என் மலர்
நீங்கள் தேடியது "NIA Raid"
- சோதனைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உணவு, தங்குமிடம் மற்றும் பணம் வழங்கினர்.
பயங்கரவாத ஊடுருவல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இன்று (புதன்கிழமை) ஜம்மு முழுக்க பல்வேறு இடங்களில் சோதனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவற்றைச் சேர்ந்த தீவிர பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஊடுருவல்களுக்கு ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களை தளமாகக் கொண்ட தொழிலாளர்கள் (OGWs) மற்றும் பிற பயங்கரவாத கூட்டாளிகள் வசதி செய்தனர், அவர்கள் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவு, உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தை வழங்குவதில் ஈடுபட்டிருந்தனர் என்று அதிகாரி கூறினார்.
- டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.
- பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பிரபல தாதாக்களான நவீன் தபாஸ், சுனில் பலியான் என்ற தில்லு தாஜ்புரியா உள்ளிட்ட 6 பேரை கடந்த வாரம் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தது.
அதில் இவர்கள் சிறையில் இருந்தவாறு பல்வேறு குற்ற செயல்களை செய்தது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்திருக்கலாம் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.
மேலும் பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.
இந்த கும்பலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சர்வதேச பயங்கரவாத தொடர்பு பற்றிய தகவல்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 20 நபர்களின் இடங்களில்தான் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 கட்டங்களாக 102 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்வது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று நடந்து வரும் சோதனையில் பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
இன்று பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சமூக விரோத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இந்த சோதனையை அதிரடியாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது.
- போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
1500 கோடி ரூபாய் போதை பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில் கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பண பரிவர்த்தனையில் இலங்கை மற்றும் சென்னையை சேர்ந்த குருவிகள் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட கடலோர எல்லை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரக படகு ஒன்றை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். அதில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்காக நிதி திரட்டும் முயற்சியில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த சபேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக விழுஞ்சியம் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர், மேலும் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்த ஏழு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடி சோதனையாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்தும் பல்வேறு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக குன்றத்தூரை சேர்ந்த பிளாரன்ஸ் கோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் ஆகியோரின் இல்லங்களிலும் மண்ணடி பகுதியில் இயங்கி வரும் ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் ஆகிய தனியார் விடுதிகளிலும், பாரிமுனை ஈவினிங் பஜார் பகுதியில் இயங்கி வரும் ஒரு கடையிலும் என எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணமாக மாற்றி பல்வேறு நபர்களுக்கு சிறிய தொகையாக வங்கி கணக்குகளில் செலுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் இதுபோன்று பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறித்து வங்கி கணக்குகள் மூலம் ஆய்வு செய்த தேசிய புற்றுநோய் முகமை அதிகாரிகள் அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி சென்னை வேளச்சேரியை சேர்ந்த நீசா பாத்திமா என்பவருக்கு சொந்தமான ஈவினிங் பஜார் பகுதியில் உள்ள கடையில் சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 300 கிராம் தங்க நகைகள், 1000 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடையில் பணியாற்றிய முகமது இலியாசிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அந்த கடையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து மண்ணடி பகுதியில் இருக்கக்கூடிய மூன்று தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரஞ்ச் பேலஸ் தனியார் விடுதியில் 12 லட்சம் ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக இலங்கையில் இருந்து குருவியாக சென்னைக்கு வந்து ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக மண்ணடி பகுதியில் இயங்கி வரும் சில தனியார் லாட்ஜூகள் உதவுவதாக அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சென்னையில் அவ்வப்போது குருவிகள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போது சில நபர்கள் பின்தொடர்ந்து அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்றது. இவர்கள் எங்கு யார் வங்கிக்கு இந்த பணத்தை செலுத்துகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர்கள் சிறிய அளவிலான செலுத்தப்படும் தொகைகள் ஹவாலா பண பரிமாற்றம் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு வங்கி கணக்கிற்கு மொத்தமாக பணம் செலுத்தும்போது அது வருமான வரித்துறை, வங்கி அதிகாரிகள் கவனத்திற்கு சென்று சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க பல்வேறு தனிநபர்களிடம் சிறிய தொகையாக இந்த பணத்தை கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு இந்த பணத்தை செலுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் விழுஞ்சியம் கடற்பகுதியில் பிடிபட்ட போதை மற்றும் ஆயுத பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர். அதன் அடுத்த கட்டமாக இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் ரொக்க பணமும் 300 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளயில் முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர்.
பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய 4 பேர்களிடம் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.
சென்னை:
தழிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. குழுவின் அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பின்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் இது தொடர்பாக பலமுறை சோதனை நடைபெற்றுள்ளது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி, மண்ணடி ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது சென்னையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர் தாங்கல் புதிய காலனியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் (வயது 55). இவர் கடந்த 8 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் வட சென்னை மாவட்ட செயலாளரான இவர் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து அப்துல் ரசாக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் வசித்து வந்த இவர் பின்னர் அங்கிருந்து இடம் மாறி திருவொற்றியூர் தாங்கல் பகுதிக்கு வந்து குடியேறி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் முகமது கைசர் வீட்டிற்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
பின்னர் முகமது கைசரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனை நடைபெற்றது. மதுரையில் இருந்து வந்த 3 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இதையொட்டி வீட்டு முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சோதனையில் அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய தடயங்கள் கிடைத்ததை தொடர்ந்து விசாரணைக்காக சாதிக் அலியை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டு முன்பு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் குவிந்தனர். அவர்கள் சாதிக் அலி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல தலைவர் யாசர் அராபத் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது.
விமானத்தில் இருந்து இறங்கிய தஞ்சையை சேர்ந்த முகம்மது அசாப் என்பவரை தேசிய பாதுகாப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விமான நிலைய வளாகத்திலேயே தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போன்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்றைய சோதனையின்போது சென்னையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பழனியில் முகமது கைசர் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். தேனி, திருச்சி, மதுரையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன்மூலம் 6 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரையில் ஏற்கனவே கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.
நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரிடம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக்குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன.
- ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. அதில் எஸ்.எப்.ஜே. என்ற அமைப்பும் இருக்கிறது. இந்த அமைப்பு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் மத்திய அரசு அந்த அமைப்பை தடை செய்து இருந்தது.
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான எஸ்.எப்.ஜே.யின் தலைவராக குர்பத் சிங் உள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி.
கடந்த ஆண்டு சண்டிகரில் உள்ள மாடல் புரைல் ஜெயில் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவன். மேலும் லூதியானா கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவன். மேலும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் தலைவர் பல்வீர் சிங்கை கொல்லவும் சதி திட்டம் தீட்டியவன்.
ஜஸ்விந்தர் சிங்கை ஜெர்மனியில் வைத்து கைது செய்தனர். அவன் மீது பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் இருக்கிறது.
ஜஸ்விந்தர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி அளித்து பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஆதரவு தெரிவித்த இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, குப்வாரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. சோதனையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும்.
- தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.
என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.
சிறுபான்மை இயக்கங்களை அடக்க, அரசியல் காழ்புணர்ச்சியோடு விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய மொபைல் போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை.
அமலாக்கத்துறை போல் என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கினை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ.யின் முகத்திரையை கிழிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
தாம்பரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாநிலம் அல்ல. சோதனை என்ற பெயரில் தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எஸ்.டி.பி.ஐ.க்கு எதிரான நடவடிக்கை என்பதை விட தமிழ்நாட்டில் அரசியல் களம் பதட்டம் அடைய வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள்.
அமலாக்கத்துறையை ஏவுகிறார்கள். தற்போது என்.ஐ.ஏ. என்கிறதை புலனாய்வு துறையை அரசியல் தலைவர்கள் இல்லங்களில் நுழைய வைத்து பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளை தேடுவது சட்டப்படியான நடவடிக்கைதான். ஆனால் வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. 'இந்தியாவின்' பிரதிநிதி விரைவில் மணிப்பூர் செல்ல இருக்கிறோம்.
ஐகோர்ட்டு பதிவாளர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர், காந்தி படங்கள், சிலைகள் மட்டும்தான் நீதிமன்ற வளாகங்களில் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்காரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையாக இருக்கிறது.
இந்த சுற்றிக்கையை அல்லது ஆணையை உடனடியாக உயர்நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார்.
- சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமான செயல்பாடுகள், இறையாண்மைக்கு குந்தகம் விடுக்கும் வகையிலான பயிற்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் ராமேசுவரத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள மீனவ கிராமமான தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (வயது 30). இவரது தந்தை அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு 6 மாதங்கள் வரை தங்கியிருந்த அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.
துபாய் நாட்டில் சையது யூசுப் தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சொந்த ஊர் திரும்பிய சையது யூசுப்பை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவரது செயல்பாடுகள், யார், யாருடன் பேசி வருகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு தங்கச்சிமடம் கிராமத்துக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற 7 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சையது யூசுப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
4 மணி நேர சோதனைக்கு பிறகு அங்கிருந்த புறப்பட்ட அதிகாரிகள் எந்தவித ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை. ஆனால் சையது யூசுப்பிடம், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
மீனவ கிராமத்தில் அதிரடியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியது அப்பகுதியினரை பரபரப்புக்கு உள்ளாக்கியது.