என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Mandous"

    • மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது.
    • கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.

    தரங்கம்பாடி:

    மாண்டஸ் புயலால் தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் கடலோர வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும்.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.

    சீர்காழி அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

    மழை நீர் வெளியேறாத நிலையில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.

    இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    ஆலந்தூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்த செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முதல் விடிய விடிய கொட்டிதீர்த்தது.

    இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.
    • மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள "மாண்டஸ்" புயலால் இன்று காலை முதல் மாமல்லபுரம் பகுதியில் மழை பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுகின்றன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல்நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர்.

    இருந்தும் கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது. தொடர்ந்து கடல் அலை கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் இரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புயல் கடக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்க வேண்டாம். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், மாமல்லபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள், வரக்கூடிய பஸ்கள் நள்ளிரவில் மாற்றுப்பாதையில் இயக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
    • கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

    சென்னை

    மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 14 கி.மீ. தூரம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறி உள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணிகளும் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. 

    • மாமல்லபுரம் அருகே நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
    • புயல் தாக்கும் மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதுதொடர்பாக தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

    • மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை நோக்க நகர்ந்து வருகிறது
    • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரைகடக்க உள்ளதால், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரைகடக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவேணடும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • புயலின் நகர்வு வேகம் அதிகரித்ததால் முன்கூட்டியே கரையை நெருங்கியது.
    • சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன

    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ், இன்று புயலாக வலுவிழந்து கரையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்பின்னர் புயலின் நகர்வு வேகம் சற்று அதிகரித்தது. 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி பயணித்த புயல், முன்கூட்டியே கரையை நெருங்கியது.

    இரவு 9.30 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

    மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது. சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைகடக்கும் நிகழ்வானது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு நிகழும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

    • மாநகர பகுதி முழுவதும் இரவு நேர பேருந்துகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
    • காலை 4 மணிக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

    மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்து வருவதால் சென்னை மாநகர பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இரவு நேர பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகரம் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்த 550 பேருந்துகளின் சேவை முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

    பேருந்துகள் அனைத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், காலை 4 மணிக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகள், உணவகங்களை இரவு 10 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் புயல் கரையை கடந்த பிறகு வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

    • பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • உத்தண்டி குடியிருப்பு பகுதி சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது.

    மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் கிழக்கு கடற்சாலையில் கடல் சீற்றம் காணப்பட்டது. உத்தண்டியில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

    அந்த பகுதி சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது. பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்பை பாதித்ததில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இங்குள்ள குடியிருப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

    ×