என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas Israel War"

    • இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது
    • காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். தற்போது வரை இஸ்ரேலில் உயிரிழப்பு 1,400-ஐ தாண்டியுள்ளது. பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேவேளையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்பை கண்டிக்காத காங்கிரஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் அது.

    காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதை பார்த்து இருப்பீர்கள். ஹமாஸ் தாக்குதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நேரம், ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதை கூட்டத்தின்போது ஒவ்வொருவரும் தெரிவித்தனர். ஆனால், ராகுல் காந்தி தெலுங்கானாவில் தேர்தல் வர இருப்பதால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார். காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்ததை நான் உங்களுக்கு சொல்கிறேன். அதன்பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து சமநிலையில் இருந்திருக்கலாம். அதாவது, நாங்கள் ஹமாஸ் அமைப்பை கண்டிக்கிறோம். அதேவேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம் என்ற நிலையை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.

    இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். காங்கிரஸ் மிகவும் பழமை வாய்ந்த கட்சி. அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றும் சொல்ல முடியும். இரண்டும் மாறுபட்ட விவகாரம். ஓவைசியின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டுள்ளதால், ஹமாஸ் உடன் இணைந்து நிற்கிறது.

    ராகுல் காந்தி வாகன ஓட்டுநர் என்பதால், ஒருநாள் காசா சென்று பைக் ஓட்டலாம், அல்லது டிராக்டரில் ஏறலாம்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    • தரைவழி தாக்குதலுக்கு முன் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்
    • மேற்கு கரை பகுதியிலும் தாக்குதலை நடத்தியுள்ளது

    இஸ்ரேலுக்கும்- பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையடுத்து போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

    காசா மீது தொடர்ந்து 16-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்து உள்ளது.

    இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. லட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.

    இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தரைவழி தாக்குதலுக்கு முன்பாக காசாவில் வான்வழி தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படைகளின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகரி கூறும்போது, காசாவில் பாதுகாப்பு ஆட்சியை மாற்றுவதற்கான, மூன்று கட்ட நடவடிக்கையின் 2-ம் கட்டத்துக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

    தரைவழி தாக்குதலுக்கு முன்பாக சிறந்த சூழ்நிலையை உருவாக்க காசா மீதான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட உள்ளது. சிறந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட போரில் நுழைய இருக்கிறோம்.

    வான்வழி தாக்குதல்களை அதிகரிக்கிறோம். இதன் மூலம் காசாவுக்குள் நுழையும் போது ஆபத்தை குறைக்கிறோம். நாங்கள் காசா பகுதிக்குள் நுழைவோம், ஹமாஸ் அமைப்பினரின், உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக செயல்பாட்டு மற்றும் தொழில்முறை பணியை தொடங்குவோம் என்றார்.

    இதன் மூலம் காசா மீதான வான்வழி தாக்குதல் தீவிரமடையும் சூழல் உள்ளது.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அங்கு இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கு கரையில் உள்ள மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மசூதியில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் தஞ்சமடைந்து இருந்தனர். அவர்கள் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதற்கு அங்கு இருந்தனர் என்றும், இதனால் மசூதி வளாகத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது
    • எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவி பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தவும், தங்களை தயார் படுத்தி வருகிறது இஸ்ரேல்.

    காசா முனையைத் தவிர மேற்கு கரை, லெபனான் எல்லை ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து எல்லையில் 200 கி.மீ. தொலைவில் உள்ள பகுதி தபா.

    இதற்கு முன்னதாக ஒருமுறை இஸ்ரேல் ஏவுகணை எகிப்து பகுதியை தவறுதலாக தாக்கியது. இந்த தாக்குதல் தவறுதலாக நடைபெற்றது என இஸ்ரேல் ராணுவம் உடனடியாக அறிவித்தது.

    ஆனால் தபா மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்ற போதிலும், இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்தது. அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்பும், நடத்தவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது
    • சுமார் 20 லட்சம் மக்கள் காசாவில் தவித்து வருகிறார்கள்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

    போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் (Staff), சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

    காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், "எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது
    • காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

    இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

    இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தீர்மானத்தில் ஹமாஸ் பெயர் குறிப்பிடப்படவில்லை
    • அக்டோபர் 7-ல் தாக்குதல் நடத்திய ஹமாஸ் கண்டனத்திற்கு தகுதியானது

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது.

    193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபையில் தீர்மானத்தை ஆதரித்து 120 வாக்குகள் பதிவாகின. 14 வாக்குகள் எதிர்த்து பதிவாகின. 45 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

    45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா சார்பில் ஏன் வாக்களிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா பட்டேல் கூறுகையில் ''இந்த விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக தெளிவான தகவலை அனுப்பும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும்போது டிப்ளோமேட்டிக் மற்றும் உரையாடலுக்கான வாய்ப்புகளை விரிவாக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

    மேலும் இந்தியா சார்பில் "இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பெயர் குறிப்பிடவில்லை. தீர்மானத்தில் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காசா முனையில் தடையற்ற மனிதாபிமான அணுகல் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹமாஸ் கண்டத்தினத்திற்கு தகுதியானவை. அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்களுடைய கவலையெல்லாம், அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை பற்றியதுதான். பயங்கரவாதம் கொடியது. அதற்கு எல்லை, தேசியம், இனம் தெரியாது.

    நியாயப்படுத்தும் தீவிரவாத செயல்களுக்கு உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம், சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்" எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆத்திரம்
    • இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் வருகை தந்துள்ளனரா என பாஸ்போர்ட் மூலம் சரிபார்ப்பு

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாலஸ்தீனர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் உள்ள, பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரஷியாவில் உள்ள டகேஸ்டன் பிராந்தியத்தின் தலைநகர் மகாசகலா விமான நிலையத்திற்கு நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து, ரஷியாவின் ரெட் விங்ஸ் விமானம் வந்தடைந்தது.

    இதில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். ஏற்கனவே இஸ்ரேல் மீது கோபத்தில் இருந்த சிலர், கும்பலாக விமான நிலையத்திற்குள் புகுந்தனர். விமானத்தை தரையிறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீன கொடியுடன் விமான ஓடுதளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காவல்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கார்களை முற்றுகையிட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை பிடித்து, அவர்களுடைய பாஸ்போர்ட்களை சரிபார்த்தனர். அப்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவரா? யூத மதத்தைச் சேர்ந்தவர்களா? என பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    திடீரென கும்பல் ஒன்று விமான நிலையத்திற்குள் புகுந்ததால், பணியாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிகழ்வால் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் ஓடுதளத்தில் இருந்து கும்பல் வெளியேற்றப்பட்டனர். எனினும், நவம்பர் 6-ந்தேதி வரை இந்த விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த செய்தி வெளியானதும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ''போராட்டக்காரர்களிடம் இருந்து இஸ்ரேல் மக்களை ரஷியா அதிகாரிகள் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    டகேஸ்டன் பிராந்தியம் இஸ்லாமியர் நிறைந்ததாகும்.

    • இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், பாதிப்படைந்தோர் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை
    • வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி

    ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. சில ஏவுகணைகள் தவறுதலாக குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து, வெடிகுண்டு தாக்குதலால் தீப்பிடித்து எரியும் கட்டடங்கள், முகாம் மீது தாக்குதல் போன்றவற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கடந்த 25 நாட்களாக தொய்வின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால பலத்த காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படடது. இந்த நிலையில் நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது.

    இரட்டை குடியுரிமை , வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.

    இருந்த போதிலும், போருக்கு மத்தியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

    • காசாவில் பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • மனிதாபிமான உதவி கிடைக்காததால், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்து வருகிறது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பிரசார உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை என்று தெரிவித்துள்ளார். இது பிணைக்கைதிகளை மீட்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள், மருத்துவமனைகள், முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் காசா மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சையின்றி பரிதவிக்கிறார்கள்.

    இதனால், உலகம் முழுவதும் இருந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை குறைக்கவில்லை.

    இந்த நிலையில்தான், பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற, காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

    ஆனால், போர் நிறுத்த அழைப்பு என்பதை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    • தரைவழி தாக்குதலை விரிவு படுத்திய நிலையில், காசாவை சுற்றி வளைத்துள்ளது இஸ்ரேல்
    • போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதிரடி

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக அன்றைய தினத்தில் இருந்து, தற்போது வரை இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்குதலை தொடர்ந்து, கடந்து சில நாட்களாக தரைவழி தாக்குதலை விரிவு படுத்தி வந்தது.

    இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காசா நகரை சுற்றி வளைத்து விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் (கொலை செய்யப்பட்டு உடல்கள் கருப்பு பைகளில் வைக்கப்பட்டு) சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எச்சரித்துள்ளது.

    காசா சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் குறித்த கருத்து மேசையில் இல்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காசா பகுதியில் சண்டை உச்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது.

    அகதிகள் முகாம், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக பெரும்பாலான அமைப்புகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேல், தாக்குதலை தொய்வின்றி நடத்தி வருகிறது.

    • ஞாயிற்றுக்கிழமை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் காசாவை இரண்டாக பிரித்தது இஸ்ரேல்.
    • தரைவழி தாக்குதலை முழுமையாக செயல்படுத்த தயாராகி வருகிறது இஸ்ரேல்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

    ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

    ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர்

    தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவில் நடைபெற்று வரும் சண்டை, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம்.
    • காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் காசாவை வடக்கு, தெற்கு பகுதிகள் எனப் பிரித்தது. பின்னர் வடக்கு காசாவில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து முன்னோக்கி சென்று வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்கள் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக அறிவித்தது.

    நேற்று காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நெருக்கிப்பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சண்டை நடைபெற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவை அடையும் வகையில் ஓட்டம் பிடித்துள்ளனர். பல மைல் தூரம் நடந்து சென்று தெற்கு காசாவை அடைந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர்களின் டாங்கிகள், வாகனங்களை அழித்தோம் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜபாலியா நிவாரண முகாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ×