search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy crops"

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார்.

    கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டீபன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், தெற்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துகிரு ஷ்ணன் நன்றி கூறினார்

    • காட்டு பன்றிகள் கூட்டம் 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
    • களக்காடு பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் கென்னி டேவிஸ் (வயது36). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு பகுதியில் உள்ளது.

    காட்டுபன்றிகள் அட்டகாசம்

    நேற்று முன் தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது தோட்டத்துக்குள் சென்று 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அரசின் விதை பண்ணையில் இருந்து விதை வாங்கி பயிர் செய்யப்பட்டதாகும்.

    அறுவடை செய்த பின்னர் நெல்லை அரசின் விதை பண்ணைக்கு வழங்க வேண்டும். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் நாசம் செய்து விட்டன. களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    விவசாயிகள் புகார்

    வனப்பகுதிக்குள் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல், மலையடிவார புதர்களில் பதுங்கியுள்ளன. இவைகள் இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

    காட்டுபன்றிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேலகுன்னத்தூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

    தற்போது அந்த நெற்ப யிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மேலகுன்னத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை நாசம் செய்தது.

    இன்று காலை வயல்பகுதிக்கு சென்ற விவசாயிகள் நாசமான பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, நாங்கள் கஷ்டப்பட்டு அதிகளவு நிலத்தில் நெல் நடவு செய்துள்ளோம்.

    விவசாயிகள் கோரிக்கை

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. ஆனால் காட்டுப்பன்றிகள் புகுந்து அதனை நாசம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். 

    • கடந்த 40 ஆண்டுகளாக திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
    • திரு நாட்கதிர் ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள காசி விசுவநாதர் சமேத உலகம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நன்ன கரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நெல் வயலில் இருந்து தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொதிகை குடும்பர் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுக்கும் வேளையில் ஈடுபட்டு வந்தார்.அப் போது திரு நாட்கதிர் எடுக்கும் திருவிழா பற்றி கல்வெட்டில் உள்ள தகவல் படி தென்காசி கே.பி. மருத்துவமனை டாக்டர் சங்கர குமார் கோவில் நிர்வாக அதிகாரி முருகனை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டபோது கல்வெட்டில் உள்ள தகவல் உண்மைதான் இந்த விழா கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது தாங்கள் ஏற்பாடு செய்தால் மீண்டும் அந்த பாரம்பரிய வழக்கப்படி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் நன்னகரத்தில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு திருநாட்கதிர் எடுத்து வரும் விழாவை சிறப்பாக செய்யலாம் என தெரிவித்தார்.

    அதன் பின்னர் டாக்டர் கே.பி.சங்கர குமார் திருநாட்கதிர் எடுக்கும் விழா ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் செய்தார். இதனை அடுத்து நேற்று காலை நன்னகரத்தில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு சொந்தமான நெல் வயலில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு மேளதாளம் முழங்க நெற்கதிர்கள் அறுவடை செய்து நன்ன கரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து அங்கிருந்து மேளதாளம் முழங்க குற்றாலம் தென்காசி மெயின் ரோட்டில் உள்ள திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடத்தினர்.

    பின்னர் ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காசி விசுவநாதர் கோவில் நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்ற பின்னர் நெற்கதிர்கள் திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த பூஜையில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கலையரசன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொதிகை குடும்பர், சென்னை பேங்க் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, தி.மு.க. தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், கிழாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மணிமுத்தாறு அணை மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.
    • 12-ந்தேதி அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    மணிமுத்தாறு அணைக்கட்டு மூலம் நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் நான்கு 1, 2, 3, 4 என 4 ரீச் மூலம் பாசனம் வசதியை வரையறுத்து உள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனம், நேரடி பாசனம், தாமிரபரணி பாசனம் என 3 வகையான பாசன விவசாயத்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நேரடி பாசனம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், பொட்டல் பகுதியில் உள்ள 2,600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாயை பொறுத்தவரை வருடத்தில் 9 மாதங்கள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டும் நான்கு ரீச்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். ஒரு வருடம் முதல் இரண்டு ரீச்களுக்கும், மறு வருடம் கடைசி இரண்டு ரீச்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும்.

    கடந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் மணிமுத்தாறு பாசனத்தில் விவசாயப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடம் இறுதியில் மணிமுத்தாறு அணையில் 3 மற்றும் 4-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ராதாபுரம், திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி மணிமுத்தாறு அணையில் இருந்து 3 வது மற்றும் 4-வது ரீச்சில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து கடந்த 12-ந்தேதி மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தினமும் 400 கனஅடி நீர் வீதம் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டது.

    நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த தண்ணீர் கொண்டு பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்து இருந்தனர்.

    திட்டமிட்டது ஒன்று நடப்பது வேறென்று என்பது போல் தற்போது விவசாயிகள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. தண்ணீர் திறக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை நம்பி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தங்கள் கண் முன்னால் காயும் பயிரை காப்பாற்ற வழித்தெரியாமல் கருகிய நெற்பயிரில் கால்நடைகளை விட்டு மேய்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட இறுதி எல்லையான சிந்தாமணி வரை மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான மீரான்குளம் குளத்திற்கு வரும் வழியிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இது தூத்துக்குடி மாவட்ட மணிமுத்தாறு பாசன விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணிமுத்தாறு தண்ணீர் பாயும் பகுதிகளில் தூர்வாரப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கால்வாய் கரைகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடைசி வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் காய்ந்து கிடக்கிறது. மேலும் தாமிரபரணி பாசனத்தில் மருதூர் மேலக்கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சடையநேரி கால்வாய் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால் அங்கேயும் அரசு சுமார் சுமார் 20 கோடிக்கு மேல் செலவழித்தும் பலனில்லாமல் உள்ளது. தற்போது தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டமும் எந்தவிதத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கை கொடுகக போகிறது என்பது முழுமையாக தெரியவில்லை.

    இந்த பகுதி விவசாயிகளுக்கு தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு பாசனம் என இரண்டு பாசனம் இருந்தும் கூட விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வளர்த்த பயிர்களை தனது கால்நடைகளை வைத்து விவசாயிகளே தனது கண் முன் அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மணிமுத்தாறு ஆற்றின் 80 அடி கால்வாயை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும். மணிமுத்தாறு தண்ணீரை முறையாக பகிர்மானம் செய்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுககு கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகளும் கோரிககை விடுத்துள்ளனர்.

    • தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது.
    • ஏக்கருக்கு 6 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் வட்டாரத்தில் நடப்பு பிசான மற்றும் நவரை கோடை பருவத்தில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:-

    தாக்கப்பட்ட இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெள்ளை நிற காகிதம் போல் காணப்படும். இலைகளின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களை சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும். கத்தரிகோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெ ண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    தூர்களிலிருக்கும் புழுக்களை கீழே விழ செய்ய, இளம் பயிர்களின் குறுக்கே கயிறு போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலில் உள்ள நீரை வடிய செய்யலாம். பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஏக்கருக்கு பென்தோயேட் 50 சதவீதம் ஈசி 400 மிலி அல்லது கார்போபியூரான் 3 சதவீதம் சிஜி 10கிலோ தூவ வேண்டும்.

    இலை சுருட்டுபுழு தாக்கப்பட்ட நெற்பயிரின் தோகைகள் மற்றும் இலைகளில் புழுக்கள் சுரண்டி திண்பதால் இலைகளில் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து அவற்றினுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி திண்ணும். மேலும் தோகைகளை பிரித்து பார்த்தால் பச்சை நிற கண்ணாடி போன்ற புழுக்களும் அவற்றின் கழிவுகளும் காணப்படும்.

    பொதிப்பருவத்தில் இலைசுருட்டுபுழு தாக்குதல் ஏற்பட்டால் நெல் மகசூல் இழப்பு ஏற்படும். வயலில் வெள்ளை நிற தாய்ப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டு இருக்கும். வயல் வரப்புகளை சீராக்கி அதனை சுத்தாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா போன்றவற்றை தேவைக்கு அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.

    பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுதலை தவிர்க்க கார்போபியுரான் அல்லது போரேட் குருணைகள் மற்றும் பைரித்ராய்டு வகை பூச்சிகொல்லிகளான சைபர்மெத்ரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் பயிர் நடவு செய்த 37, 44, 51-வது நாட்களில் மொத்தம் 3 முறை ஒரு எக்டருக்கு 5 சிசி (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்டவும், விளக்கு பொறிகளை வைத்து தாய்பூச்சிகளை கவர்ந்து அதனை அழிக்கலாம். மேலும் வயலில் தழை வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி உண்ணும் பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஒரு எக்டருக்கு கார்டேப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி ஒரு கிலோ அல்லது அசார்டியாக்ஷடின் 0.03 சத ஒரு லிட்டர் கைத்தெளிப்பான் காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.
    • பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து ரசீதை பெற வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    மழைவிட்டு 4 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. கடந்த 10-ந் தேதி காலை மழை விட்டது. நேற்றுடன் 4 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை.

    மாவட்டத்தில் பெருபாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நட்ட சம்பா நெற்பயிர்கள், நடவு செய்ய வேண்டிய பாய் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால், பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வாராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே வடிகால்களை தற்காலிகமாக தூர்வாரி மழைநீரை வடிகட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×