என் மலர்
நீங்கள் தேடியது "malaysia"
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் யார்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு? இந்தியாவில் அவற்றை எங்கெங்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தார் என பல கோணங்களில் கிடுக்குப்பிடி விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே கடந்த 1-ந்தேதி பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வட்ந்ஹ விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
- திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு
மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
- மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம்.
இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
- இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி
மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த வீடியோவில் காணப்படுவது:-
அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.
அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.
அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).
இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.
"எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.
சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர்.
- ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டை சங்கத்தினர் 3 நாள் பயணமாக மலேசியா செல்கின்றனர். கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இண்டஸ்ட்ரியல், பிளாஸ்டிக், சித்தா, பேப்பர், என்ஜினியரிங் ஆகிய 5 தொழில்துறை சார்பில் தொழில்களை பெருக்கு வதற்காகவும், தொழில் முன்னேற்றம் அடைவ தற்காகவும் மலேசிய தூதரகம் வர்த்தக பிரிவு வான் அகமத் தர்மேஷ் இடிஸ் ஏற்பாட்டில் 15 பேர் கொண்ட குழு இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல உள்ளனர்.
இதுகுறித்து கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-
கப்பலூர் தொழிலதிபர் சங்கத்தின் சார்பாக 15 பேர் கொண்ட குழு மலேசியா வர்த்தகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நாளை செல்கிறோம். கப்பலூர் தொழிற்பேட்டை அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இதனை கருதுகிறோம். மலேசியா பயணம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மலேசியாவில் உள்ள வர்த்தகத்துடன் 25 பேர் கொண்ட குழு சேர்ந்து நாங்களும் வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோம்.
மலேசியாவில் உற்பத்தி யாகும் பொருட்களை கோலாலம்பூரில் மலேசிய அரசு கண்காட்சி வைத்துள் ளது. அதனை பார்வையிட செல்கிறோம். மலேசியா பயணம் கப்பலூர் தொழில் பேட்டையை விரிவுபடுத்த உபயோகப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
- உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.
இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
- மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.
கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."
"மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.
முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.
- மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
- அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.
உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.
மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
2 Helicopters with the Royal Malaysian Navy collided earlier today over the Town of Lumut during a Rehearsal for Annual Naval Parade resulting in the Death of all 10 of the Crewmembers; the Helicopters, a AgustaWestland AW139HOM (M503-3) and a AS550 Fennec (M502-6) both Crashed… pic.twitter.com/Z0IwdpMVbG
— OSINTdefender (@sentdefender) April 23, 2024
- பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.
ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
- பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.
செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.
ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.
மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.
அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- ‘ஏ’ பிரிவில் இந்தியா முதலிடமும், ஜப்பான் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
- ‘பி’ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின.
மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியா (6 புள்ளி), தாய்லாந்து (3 புள்ளி), சீன தைபே (0) முறையே 3 முதல் 5 இடங்கள் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின. வங்காளதேசம் (5 புள்ளி) 3-வது இடமும், சீனா (4 புள்ளி) 4-வது இடமும், ஓமன் (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை கோட்டை விட்டன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டுகிறது.
லீககில் தங்களது 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற (தாய்லாந்து, ஜப்பான், சீன தைபே, தென்கொரியா) இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ள மலேசிய அணி இறுதிப்போட்டியை எட்ட கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. முன்னதாக நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
- அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.