search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former"

    • தியாகராசர் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.
    • பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் 1981- 84-ம் கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் பலர் தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றிகூறினார்.

    • இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
    • சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.

    உடுமலை:

    சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-

    இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.

    ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.

    சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.

    ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.

    எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.

    • 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் கடந்த 21.6.2000 அன்று விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 64), பிரபாகரன் (65), ஹரிதாஸ் (62) ஆகிய 3 விவசாயிகளை கைது செய்து, கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று கூடலூர் குற்றவியல் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளும் மேரக்காயை பறித்து விற்பனை செய்து வருகின்றனர்

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்கா சோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மேரக்காய் விவசாயம் நடந்து வருகிறது.

    இங்கு பயிரிடும் மேரக்காய்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்தும் செல்கின்றனர்.

    தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளும் மேரக்காயை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் இருக்கும் அதே வேளையில், மேரக்காயுக்கு குறைந்த விலையே கிடைப்பது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது மேரக்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை பறித்து கோத்தகிரி, ஊட்டி மற்றும் கோவையில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் விலை குறைந்து காணப்படுகிறது. முன்பு சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.20 முதல் ரூ.25 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் ரூ.10 முதல் ரூ.13 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    இது எங்களுக்கு கவலையாக உள்ளது. மிகக் குறைந்த விலை கிடைப்பதால், விவ சாயிகள் வண்டி வாடகை, பணியாட்கள் கூலி,முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெலாப்பாடி கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த தும்பல் வனத்துறை அதிகாரிகள், நேற்று அருநூற்றுமலை பெலாப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், வன அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார்.

    அந்த நபரை மடக்கி பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் விவசாயி பழனிசாமி (வயது31) என்பதும், அவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியை தும்பல் வனத்துறையினர் காரிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டின் மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்வதை எதிர்த்து போராட்டம்
    • விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்

    கருமத்தம்பட்டி :

    கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் கிராமம் கோதபாளையத்தில் தமிழ்நாடு மின் தொட ரமைப்பு கழகம் சார்பில் அரசூர் முதல் ஈங்கூர் வரையில் 230 கிலோ வாட் உயர் மின் கோபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பல இடங்களில் திட்டப் பாதையை நேராக செயல்படுத்தாமல் குறுக்கும், நெடுக்குமாக மின் கோபுரங்கள் அமைக்க ப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சிலர் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சோமனூர் அடுத்த கோதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. விவசாயி. இவரது வீட்டின் மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் வகையில் வீட்டின் அருகிலேயே மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மின் கோபுரத்தை அமைப்பதில் முறைகேடு என்றும், நேராக மின்கோபுரம் அமைக்காமல் அங்கொன்றும், இங்கொன்றும் அமைக்கப்ப ட்டு உள்ளது. இதனால் இவற்றை சரி செ ய்யக்கோரி கிருஷ்ணவேணி கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று 8-வது நாளாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.அவருக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும், விவசாயிகளும், உறவினர்களும் அவருடன் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கிருஷ்ணவேணியின் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். 

    • ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினர்.
    • உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் மற்றும் குழு உறுப்பினா்கள் மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, எம்.வி.பிரபாகரராஜா, சா.மாங்குடி ஆகியோா் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் கூறியதாவது:-

    ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல, அரசினா் தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளா்களை சந்தித்து, தொழிலாளா்களின் கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயா்வு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தோம். இக்கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கேரட் பயிரிடும் விவசாயிகளை நேரில் சந்தித்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் விதைகள் வழங்கி பயிரிடும் முறையினை கேட்டறிந்து, விவசாயிகளுக்கு அரசு மூலம் செய்ய வேண்டிய தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

    விவசாயிகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தரம் பிரிக்கும் எந்திரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் பேரவை மனுக்கள் குழுவால் பெறப்பட்ட 60 மனுக்கள் மீதும், ஏற்கெனவே நிலுவையிலிருந்த 10 மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரா்களுக்கு துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் செயலாளா் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், மனுக்கள் குழுவின் துணைச் செயலாளா் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 200 பேர் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.
    • வடகோவையில் மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள வனவியல் விரிவாக்க நர்சரியில் பெற்றுக்கொள்ளலாம்.

    கோவை:

    தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக கோவை வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் மதுக்கரை, வட கோவை, மேட்டுப்பாளையத்தில் நாற்றங்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இவற்றை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, ஆனை மலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர், கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-

    பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ்கோவையில் மொத்தம் 10.36 லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டு மட்டும் மொத்தம் 1.50 லட்சம் மரக்கன்று கள் வழங்கப்படும்.

    இதற்காக வட கோவையில் 85 ஆயிரம், மதுக்கரையில் 15 ஆயிரம், மேட்டுப்பாளையத்தில் 50 ஆயிரம் மரக்கன்று கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்களுக்கு நெல்லி, நாவல், புங்கம், செம்மரம், ஈட்டி, புளியமரம், கொடுக்காபுளி, வேம்பு உள்ளிட்ட மரங்களும், விவசாயிகளுக்கு தேக்கு, மலைவேம்பு, மகோகனி, சவுக்கு உள்ளிட்ட மரங்களும் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் நட்டு வளர்க்க மொத்தமாக மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டாலும் வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படுவோர் வடகோவையில் மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள வனவியல் விரிவாக்க நர்சரியில் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 200 பேர் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் முழு வீச்சில் வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகள் தேவைப்படுவோர் 97916 61116 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சி,

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆழியாறு விவசாயிகள் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி. நீரும், கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீரும் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். பிஏபி திட்டத்தில் தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமை யாக எடுத்துக ்கொள்ளமு டியவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசனம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

    இந்தநிலையில், இங்கி ருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இன்று ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரிஆழியாறு அணை பாசன விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இங்குள்ள 10 சட்டமன்ற தொகுதி விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், இதன் தாக்கம் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என விவசாயிகள் தெரிவி த்தனர். 

    • ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கூட்டுறவு சங்கத்தின் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன். கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையுடன் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ . அடங்கல் சான்று. பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக் கடன்கள் பெற்று பயனடையலாம்.

    சென்ற ஆண்டில் 49,671 விவசாயிகளுக்கு ரூ.509.14 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன்களை உரிய தேதியில் திருப்பி செலுத்தினால் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. வட்டியில்லா பயிர்கடன்களை அனைத்து விவசாயிகளும் பெற ஏதுவாக கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2971184, திருப்பூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2216355, தாராபுரம் சரக துணைப்பதிவாளரை 04258-221795 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்துச் சென்ற விவசாயியை தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.

    2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

    ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுவை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலில் தனது விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரை பாராட்டினர். #MinisterKamalakannan
    காரைக்கால்:

    புதுவை வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

    இவர் அமைச்சராக இருந்தாலும் எளிமையாக காணப்படுவார். அமைச்சர் பணி ஒருபுறம் இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபடுவார். அதன்படி அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காரைக்கால் அம்பகரத்தூரில் இருக்கும் விவசாய நிலத்துக்கு சென்றார். வேட்டி- சட்டையை கழற்றி விட்டு சாதாரண விவசாயி போல் கைலி அணிந்து கொண்டார்.



    பின்னர் வயலில் இறங்கி மண்வெட்டியால் நிலத்தை சீர் செய்தார். அதனை தொடர்ந்து நாற்று கட்டுகளை தூக்கி சென்றார். அந்த நாற்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரை பாராட்டினர்.

    இது குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறும்போது, நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும்.



    உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில், உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்ற பாரதியார் பாடல்களுக்கேற்ப நான் விவசாயப்பணியில் ஈடுபடுகிறேன் என்றார். #MinisterKamalakannan
    ×