என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flooding"

    • தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.

    இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.

    இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விருதுநகர் அருகே திருச்சுழி ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.

    சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கண்மாய், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    விருதுநகர்

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழைபொழிவு குறைந்ததால் வறட்சி நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவில்லி புத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் மா, பலா, வாழை மற்றும் ஊடு பயிர் களை நூற்றுக் கணக்கான ஏக்கரில் பயிரிட்ட னர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யவுடன் விருதுநகரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப் பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாலை நேரங்களில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அய்யனார் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, செண்பகத்தோப்பு மீன் வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோவில் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    நேற்றும், இன்று அதி காலையும் மலைப்பகுதி களில் அதிக மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக மேற்கண்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அங்குள்ள கண்மாய், குளங் களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.இதேபோல் வத்திரா யிருப்பு, சதுரகிரி மலை பகுதி யிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் அணையில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. 47.56 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் 28 அடியாகும்.

    திடீரென பெய்து வரும் மழையால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விவசாய பணிகள் தொய்வுடன் நடந்த வந்த நிலையில் மழை காரணமாக விறுவிறுப்படைந்துள்ளது.

    • வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கண்மாய்கள் நிரம்புகின்றன.

    வாடிப்பட்டி

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நிரம்பத் தொடங்கின. வாடிப்பட்டி அருகே குட்லா டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடக நாச்சி புரத்தில் மீனாம்மாள் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு குட்லாடம்பட்டி தாடக நாச்சி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஓடை வழியாக வந்து நிரம்பும்.

    அங்கு தேக்கி வைக்கப் பட்ட தண்ணீர் பின்னர் மதகுகள் வழியாக விளை நிலங்களுக்கு நீர் பாசனத் திற்கு பயன்படுத்தப்படும். கண்மாய் நிரம்பிய பின் மாறுகால் ஏற்பட்டால் ஓடை வழியாக அப்புசெட்டி கண்மாய்க்கு சென்று அங்கு நீர் நிரப்பப்பட்டு அதன் பின் நாகர் குளம் கண்மாய், செம்மினிபட்டி புதுக்குளம், கொட்டமடக்கி கண்மாய்கள் நிரம்பும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாதம்பட்டி கண்மாய் சென்று அங்கிருந்து பெரியார் பாசன கால்வா யில் கிழக்கு பகுதியில் உள்ள துருத்தி ஓடை வழியாக சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்று சேரும்.

    இந்த நிலையில் குட்லாடம் பட்டி மீனாம்மாள் கண்மாய் கரையில் மதகின் அருகில் அரிப்பு ஏற்பட தொடங் கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கரையை அரித்து சரிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள தென்னந் தோப்பு களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்ப ணைகள் நிரம்பி அப்பு செட்டி கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. பின்னர் நாகர்குளம் கண்மாய் நிரம்பி செம்மினிபட்டி புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது.

    இதுகுறித்த தகவலறிந்த கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, குட்லாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரவன், கச்சைகட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கிராம உதவியாளர்கள் ஜெயக்குமார், பாலு அந்தப் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    • குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
    • வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.

    தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

    மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
    • வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 74 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரண மாக ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    இன்று காலையில் ஐந்தரு வியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர்.

    காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

    மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ×