என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Navy"

    • படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது
    • ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள் வந்து செல்வதாகவும் இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    அதன்படி ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை, தர்காஷ் கப்பல் வழிமறித்து நிறுத்தியது.

    இதையடுத்து கடற்படையினர் அந்த படகை சோதனையிட்டனர். அப்போது அதில் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் அதிக அளவில் இருந்தன. விசாரணையில் அதில் 2,386 கிலோ ஹாஷிஷ் என்ற போதைப்பொருளும், 121 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • கப்பல் தயாரிப்பு நிறுவனம், ஒரே ஆண்டில் 3வது பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது.
    • 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது.

    மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படைக்காக 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையை சேர்ந்த மனைவியர் நலச் சங்கத் தலைவர் மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பல் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் ஹம்பிஹோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 


    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ். இக்சாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும்.

    கடந்த 60 ஆண்டுகளில், ஜிஆர்எஸ்இ நிறுவனம் 800க்கும் மேற்பட்ட கப்பல்களை உருவாக்கி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டவை இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, நட்பு நாடுகளான மொரீஷியஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண் மாலுமிகள் பெறும் அதே பயிற்சி முறைகளை பெண் மாலுமிகளும் பெறுவார்கள்.
    • அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்க்க முயற்சி

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    இந்திய கடற்படையில் முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னிவீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் பெண் மாலுமிகள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    • நிகழ்ச்சியில் ஆலோகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்.டி. பட்டபடிப்பு வழங்கவும், எஸ்.ஆர்.எம். மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, காட்டங்குளத்தூர் எஸ். ஆர். எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர். எம். மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் சு. பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.

    • கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.
    • எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன.

    மும்பை:

    இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர் மூழ்கி கப்பல்கள் ரஷியா, ஜெர்மனி தயாரிப்புகள் ஆகும்.

    இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2007-ம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழூகி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.

    முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐ.என்.எஸ். காந்தேரி, 2021-ல் ஐ.என்.எஸ். கரஞ்ச், ஐ.என்.எஸ். வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.

    இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.

    ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும்.

    எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

    இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

    கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.

    இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

    விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.

    • இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
    • ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.

    இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

    ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.

    1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.

    நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

    காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.

    1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

    • 8 அதிகாரிகளும் பல போர் கப்பல்களுக்கு தலைமை தாங்கியவர்கள்
    • பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டது

    இந்திய கடற்படை போர்கப்பல்களுக்கு தலைமை தாங்கி, உயர் பதவி வகித்த, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புமேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் அதிகாரி ராகேஷ் எனும் 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள், அரபு நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணியாற்ற சென்றனர்.

    இவர்கள் 8 பேரும் இத்தாலிய தொழில்நுட்பத்தில் உருவாகும், மறைந்திருந்து தாக்க கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகள் குறித்த செயல்பாட்டில் அந்நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வந்தனர்.

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், கத்தார் அரசாங்கம் இவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து சரிவர தகவல்கள் இல்லாமலிருந்தது. இவர்களின் ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது.

    கடந்த மார்ச் 2023ல் இவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளது.

    இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அதில் அத்துறை தெரிவித்திருப்பதாவது:

    நாங்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைத்ததும் கத்தார் அதிகாரிகளுடன் இது குறித்து பேச உள்ளோம். இந்த வழக்கிற்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். சட்டதிட்டங்களின்படி அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய்த்து வருகிறோம்.

    இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்திருக்கிறது.

    கடந்த ஜூன் 8 அன்றே இந்த 8 பேரில் ஒரு அதிகாரியின் சகோதரி, இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அவசர தலையீட்டை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது.
    • கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.

    இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது. விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    • இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
    • போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சோமாலியா:

    அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.

    அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.


     இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான “சீயாங் எங் ஹாங் 03” என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது.
    • கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சீனா தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்து வருகிறது.

    மேலும் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்திய பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    இதற்கிடையே தென் தமிழகத்தில் பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. தூத்துக்குடியில் முக்கிய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தவாறு சீன உளவு கப்பல்களால் மிக எளிதாக தகவல்களை திரட்ட முடியும். சீன ஆய்வு கப்பல்களில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி வரை உள்ள இந்திய ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்கள் அத்துமீறி நுழைவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு வர இருந்த சீன ஆய்வு கப்பலை இந்தியா கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உறவில் ஏற்பட்டு உள்ள சிக்கலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. மாலத்தீவை மையமாக வைத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கி இருக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான "சீயாங் எங் ஹாங் 03" என்ற கப்பல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவி இருக்கிறது. நேற்று காலை அந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்திருக்கிறது.

    அந்த கப்பல் மாலத்தீவை நோக்கி செல்வதாக தெரிய வந்துள்ளது. அது அடுத்த வாரம் மாலத்தீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கப்பலில் ஆண்டெனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், ராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் எலக்ரானிக் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன ஆய்வு கருவிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது.

    இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தற்போது அந்த கப்பல் மாலத்தீவு உதவியுடன் இந்திய பெருங்கடலில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சீன ஆய்வு கப்பல் எத்தகைய பணிகளில் ஈடுபடும்? எத்தனை நாட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு வந்த நிலையில் சீன உளவு கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கப்பலின் நகர்வை இந்திய உளவுத்துறையும், இந்திய கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    ×