search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temple"

    • வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
    • இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டெல்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு சுற்றுலா பஸ் சேவையை திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், திருப்பனந்தாள் காசி திருமடம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த சிறப்பு சுற்றுலா பஸ்சானது கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் சிங்காரவேலர் கோவில், பொரவச்சேரி கந்தசாமி கோவில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் (நாகப்பட்டிணம் மாவட்டம்), சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகிய 6 கோவில்களையும் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சானது பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்சில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக பஸ்சில் பயணச்சீட்டு பெற்று க்கொண்டு பயணிக்க இயலாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.

    இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.

    இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    • திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

    இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. 

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நெல்லையில் இருந்து மூலைகரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மெஞ்ஞானபுரம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்கள், உள்ளூர் பக் தர்கள் சுவாமியை எளிதாக தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இன்று காலையில் சங்கரன்கோவில் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 

    • சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 6 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை திறக்கப்படும்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    காங்கயம்:

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சிவன்மலை முருகன் கோவில் தரப்பில் கூறியுள்ளதாவது:-

    சந்திர கிரகண நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ஏற்படுவதை அடுத்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
    • ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!

    வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

    வேல் பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!

    ஈட்டி அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

    ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது.

    இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!

    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

    முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு.

    ×