என் மலர்
நீங்கள் தேடியது "Gas pipeline"
- எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
- முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.
கோலாலம்பூர்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கியாஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் எரிவாயு குழாய் மூலம் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில் அங்குள்ள எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
அப்போது சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியது. இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல இருந்தது. தொடர்ந்து பரவிய தீயால் அங்கு சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகின.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதேசமயம் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.
- நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
'பைப்லைன் கேஸ்' திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி திருப்பூர் தொழில் துறையினருக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தலைவர் சார்ஜா துரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் ஈஸ்வர மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
யூகவணிகர்கள் சூதாட்ட முறையில் பஞ்சுவிலையை முறைகேடாக கையாள்வதை தடுக்க, மத்திய அரசு, பருத்தி ஆலோசனைக்குழு மற்றும் மத்திய பருத்திக்கழகங்கள் மூலம் கண்காணித்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும். இதனால் நூல் விலையை சீராக வைத்திருக்க முடியும்.
பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு பதிலாக ஆடையாக தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது, வேலைவாய்ப்பு, மதிப்பு கூட்டு, பொருளாதார ஏற்றம், அந்நிய செலாவணி என பலவகையிலும் பல்வேறு நன்மைகளும், வளர்ச்சியும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்து, அதற்கேற்றவகையில் தொழில் துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மெட்ரோ ரயில் மூலம் அருகில் உள்ள நகரப்பகுதிகளை இணைத்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல அடுக்கு மேம்பாலங்களை உருவாக்குதல், அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டித்தருகின்ற திருப்பூர் போன்ற தொழில் நகரத்திற்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து, திருப்பூரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.
தொழிலாளர்களின் அடிப்படைத்தேவையை கருத்தில் கொண்டு பாரதப்பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள 'இ.எஸ்.ஐ.,' மருத்துவமனை வசதியை துரிதமாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும். திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'பைப்லைன்'எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மானிய விலையில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தற்போதுள்ள தொழில் நிலையை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் பழைய நிலையை நீடித்து உதவ மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டணங்களை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வது என்றும்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வங்கிக்கடன் தள்ளுபடி சலுகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உதவிட வேண்டும் என்றும்,
ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பில் பெரிய நிறுவனங்களுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதால் தனி மனித வருமானம் உயர்வதில் சிக்கல் ஏற்படுவதை மத்திய அரசு உணர்ந்து, தொழில் நிறுவனங்களின் பொருளாதார தன்மையை உணர்ந்து போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஜுபிடர் குணசேகரன் நன்றி கூறினார்.
- சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.
எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
- பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல்லடம் :
பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறையாக பணிகளைச் செய்யாமல் பகல் நேரங்களில், குழிகளை தோண்டுவது, தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ளசின்னக்கரை பகுதியில் சென்ற சரக்கு லாரி ஒன்று எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்டது.ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் குழியில் இருந்து லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்ப ட்டது. எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முறை ப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
கோவை,
தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுமென இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (குழாய் பதிப்பு பிரிவு) டி.எஸ் நானாவரே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், கோவையும் ஒன்று. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். உட்பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதித்து வருகிறோம்.
கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணி 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். மற்ற மாற்று எரிபொருள்களைவிட இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) 30 சதவீதம் விலை குறைவானது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே, கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், குழாய் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தற்போது நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு 6.50 சதவீதமாக உள்ளது.
இதை 2030-ம் ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மலைப்பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பது சிரமம். திரவ பெட்ரோலிய வாயுவானது (எல்பிஜி) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டுக்கு தேவையான இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இங்கேயே போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
- விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் 36-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோ நெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு தற்போது ஐ.டி.பி.எல். திட்டத்தின் கீழ் அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பாரத் பெட்ரோலிய நிறுவனம் பதித்து வருகிறது. அதாவது பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, எப்படி ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோமீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.
கோவை முதல் கர்நாடகாவின் தேவன கொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அன்றே விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.
- மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
- விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
ஐ.டி.பி.எல்.நிறுவனம் கோவை முதல் கர்நாட காவின் தேவனகொந்தி வரை எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்தை அமைத்து கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் பெறவில்லை.
சட்டவிரோதமாக ஒரு அறிவிப்பை மட்டும் வழங்கி கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோநெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு , அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பதித்து வருகிறது. பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோ மீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.
கோவை முதல் கர்நாடகாவின் தேவனகொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டரில் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதனை கண்டித்தும், எரிவாயு குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 60-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் நேரடியாக கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய நகர கியாஸ் வினியோக திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் நகரங்கள் முழுவதிலும் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்யும் வசதியை செயல்படுத்துவதாகும்.
இந்த திட்டம் டெல்லி, மும்பை நகரங்களில் உள்ளது. தற்போது சென்னையிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை குழு ஆலோசனை நடத்தி வந்தது.
9-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவில் சென்னையில் பைப் லைன் மூலம் கியாஸ் சப்ளை செய்ய சாத்திய கூறு கண்டறியப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதற்காக கியாஸ் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
சென்னையில் தனியார் நிறுவனங்களான தோரண்ட்டு கியாஸ் நிறுவனம் மற்றும் ஏ.ஜி.பி. எல்.என்.ஜி. மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு பைப் லைன் கியாஸ் திட்டத்தை செயல்படுத்த அதானி கியாஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.
சராசரியாக ஒரு கிலோ கியாசுக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் 16¼ லட்சம் வீடுகளுக்கு பைப் லைன் கியாசும், 557 கியாஸ் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது டெல்லி நகரின் வீட்டில் பைப் லைன் இணைப்பு கொடுக்க ரூ. 5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் மாதந்தோறும் கியாஸ் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பைப் லைனில் மீட்டர்கள் பொருத்தப்படும்” என்றார்.
இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நேரடி கியாஸ் வினியோக திட்டத்தை 2020-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. #CookingGas #GasPipeline
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், தெற்கு காட்டூர், ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சியின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தெற்கு காட்டூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 500 மீட்டர் தூரத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயுவும் தண்ணீரும் சேர்ந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறி உள்ளது.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஓ.என். ஜி.சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ராமநாதபுரம் தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாயு கசிவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால் குழாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வெடிப்பை சரி செய்து விட்டனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இனிமேல் வெடிப்பு ஏற்படாதவாறு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews