என் மலர்
நீங்கள் தேடியது "DMK Govt"
- சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும்.
- 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவைக்கு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளது. இவற்றினால் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாக தீரும். அனைத்து தரப்பு மக்களும் பயனடைக்கூடிய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பட்ஜெட் ஆகும். இருப்பினும் பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்கட்சிகள் கூறுவது போல் இது தேர்தலுக்கான பட்ஜெட்தான். ஏன் என்றால் ஏழை எளிய மக்களுக்கு போடப்பட்ட பட்ஜெட். அதனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள்.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதித்தார்கள். அங்கே கலவரம் நடக்கவில்லை. திட்டமிட்டே தேசிய அமைப்புகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இதனால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக சீமானும், திருமாவளவனும் ஊர்வலம் நடத்த அனுமதி தருகின்றனர்.
இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும். 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
இவர்களுக்கு ஈரோட்டில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இது விடியாத ஆட்சி என்பதே சரி. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கடலில் பேனா வைக்கக்கூடாது. அதானி பிரச்சினையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்துதான் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமைதியாகி விட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடற்கரை சாலை தனியார் உணவகத்தில் நடந்தது.
மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பா.ஜனதா தேசிய செயலாளர் ராஜா பட்ஜெட் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, சிவசங்கரன், பா.ஜனதா தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி, முன்னாள் நீதிபதி அருள், மாநில பயிற்சியாளர் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
- மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.
கோவை:
கோவையில், பட்டப்பகலில், படுகொலை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதற வைக்கின்றது, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை, கோவை கோர்ட்டு வளாகத்தின் பின்பகுதியில் உள்ள கோபாலபுரத்தில், ஒரு கும்பல், வாலிபரை வெட்டி கொலை செய்துள்ளனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி உள்ளார்.
இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில், சரவணம்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கோவையில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் பதற வைக்கின்றன.
தமிழகத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
அ.தி.மு.க.வின் மக்கள் சக்தியாக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது.
ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் தி.மு.க. வேதனை அரசாக உள்ளது. விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது. கடலை அணை கட்டி தடுக்க முடியாது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.
முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.
உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.
எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.
- எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.
சென்னை:
சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ பரிசோதனை முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண விவகாரத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு போலீஸ் டி.ஜி.பி. தெளிவாக பதில் அளித்துவிட்டார். இருப்பினும் துறை சார்ந்து பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.
கவர்னர் குழந்தை திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை நடந்ததாக நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
அவர் சொன்ன குற்றச்சாட்டுக்காக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை கேட்டுள்ளது.
சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக கவர்னர் கூறியது தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அவர்கள் விசாரணையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
கவர்னர் அரசின் மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு ஏதாவது கிடைக்காதா? என்று தேடி தேடி அலைகிறார்.
எதுவும் கிடைக்காததால் ஒரு சிறுமியை சாட்சியாக வைத்து தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.
- மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
சென்னை :
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 2 ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்து வருகிறது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். அதற்கான முன்னெடுப்பு கூட முழுமை பெறாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம் 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது.
மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயிக்காதது 13-வது துரோகம்.
- முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி பதினான்காவது துரோகம்.
சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்' நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. இது தி.மு.க. அரசின் முதல் துரோகம்.
கொரோனா நோய்த்தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது தி.மு.க. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. அரசு. இது தி.மு.க. அரசின் இரண்டாவது துரோகம்.
சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு. இது மூன்றாவது துரோகம். ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி. இது தி.மு.க. அரசின் நான்காவது துரோகம். 'நகைக் கடன் தள்ளுபடி' என்ற வாக்குறுதி தி.மு.க. அரசின் ஐந்தாவது துரோகம்.
கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி அரசின் ஆறாவது துரோகம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது. இது தி.மு.க.வின் ஏழாவது துரோகம்.
அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இது தி.மு.க.வின் எட்டாவது துரோகம். அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு சம்பளம் வழங்காதது 9-வது துரோகம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படாதது தி.மு.க.வின் பத்தாவது துரோகம். மகளிர் உரிமைத் தொகை வழங்காதது பதினொன்றாவது துரோகம்.
நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பன்னிரெண்டாவது துரோகம்.
நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயிக்காதது 13-வது துரோகம். முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி பதினான்காவது துரோகம். எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க. அரசின் பதினைந்தாவது துரோகம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.
- தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.
தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.
திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது.
- பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அண்ணாகாலனி பகுதி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னது திராவிட இயக்கம். முன்பெல்லாம் ஆண்களைவிட பெண்கள் குறைவாக படித்திருப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் பெண்கள் உயர் கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை கவர்னர் தற்போது கொண்டு வர முயற்சித்து வருகிறார்.
தி.மு.க. மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் கவர்னர் முயற்சிக்கிறார். கவர்னர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை.
பெரியார் முதல் தற்போது உள்ள தி.மு.க. அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால் கவர்னர் கொண்டு வர முயல்வது மனுதர்மம். பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துள்ளன.
- பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.
திருச்சி:
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன். நேற்றிலிருந்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
அதில் 9 பேர் இறந்துள்ளதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இறப்புகள் நடக்குமோ என்ற அச்சத்தில் அவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டம் சுக்கானுர் பெருங்கரணை பகுதியில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் இறந்துள்ள தகவலும் வந்துள்ளது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு பொம்மையான, திறனற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது கள்ளச்சாராயம் தொடர்பாக நான் பேசியிருக்கின்றேன்.
அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளது. அதை பார்த்தாவது விழித்துக் கொண்டு வேகமாக துரிதமாக நடவடிக்கையில் இறங்கி இருந்தால் இறப்புகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
இந்த கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பெடுத்து தார்மீகமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழகத்தின் டி.ஜி.பி. முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்றும் அதன் பின்னர் 3.0 என்றும் இப்போது 4 ஓ என ஓ மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார். சட்ட ரீதியாக தடை செய்ய இந்த முதல்வருக்கு திறமை இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக இருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை காலை மரக்காணம் பகுதிக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் செல்ல இருக்கின்றேன்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. அதேபோன்று தற்போது போலி மதுபானங்களும் அதிகம் விற்கப்படுகிறது. இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சனைகளை பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தெரிவித்து விட்டு ஆயிரம் சில்லறை கடைகளை திறந்து இருக்கிறார்கள். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு இனிமையான நிகழ்வு. அந்த திருமண மண்டபத்திலும் மதுபானம் விற்கலாம் என இந்த அரசு கொண்டு வந்தது. அதேபோன்று விளையாட்டு மைதானத்திலும் மதுவை விற்கலாம் என கொண்டு வந்தார்கள். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இருக்கிறது.
இந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது மேற் கூரையை பிரித்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
அவர்களை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் தற்போது அக்கம்பக்கத்தினரின் முயற்சியால் அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை நீங்கள் கேள்வியாக எழுப்பியவர்கள் என்ற காரணத்திற்காக முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கின்றார்
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மு.பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
அவரது உறவினர்களிடம் உணவு, உடை, பழங்களை வழங்கினார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானத்தை விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் அதை குடித்ததில் மரக்காணம் பகுதியில் பலர் உயிர் இழந்து விட்டனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.
ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். இன்று 1,500 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராய வியாபாரிகளை அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து உள்ளது.
இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
கள்ளச்சாராய பலிக்கு சமூக போராளிகளும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து யூடியூப்களிலும் வெளிவந்துள்ளது.
இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.
இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. அந்த வழக்கு தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதை உங்களிடம் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
- தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை கண்டதும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது.
இதில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமைக் கழக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, விஜயபாஸ்கர், டி.கே.எம்.சின்னையா, செல்லூர் ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ரமணா, மாதவரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெங்கடேஷ் பாபு, சத்தியா, ராஜேஷ், வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்,
அமைப்புச் செயலாளர் நெல்லை ஏ.கே.சீனிவாசன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான முன்னாள் சாத்தாங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி எம்.சி. ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மாணவரணி வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், சைதை சொ.கடும்பாடி செக் போஸ்ட் எஸ்.வி.லிங்க குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் ஜெ.ஜான், கே.பி.முகுந்தன், சி.வி.மணி, கொளத்தூர் முன்னாள் பகுதி செயலாளர் கொளத்தூர் கே.கணேசன் திருமங்கலம் மோகன், அபிராமி பாலாஜி, பாடி பா.கிருஷ்ணன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, துறைமுகம் பயாஸ் இளைய கிருஷ்ணன், புளியந்தோப்பு எம்.ஆர்.சந்திரன், பகுதி கழக செயலாளர் பட்மேடு டி.சாரதி, ஜி.ஆர்.பி.கோகுல், கே.சி.கார்டன் சந்திரசேகர், நேரு நகர் எஸ்.கோதண்டன் வழக்கறிஞர் இஸ்மாயில், கொளத்தூர் கணேசன், எஸ்.ஆர்.விஜய குமார், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.