என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni uthiram"

    • பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
    • கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.

    இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.

    இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

    இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.

    அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    • ஏப்ரல் 1-ந்தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    திருவாரூர்திருவாரூர் ஆழி தேரோட்ட விழா வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

    மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கதக்கது. ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதை முன்னிட்டு இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பங்குனி உத்திரவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பங்குனி உத்திர பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தத்தை செய்து வைத்தனர்.

    • திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழாவின் போது திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்துமுருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 29-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5 45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதி நடக்கிறது.
    • தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.

    திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது
    • கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது.

    சப்தவிடங்க தலங்களில் முதன்மையானதும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் விளங்குகிறது.

    இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. 96 அடி உயரத்தில் வீதி நிறைந்த அகலத்தோடு நடைபெறும் தேர்த் திருவிழாவை காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இத்தேரோட்டம் நடைபெறுவதால் இதனை ஆழி தேரோட்டம் என்றும் பக்தர்கள் புகழ்கின்றனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    அதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா தொடங்குவதை முன்னிட்டு கோவிலில் கொடி மரத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விழா உற்சவம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து வரும் 27-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வெள்ளி வாகனம், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
    • 17-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 8-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று இரவில் தொடங்கியது. இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி இன்று அதிகாலை 3.20 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர். அப்போது நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    10-ம் நாளான வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜண்ட் பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏப்ரல் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 29-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக அன்று காலை 10.25 மணிக்கு நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கி மாலை லட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரர் பூஜை, துவஜாரோகனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூதவாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ந் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மறுநாள் 6-ந் தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

    • மார்ச் 21-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
    • திருவிழா நாட்களில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

    நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான காய்சினிவேந்தப் பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது.

    தொடர்ந்து சயனகுரடு மண்டபத்தில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் தாயார்களுடன் எழுந்தருளினார். கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் 21-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் செய்துள்ளனர்.

    • 23-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது.
    • ஏப்ரல் 6-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இவ்விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் எட்டுத் திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    இதையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நாளை காலை புறப்பட்டு கொடிமரம் அருகே வருவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவர்.

    அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் காலை 6.25 மணிக்கு மேல் காலை 7.50 மணிக்குள் மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். மாலை சுவாமி, அம்மன் கேடயத்தில் புறப்பட்டு 4-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    விழாவின் 2-ம் நாளான நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 20-ந்தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 24-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 27-ந்தேதி வெள்ளை சாற்றி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 8-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
    • 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வருகின்ற 26-ந்தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27-ந்தேதி விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது

    திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. 28-ந்தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30-ந்தேதி அன்ன வாகனத்திலும், 31-ந்தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2-ந்தேதி தங்க மயில் வாகனத்திலும், 3-ந்தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந்தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6-ந்தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7-ந்தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9-ந்தேதி திருத்தேரிலும், 10-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ந்தேதி பங்குனி உத்திரம், 6-ந்தேதி சூரசம்கார லீலை, 7-ந்தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள் திருக்கல்யாணம், 9-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது.
    • சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி.

    மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

    மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள்.

    பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்!

    அரங்கனை விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதுமட்டுமா? அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கியதும் இந்த பங்குனியில்தான் என்கிறது ஸ்தல புராணம்.

    சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும்.

    பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்!

    ×