என் மலர்
நீங்கள் தேடியது "Financial"
- தீக்குளித்து உயிரிழந்த சுங்க சாவடி ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
- விசிக சார்பில் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் குன்னம் அடுத்துள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது44) இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுங்க சாவடி அதிகாரியிடம் தனக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். ஆனால் விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோபால் ஒருநாள் மட்டும் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து சுங்க சாவடி அதிகாரிகள் கோபாலை ஐந்து நாட்கள் பணி நீக்கம் செய்தனர். இதில் மன உளைச்சலால் கோபால் இரு தினங்களுக்கு முன்பு தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், உயிரிழந்த கோபால் மனைவி முனியம்மாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்க கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மண்டல செயலாளர் கிட்டு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முனியம்மாள் வீட்டிற்கு சென்று நிதி உதவி அளித்தனர்.
- உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
- இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திரிகா புட் கிளை நிறுவனமாக செயல்பட்ட டி.எப்.எல்., மியூச்சுவல் (புட் பிளஸ்) நிறுவனத்தை சென்னையை சேர்ந்த ராமன், இந்திரா, புவனா நடத்தினர். கலப்படமற்ற உணவு பொருள் தயாரிப்புடன் சிறுசேமிப்பு திட்டத்தையும் தொடங்கினர்.
பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். முதிர்வு காலத்திற்கு பிறகும் தொகை வழங்காமல் நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர். இதையடுத்து பரமக்குடியை சேர்ந்த நாகலட்சுமியின் புகாரின்பேரில் 2018ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2022 நவம்பர் 24-ந்தேதி முதல் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் இதுவரை 496 பேர் ரூ.1.22 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மேலும் வேறு எவரேனும் முதலீடு செய்து பாதிக்கப்பட்டிருந்தால் ராமநாதபுரம் நேருநகர் 4-வது தெருவில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகார் செய்யலாம். இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
- மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.
சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தமகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.40 லட்சம் நிதி
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் .
திருச்சி,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வட்டார வணிக வளமையம் மூலம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 80 பேருக்கு ரூ. 40 லட்சம் நிதியை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார்,ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகம், மகளிர் திட்ட ஏ.பி.ஓ. நிர்மலாதேவி, டி.ஆர்.பி. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
பெண்கள் வருங்காலத்தில் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்ற இலக்கை விதைத்து உங்களுடைய முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் . கலைஞர் தான் தருமபுரியில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை ஆரம்பித்தார். அதன் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது பல லட்சக்கணக்கில் மகளிர்உதவி குழு எண்ணிக்கையை பெருக்கினார்.
தற்போது சிறப்பு திட்டம் செயலாக்கும் என்பதை அமைச்சர் உதயநிதி தான் மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகிறார். அது உங்கள் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையாகும். அரசின் பல்வேறு உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.
காலை உணவு திட்டம் உங்களை கருத்தில் கொண்டு தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 80 மகளிருக்கு 35 சதவீதம் மாநிலத்தில் 40 லட்சம் கடன் உதவி வழங்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் . அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் உங்களது தேவையை உணர்ந்து தான் என்பதை அறிந்து கொள்வதுடன் அதனை செயல்படுத்தும் விதமாக பெண்கள் இருக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தமிழ்ச்செல்வி மகளிர் வட்டார இயக்குனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
- வெடி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினருக்குஅ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி
- வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் மதுரா விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடா வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி யினை வழங்கினார். நிகழ்வில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெய லிங்கம், மாவட்ட மாணவ ரணிச் செயலர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமி நாதன், வடிவழகன் உள்பட பலர் இருந்தனர்.
- பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
- இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.
எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.
அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.
எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக ''மிசன் வத்சல்யா'' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகள், தந்தையை இழந்த குழந்தைள், எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நிதிஆதரவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது மாதம் ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் பெற்றோர்களது வருமானச்சான்று நகர்புறத்தில் ரூ.96ஆயிரமும் கிராமபுறத்தில், ரூ.72 ஆயிரமும் இருக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி செல்லும் குழந்தைகளாகவும், குழந்தைகள் இல்லம், விடுதிகளில் தங்காமல் பெற்றோர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளாகவும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். உதவித்தொகை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அல்லது 18 வயது முடியும் வரை வழங்கப்படும்.
உதவித்தொகையினை பெற உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம், 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் கிசான் திட்ட நிதி உதவிக்கு காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
மதுரை
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சிறு-குறு விவசாயிகள் பலன் பெறும் வகையில் பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை (பிரதமர் கிஷான்) என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 2.15 லட்சம் விவசாயிகள், இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1.26 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் போலி பட்டா-சிட்டா உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பேர் போலி ஆவணங்கள் வாயிலாக உதவித்தொகை பெறுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் பெயர், பிரதமர் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நடப்பாண்டுக்கான 6000 ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் அந்தத் தொகை இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மதுரை மாவட்டத்தில் 'பிரதமர் கிசான்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்து க்காக விண்ணப்பித்து இருந்த பலர் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணை முறையாக இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் கிஷான் திட்ட இணையதளத்தில் அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அன்னாரின் வங்கி கணக்குகளில் தலா 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
- ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
பெரம்பலூர்:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திடவும், தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காகவும் அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
- வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.
பரமத்தி வேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதியுதவி கோரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ்கண்ட தகுதிகள் உடைய, கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து புனரமைப்பிற்கான நிதி உதவி கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படிகிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில்www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை -IIமற்றும் III ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்தனை மூலம் செலுத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.