என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pon Manickavel"
- பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.
அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
பின்னர், சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலைக் கடத்தலுக்கு உதவியாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடுன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிம்னற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- பொய் வழக்கில் பொன் மாணிக்கவேல் தன்னை கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
- காதர் பாட்சாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன் மாணிக்கவேலிடம் விசாரணை நடத்தினர்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல்.
இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது கோடிக்கணக்கான மதிப்பில் கடத்தல் சிலைகளை அதிரடியாக பறிமுதல் செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது செய்யப்பட்டார். இதே போன்று வேறு ஒரு வழக்கிலும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொன் மாணிக்கவேல் ஐ.ஜி.யாக இருந்தபோது தான் காதர் பாட்சா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காதர் பாட்சா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பொய் வழக்கில் பொன் மாணிக்கவேல் தன்னை கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொன் மாணிக்கவேலிடம் இன்று விசாரணை நடத்தினார்கள். பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், காதர் பாட்சாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன் மாணிக்கவேலிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பிறகே சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பது தெரியவரும்.
- திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.
- மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை.
திருப்பூர்:
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது. சூறையாடுவது வேறு ஆட்கள் கிடையாது, அரசு தான். குறிப்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.
தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது 100 சதவீதம் உண்மை.
திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து பழங்கால கோவில்களை புனரமைக்காமல் இருந்து வருகிறது. பிரதமர் மோடி கூறியது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபிப்பாரானால் என்னுடன் விவாதத்திற்கு தயாரா. மு.க.ஸ்டாலின் சொல்வது 100 சதவீதம் பொய். நான் சொல்வது பொய் என்றால் இன்று இரவுக்குள் உயிர் இழந்து விடுவேன்.
பணியில் இருக்கும்போது கடுமையாக உண்மையாக உழைத்தேன். இப்போதும் உழைத்து கொண்டிருக்கிறேன். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் இல்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் இல்லை.
மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. இனியும் இதுபோன்று அமைதியாக இருக்க மாட்டோம். இதன் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது.
- கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது.
ராமநாதபுரம் :
ராமநாதபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை.
சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. இதற்காக கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை.
கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் இல்லை.
எனவே அந்த படையில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கெனவே இந்த மனு கடந்த நவம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன். மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கும் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது குறுக்கிட்ட பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
- கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
- திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
காஞ்சீபுரம் :
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த 1,071 ஆண்டு தொன்மை வாய்ந்த நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலை காணவில்லை என்று பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் ஒரு போலீஸ் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வந்தால் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதேபோன்று ஒரு பெருமாள் கோவில் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து காணாமல் போய் விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1,071 ஆண்டு தொன்மையான நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவில் 40 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டில் இருந்தது.
அந்த கோவில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து மறைந்த போன இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பக்தர்களுக்கு இன்று வரை தெரியாமலிருப்பது வருந்தத்தக்க நிகழ்வு.
அந்த கோவில் சோழ தமிழ் பேரரசர் பராந்தக தேவர் காலத்தில் கட்டப்பட்டது என்பது இந்த கோவில் கல்வெட்டு சான்று ஆவணப்படி அறுதியிட்டு கூறமுடியும், காஞ்சீபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
இது சம்பந்தப்பட்ட கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஜரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக தேவரின் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இந்த கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணில் இருந்து மறைந்து விட்டது. கோவிந்தவாடி கிராமம் 1,071 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிந்தபாடி என்றும் திருமால்புரம் திருமால்பேரு என்றும் இந்த கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும்; களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் அடிச்சுவடு கூட தெரியாமல் மறைந்துள்ளது. கோவிந்தபாடி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோவிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் நலிவடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது என்றும் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தில் இருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.
திருப்பணி என்ற பெயரில் களவாடபட்டு அதன் விளைவாக மறைந்து போன இந்த குற்றத்தகவலை அன்று முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மறைத்தது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்.
எனவே இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தபட்ட கோர்ட்டுக்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோழ பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தற்போது வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி.பொன்.மாணிக்கவேல் பணியாற்றினார்.
அவர் சிலைக்கடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அவரை திடீரென ரெயில்வே ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த நிலையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளையும், எதிர் காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. பின்னர், இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை, ஐகோர்ட்டு அமைத்தது.
இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கினர்.
ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் போலீசார், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளனர்.
சிலைக்கடத்தல் வழக்கில் 47 பேரை கைது செய்துள்ளனர். ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த 28 ஆண்டுகளில் இந்த பிரிவு போலீசார் செய்த பணியை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ஓர் ஆண்டிலேயே முறியடித்து விட்டனர்.
எனவே, சிலைக்கடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்கிறோம். அதேநேரம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புப் படையின் புலன்விசாரணை எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம்.
நவம்பர் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டுக்கு நியமிக்கின்றோம். அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கவேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.
மேலும் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதே நேரத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், திரிபலிநாதர் ஆகிய 4 சிலைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் திருடுபோன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த கோவிலில் ஆய்வு செய்வதற்காக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக்குறிச்சிக்கு வந்தார். அவர் குலசேகரமுடையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோவில் உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் சீதாலட்சுமி, முருகன், நிர்வாக அதிகாரிகள் வெங்கடேசன், ஜெகநாதன் ஆகியோரிடம் கோவில் நிலவரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள 17 விக்கிரகங்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
இக்கோவிலில் இருந்து 4 சிலைகள் திருடுபோய் உள்ளன. இதில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலும், அம்மன் சிலை தென்ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அந்த சிலைகளை மீட்போம். மேலும் இக்கோவிலில் இருந்த 17 விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை மீண்டும் இக்கோவிலில் வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும். கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஆயிரம் சிலைகள் தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அவற்றை கண்டறிந்து அந்தந்த கோவில்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #IdolSmuggling
திருவொற்றியூர்:
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சிலைகள், பிரதான கல்தூண்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர்.
சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பிரதான பாதுகாக்கப்படவேண்டிய கற்கள் உள்ளன. இந்த கற்களை பாதுகாப்பாக வைக்க சிலை கடத்தல் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் உட்பட சில கோவில்களை தேர்வு செய்துள்ளனர்.
இதையொட்டி இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் உயர் அதிகாரிகள் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இங்கு பிரதான கற்களை பாதுகாப்பாக வைக்க முடியுமா என்பது குறித்து வருவாய்த் துறை, அறநிலைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #PonManickavel
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்