என் மலர்
நீங்கள் தேடியது "pitru tharpanam"
- பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவிலின் பின்பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்ன கத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் உள்ள கூடுதுறையில் பொது மக்கள் பக்தர்கள் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி தர்ப்பணம், எள்ளும், தண்ணீரில் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழக்கம்.
இந்த நிலையில் இன்று கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் என பலர் பவானி கூடுதுறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பரிகார பூஜைகளை செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்களும் அதே போல் சாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டதால் கூடுதுறை பகுதி முழுவதும் கூட்டம் அதிகளவில் நிறைந்து காணப்பட்டது.
இதனையடுத்து பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.
மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் இன்று காலை அதிகளவில் வந்திருந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
- தை அமாவாசை நாளை வருகிறது.
- முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
தை அமாவாசை அன்று பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தை அமாவாசை நாளை(சனிக்கிழமை) வருகிறது. அதன்படி அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன் பிறகு கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நாளை தை அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை நடக்கிறது.
அதைதொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபடுவார்கள். அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து வருடத்தில் ஐந்து முறை மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மூன்று முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி, அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.
தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
- வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில், ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு, காகத்திற்கு படைத்து சாப்பிடுவர். இது நடைமுறையில் இருந்தாலும் அவற்றில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது.
தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் நம் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா். அதே போல் தனக்காக உயிர்நீர்த்த ஜடாயு என்ற கழுகு அரசனுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்து தர்ப்பணம் கொடுத்தார் என்கிறது புராணங்கள்.
செய்யக்கூடியவை
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
- பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
- முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
இந்துக்களின் முக்கிய விசேஷநாட்களில் தை அமாவாசையும் ஒன்று.
இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.
அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள்மற்றும் வேதமந்திரம்ஓதுவார்களி டம்தங்களதுமுன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.
பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநா தீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தை அமாவாசையையொட்டிஇன்று அதிகாலை முதல்மாலைவரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.
அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
- கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி யில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலிலும், தை அமாவாசையையொட்டி இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் வரை திருவிழா நடக்கிறது. 9-ந் திருவிழா வரை காலை, மாலை சுவாமி பல்வேறு திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று தை அமாவாசை திருவிழாவையொட்டி பிற்பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இலாமிட்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனியும், 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தரும் நடக்கிறது.
11-ம் திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், 1 மணிக்கு 2-ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல், சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும், கற்பூர தீப தரிசனமும் நடைபெறுகிறது.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- காவிரி ஆற்றில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.
மாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு ஆண்டில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள், கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
தை அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் ஐயாறப்பர் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூலபாணிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சாமி வீதி உலா 4 வீதிகள் வழியாக நடந்தது.
இதை போல் கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவிய தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. பல தற்காலிக கடைகள் முளைத்தன.
மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்களிடம் தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து கடலில் புனித நீராடினர். இதைப்போல் வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோவிலின் திருக்குளத்தில் புனித நீராடி கோவிலில் படிக்கட்டில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
காலை முதல் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
- கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசை நாட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.
இந்த நாளில் புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள்ளும், தண்ணீரும் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்த்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசி நமக்கு கிடைக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் நீர்நிலைகளில் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் வழக்கமாக பொதுமக்கள் ஆடி, தை அமாவாசை நாட்களில் குடும்பத்துடன் வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி காலை 5 மணி முதல் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் அங்கு வந்து படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் எள்ளும், நீரும் இறைத்து நீராடினர்.
இன்று காலை முதலே பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடை மருதூர், வீரவநல்லூர், நடுக்கல்லூர் வழியாக மாநகர பகுதிக்குள் தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடங்களில் உள்ள கல் மண்டபங்களில் மக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், தைப்பூச மண்டபம், மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ஏரல், புன்னக்காயல் வரை மொத்தம் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் அரிசி மாவு, எள், தேன் கலந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி பொதுமக்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முதலே அவர்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதன் காரணமாக குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், பேராட்சி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் திரண்ட தால் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர். அப்போது சிவனடியார்கள் திரண்டு சங்கொலி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி பகுதிகளில் வழக்கமாக தை அமாவாசை நாட்களில் பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அருவிகளில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்து வருகிறது.
ஆனாலும் மெயினருவி கரையில் பொதுமக்கள் திரண்டு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். பின்னர் குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். இதேபோல் பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் செய்தனர்.
- முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
- பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.
தை அமாவாசையையொட்டி இன்று (சனிக்கிழமை) ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி போலீசார் கோவில் பகுதியில் தற்காலிக் போலீஸ் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதே போல் தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதே போல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதனால் கொடுமுடி பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தை அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலலுக்கு வந்து அம்ம னை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
- திங்கட்கிழமை தேரோட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப்பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பக்தர்கள் இங்கு வந்து கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் மூலவர் வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
தை அமாவாசையையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. 10- வது நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.
- ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
- தை அமாவாசையன்று இந்த ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
* தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
* தை அமாவாசை என்றாலே, திருக்கடையூர் அபிராமி அம்மனும், அந்த அன்னையை தன்னுடைய 100 பாடல்களால் அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்கள். ஏனெனில் தன் பக்தனான அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாகநடத்திக் காண்பிக்கப்படும்.
* ராமேஸ்வரம் கடல் தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் நீராடினாலும், பாவம் நீங்கி வாழ்வில் ஒளிபரவும் என்பது நம்பிக்கை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால், அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.
* திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.
* கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை என்ற இடத்தில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் இணைந்து அருள்பாலிக்கிறார்கள். தைப்பட்டம் சாகுபடியை தொடங்குவதற்கு முன்பு, இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தை அமாவாசை அன்று இங்கு வந்து இறைவனை தாிசித்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்.
* ராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று ராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் கடலில் நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
- இன்று (ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி தினமாகும்.
- பீஷ்மருக்கோ தந்தை உள்ளவர்களும், தந்தை இல்லாதவர்களும் அர்க்யம் கொடுக்க வேண்டும்.
மகாபாரதக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். இவர் செய்த தியாகத்தின் பயனாக, தன்னுடைய தந்தையிடம் இருந்து 'விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம்' என்ற அற்புதமான வரத்தைப் பெற்றிருந்தார். 18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர். உத்திராயன புண்ணியாலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம், "நான் செய்த பாவம் என்ன?. நான் விரும்பியும் கூட இன்னும் என்னை மரணம் தழுவாமல் இருக்க என்ன காரணம்?" என்று கேட்டார்.
அதற்கு வியாசர், "தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல.. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான். அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்" என்றார். இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம் என்று உணர்ந்து வருந்தினார். பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்டார்.
"ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது. நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்" என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.
"பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு 'அர்க்கபத்ரம்' என்று பெயர். 'அர்க்கம்' என்பதற்கு 'சூரியன்' என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னு டைய அங்கங்களை அலங்கரிக்கப்போ கிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்" என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி தினமாகும். பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான்.
அதற்கு வியாசர், "தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார்.
அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
இன்று காலை குளித்து, சந்தியா வந்தனம் செய்து விட்டு பீஷ்மாஷ்டமி புண்ய காலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே என சொல்லி சுத்தமான நீரில் அனைவரும் அர்க்கியம் தரவும். தந்தை உள்ளவர்களும், திருமணம் ஆகாதவர்களும் இதை செய்தால் ஆரோக்கியம் ஏற்படும்.
தந்தை இல்லாதவர்கள்தான் தங்களது அப்பாக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் பீஷ்மருக்கோ தந்தை உள்ளவர்களும், தந்தை இல்லாதவர்களும் அர்க்யம் கொடுக்க வேண்டும். ஸ்ரீ பீஷ்மரின் சத்திய நெறியும், தூய்மையான பிரம்மச்சரியமும் அவரை என்றுமே புகழ்மிக்கவராகத் திகழச் செய்கிறது.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் 58 நாட்கள் இருந்ததாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது.
பத்ம புராணத்தில் உள்ள ஹேமாத்ரி விரத கண்டத்தில் பீஷ்மாஷ்டமி குறித்து கூறப்படுகிறது. பீஷ்மாஷ்டமியன்று பீஷ்மருக்கு எள் அஞ்சலி சமர்ப்பிப்பவர்களுக்கு சந்தான பிராப்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஸ்மிருதி கவுஸ்துபம் என்ற நூல் குறிப்பிடுகிறது.
பீஷ்மாஷ்டமி இந்தியா முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விரதம் என்று விரதோத்சவ சந்திரிகா என்ற நூல் குறிப்பிடுகிறது.
"வையாக்ரயசத்ய கோத்ராய சாங்க்ருத்ய பிரவராயச அபுத்ராய ததாம்யே தஞ்ஜலம் பீஷ்மாய வர்மணே வசூ ராமாவதாராய சந்தனோராத்மஜாய ச அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபால பிரஹ்மசாரிணே" என்று பீஷ்மருக்கு தர்ப்பணம் விட வேண்டும் என்று ஆமாதேர் ஜோதிஷி என்ற நூல் குறிப்பிடுகிறது.
இன்று தர்பணம் செய்பவர்களுக்கு ஓராண்டு செய்த பாவம் தொலையும் என்பது நம்பிக்கை.