என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M.K.Stalin"

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் உதயமாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அவர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையொட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கு தென்காசி குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த இடத்தை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேற்று பார்வையிட்டார். அங்கு சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    தொடர்ந்து இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.

    • 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார்.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக தென்காசி கணக்கப்பிள்ளை வலசை அருகே உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வை யிட்டார். அப்பொழுது அவருடன் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வருகின்ற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார். சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் தென்காசியில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு விழா நடைபெறும் இடத்திற்கு காலை 10 மணிக்கு வர உள்ளார். பின்னர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை நேரில் வழங்குகிறார்.

    நிகழ்ச்சிகள் முடிந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்கிறார். இருப்பினும் ரெயில் மூலம் தென்காசிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழி நெடு கிலும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விழா மேடை அமைக்கும் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரனுடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனிதுரை, ரவிசங்கர், திவான் ஒலி, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷெரிப், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் ரஹீம், தொழிலதிபர் மாரிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி தற்பொழுது தென்காசி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார்.
    • இந்தியாவிலேயே தலை சிறந்த சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    234 தொகுதிகளிலும் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஒரு அணிக்கு செயலாளர் உண்டு என்றால், அது உதயநிதி ஸ்டாலின்தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது. இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து தன்னை அவர், முன்னிலை படுத்தி வருகிறார். வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார், அதற்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார். 


    தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளதாவது: ஒன்றரை ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டுகளில் தலைவர் தளபதி, உங்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்ய இருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பவர் யார் என்றால், இந்தியாவிலேயே தலை சிறந்த சட்ட உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு.
    • இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியுடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 


    மக்கள் பணியே மகேசன் பணி என செயலாற்றி வருகிறோம். கோவில் என்பது மக்களுக்காகத்தான், கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆதாரம் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை சிலர் கூறி வருகின்றனர்.

    அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், முதலமைச்சரையே வேகமாக வேலை வாங்க கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்து வருகிறார். தமிழகத்தில இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் நடைபெற்று வருகிறது.

    மணமக்கள் ஒன்றோ இரண்டோ குழந்தையுடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும், அளவான குழந்தைகளை பெற்று அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு பெருமளவு செலவு செய்து வருகிறது. முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னோம். அது பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றும் மாறியது. தற்போது நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
    • இந்த வாய்ப்பினை பிரதமர் பயன்படுத்தி கொள்வார் என நம்புகிறேன்.

    இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

    நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு 'பசுமை காலநிலை நிறுவனத்தை' உருவாக்கி உள்ளோம்.

    உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம். இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும். அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம் உள்ளிட்டவைகளை உலக அளவில் கொண்டு செல்ல இந்த வாய்ப்பினை பிரதமர் பயன்படுத்தி கொள்வார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
    • அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

    சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவீட்டர் பதிவில், கூறியிருப்பதாவது

    ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார், புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    நலத்திட்ட உதவிகள்

    இந்நிலையில் நாளை மறுநாள்(8-ந்தேதி) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிறார்

    இதற்காக நாளை இரவு சென்னையில் இருந்து பொதிகை விரைவு ரெயிலில் புறப்படும் அவர் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தென்காசி வந்தடைகிறார். அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகை சென்றுவிட்டு விழா மேடைக்கு செல்கிறார்.

    ஐ.ஜி. ஆய்வு

    இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை பார்வையிட தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று தென்காசி வந்தார்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் செல்ல உள்ள பாதை வழியாக குற்றாலம் சென்றார். அங்கு அவர் தங்க உள்ள அறையை பார்வையிட்ட தென்மண்டல ஐ.ஜி., தென்காசி அருகே கணக்கப்பிள்ளை வலசையில் விழா நடைபெற உள்ள பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார்.

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.


    • வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.

    புதிய உழவர் சந்தை

    நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் 5-வது உழவர்சந்தை அமைக்க திட்டமிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டது.

    பணிகள் முடிவு

    மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு, சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை.

    திறப்பு விழா

    இந்நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். உழவர் சந்தையில் நடந்த விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.

    • செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை.
    • கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கோரிக்கை.

    கால்நடைகளுக்கான தடுப்பூசி கோரி, மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்) கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப் பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    • பள்ளியில் படிக்கும் போது நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை.
    • மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவில்லை.

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன். பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம் ஆகும். இந்த பள்ளியில் சேர்வதற்கு தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை, இந்த பள்ளியில் நான் படித்த போது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

    பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக் கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கும் போது நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை. இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன், தற்போதும் பேருந்தில் தான் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக வருவேன் என்றோ நினைத்துப் பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் அது தற்போது நடந்துள்ளது. முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் நான்தான். மேயராக இருந்த போது இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

    தற்போது முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராகவே வந்துள்ளேன். முதலமைச்சராக என்னை உருவாக்கியது இந்த பள்ளி தான். இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

    அனைத்தையும் அரசு மட்டுமே வழங்க முடியாது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள், முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    • நான் இந்த அளவுக்கு தகுதி பெற அன்பழகன்தான் காரணம்.
    • திமுக தலைவராக என்னை முன்மொழிந்தவர் அவர்தான்.

    மறைந்த தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலினை போல், இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடையில் பாராட்டியவரும் அவர்தான். வாரிசு, வாரிசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன்தான்.

    கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் க.அன்பழகன். கட்சியின் செயல் தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான்.கலைஞர் மறைவுக்கு பிறகு என்னை தலைவராக முன்மொழிந்தவரும் அவர்தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க அனைத்துக்கும் காரணம் அவர்தான். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ, அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதையும் மறந்துவிடமுடியாது.

    திராவிட மாடல் ஆட்சி கொள்கையை, வலிமையை கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். இதை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்ற கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.

    இதற்காக இளைஞர் அணி, மாணவர் அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே என பட்டித்தொட்டிகளெல்லாம் பாசறை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதுதான் க.அன்பழகனுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

    • நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
    • 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.

    ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×