என் மலர்
நீங்கள் தேடியது "Elephant attack"
- தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
- மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.
இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார்.
- எதிர்பாராதவிதமாக யானை சக்திவேலை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை பன்னியர் தோட்டம் அருகே உள்ள அய்யப்பன் குடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
இவர் தேவிகுளம் வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார் வந்தது.
இதனை தொடர்ந்து யானைகளை விரட்டும் பணிக்கு சக்திவேல் அனுப்பப்பட்டார். எந்தப் பகுதியில் யானை வந்தாலும் வழக்கமாக அங்கு சக்திவேல் அனுப்பி வைக்கப்படுவாராம்.
அதன்படி நேற்று காலை சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.
மேலும் காலடியில் போட்டும் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டி அடித்தனர். பின்னர் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவிகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.
அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.
தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அன்னியாலம், தாசரிப்பள்ளி பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா தோட்டம் வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி பலியானார்.
தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- யானையால் தூக்கி வீசப்பட்ட பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார்.
அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
யானையால் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், காட்டு விலங்குகளை தனியாக விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், வால் அசைக்கும் போது யானையின் அருகில் செல்ல வேண்டாம். அது அச்சுறுத்தலாக உணர்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.
Girl tries to make friends with an elephant and finds out pic.twitter.com/DD5jGR6qjk
— non aesthetic things (@PicturesFoIder) February 21, 2024
- யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது51). தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து அந்த வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்தது. யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து, அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேவர்சோலை சர்க்கார் மூலை பகுதியை சேர்ந்தவர் மகாதேவ். இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவர்சோலை பகுதியில் வந்த போது அவரை ஒற்றை யானை வழிமறித்தது.
யானை நிற்பதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோட அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவரை யானை தாக்கி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.
பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மகாதேவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது.
- இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வனப்பகுதி அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது வன விலங்குகள் தாக்குதலை சந்தித்து வருகின்றனர். இதில் சில நேரம் உயிர்ப்பலியும் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஆன்மேரி, தனது ஆண் நண்பருடன் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவர்கள் வேகமாக சென்றபோது, யானை முட்டித் தள்ளிய மரம் சாய்ந்து விழுந்தபோது ஆன்மேரி அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோகம் மறைவதற்குள் அதே பகுதியில் யானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டு பகுதி யை சேர்ந்தவர் எல்தோஸ் (வயது 45), தொழிலாளி. இவர் வேலை முடிந்து தனது நண்பருடன் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, காட்டுயானை வழிமறித்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். ஆனால் அந்த யானை விரட்டிச் சென்று எல்தோசை பிடித்து தாக்கியது. இதில் உடல் பாகங்கள் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது பற்றி பலமுறை புகார் கூறியும் வனத்துறை அலட்சியமாக உள்ளது என குற்றம்சாட்டினர். இன்று அதிகாலை 2 மணி வரை போராட்டம் நீடித்தது. அந்த பகுதியில் அகழிகள், வேலிகள் அமைப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருகிற 27-ந் தேதி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதன்பிறகு போலீசார், பலியான எல்தோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் எல்தோஸ் குடும்பத்தினரிடம் இன்று காலை அரசின் ரூ.10 லட்சம் இழப்பீடுக்கான காசோலையை வழங்கினார்.
- விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
- பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு யானைகளை பயன்படுத்தும் போது, அவை துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்தது.
இந்தநிலையில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட யானை மிரண்டு பக்தர்களை தூக்கி வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் புதியங்கடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த விழாவில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றில் ஸ்ரீகுட்டன் என்ற யானையும் அடங்கும். அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பக்தர்கள் கூட்டத்தில் உலா வந்தன. அப்போது யானை ஸ்ரீகுட்டன் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மிரண்டது. அப்போது அந்த யானை சில பக்தர்களை துப்பிக்கையால் பிடித்து தூக்கி சுழற்றி எறிந்தது.
இதனால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.
மேலும் யானை மீது அமர்ந்திருந்தவர்களும் கீழே விழுந்தார்கள். இந்த சம்பவத்தில் 17 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். யானை தூக்கி வீசிய பக்தர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவில் விழாவில் பக்தர்களை தூக்கி வீசிய யானை ஆக்ரோஷமாக ஒரே இடத்தில் நின்றபடி இருந்தது. நள்ளிரவு 12.30 மணி முதல் ஆக்ரோஷமாக இருந்த யானையால் பக்தர்கள் பீதியடைந்தனர். பின்பு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அந்த யானையை பாகன் அமைதிப்படுத்தினார்.
அதன்பிறகே அங்கு இயல்புநிலை திரும்பியது. கோவில் விழாவில் பக்தர்களை யானை தூக்கி வீசிய சம்பவத்தால் மலப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
- இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
சுவாமி வீதி உலா நடைபெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதைக்கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். யானைகள் இடையிலான மோதலில் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்நிலையில், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் டைந்தனர்.
தகவலறிந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் பலியானோர் உடல்களைக் கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது43). டீக்கடைக்காரர். சம்பவத்தன்று காலை கடையை திறக்க சென்ற அவரை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் என்ற கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன், குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் யானையின் நடமாட்டம் தெரியவில்லை. இருப்பினும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
ஓவேலி பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற மாலு தனது கணவர் குஞ்சாலியுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை மும்தாஜை துதிக்கையால் தூக்கி சாலையில் போட்டு காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண்முன்னே மனைவி யானை தாக்கி இறந்ததை பார்த்து அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டு கொண்டே ஊருக்குள் ஓடினார்.
அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, யானையை விரட்டினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் உடலை எடுக்கவிடமால் போராட்டம் நடத்தினர். இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் பலியான நிலையில் நேற்று இரவு மீண்டும் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்துள்ளது, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக உள்ளது. இங்கு சுற்றி திரியும் யானையை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
- கொடைக்கானலில் யானை தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது.
- கொடைக்கானலில் யானை தொடர் அட்டகாசம்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம்.இங்குள்ள மக்கள் அதிகமாக விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி வந்து செல்லும் யானைக் கூட்டங்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அங்குள்ள விவசாயிகளை கவலையடையச்செய்து வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக பணப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் மகேந்திரன் என்ற விவசாயியின் நிலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் யானையால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வாழை பயிரிட செலவு செய்த தொகை கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டது. பல மாதங்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி இருந்த யானை நேற்று நள்ளிரவில் செல்வராஜ் என்பவர் கடையை சேதப்படுத்தியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
தொடர்ந்து இதுபோல் விவசாயிகளுக்கும் பொது–மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடும் யானைக் கூட்டத்தை நிரந்தரமாக விவசாய நிலங்களுக்கு அப்பால் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல முறை தொடர்ந்து ஆண்டு–க்கணக்கில் விவசாய நிலங்களை சேதப்படு–த்திவரும் யானையை விரட்ட நிரந்தர தீர்வு காண வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
- பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார்.
- மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சிங்காரா வனசரக எல்லைக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது80).
இவர் தனது மகன் கணபதி என்பவருடன் வசித்து வருகிறார்.
பெருமாள் தனது வீட்டில் 16-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகே உள்ள வனத்திற்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம்போல பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
இரவு வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கணபதி வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிகள், அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து வாழைதோட்டம் கிராமத்தையொட்டிய வனப்பகுதிகளுக்குள் தேடி பார்த்தனர். இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று காலை 2-வது நாளாக மாயமான பெருமாளை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்காபுராம் காவல் பகுதிக்குட்பட்ட கல்லட்டி கூடுதல் காப்புக்காட்டில் பெருமாள் இறந்த நிலையில் கிடந்தார்.
அவரது உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆடு மேய்க்க சென்ற அவரை யானை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.
யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.