த 1 ஜோடி செருப்பை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த செருப்பு பெங்களூரில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் குற்றவாளிகள் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தனிப்படை போலீசார் பெங்களூர் சென்றனர்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவர் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (வயது 23) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த செருப்பு திலீப்குமாருடையதுதான் என்று தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திலீப்குமார் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

    திருவெண்ணை நல்லூரில் உள்ள பெண்ணையாற்றில் மோகன் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் ஏற்றி விற்பனை செய்து வந்தார். இதை ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல் ஜபார் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்தார். இதனால் அடிக்கடி மோகனின் மணல் லாரிகளை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபாரை கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் மோகன் மற்றும் அவரது தம்பி ரவி, டிரைவர் செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டினர். பின்னர் அப்துல்ஜபாரை கொலை செய்வதற்காக பெங்களூரில் உள்ள தனது உறவினர் திலீப்குமாரை திருவெண்ணை நல்லூருக்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மோட்டார் கொட்டகையில் இருந்த அப்துல் ஜாபரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திலீப்குமார் கூலிப்படை யை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் குறிப்பிடதக்கது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மோகன், ரவி, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×