என் மலர்
நீங்கள் தேடியது "ED"
- கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சிசோடியாவிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரித்தனர்.
- மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது. தேர்தலைப் பார்த்து அக்கட்சி பயப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
- அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது.
- முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
மேலும் அவரது மகனும், மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வுமான அப்பாஸ் அன்சாரி (வயது 30) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்குகள் தொடர்பாக முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
- ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையொட்டி ஐதராபாத், கரீம் நகர் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் 20 குழுக்களாக ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
மேலும் அவருக்கு நெருக்கமாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
- பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது.
மும்பை :
மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.
பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
- தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
மும்பை :
நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேநேரம் அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, "முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே அன்று ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையில், முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தனது வக்கீல் மூலமாக பி.யி.டி- சி.டி. ஸ்கேன் எடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஸ்கேன் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாட்டை கண்டறிய உதவும் சோதனை ஆகும். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
- இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
- 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
- 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது.
- மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங். இவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 9 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
- அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஷாரிக்கின் குடும்பத்தாரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிம்மனே ரத்னாகர் ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். இந்த குத்தகை காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இது தொடர்பான தகவல்களின்படி அமலாக்கத்துறையினர் இன்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் குத்தகை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்ததாக தெரிகிறது.
இதனிடையே ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது.
- முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.
இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. நேற்று நடந்த விசாரணையை அடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
- கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.
12 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று நள்ளிரவு சிவசங்கரை அதிரடியாக கைது செய்தனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
- மனுவை பரிசீலித்த கோர்ட்டு சிவசங்கரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த 12-ந் தேதி முதல் அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த கோர்ட்டு சிவசங்கரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.