என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
1,071 ஆண்டு தொன்மையான பெருமாள் கோவிலை காணவில்லை: பொன் மாணிக்கவேல் பரபரப்பு புகார்
- கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
- திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
காஞ்சீபுரம் :
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த 1,071 ஆண்டு தொன்மை வாய்ந்த நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலை காணவில்லை என்று பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் ஒரு போலீஸ் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வந்தால் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதேபோன்று ஒரு பெருமாள் கோவில் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து காணாமல் போய் விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1,071 ஆண்டு தொன்மையான நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவில் 40 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டில் இருந்தது.
அந்த கோவில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து மறைந்த போன இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பக்தர்களுக்கு இன்று வரை தெரியாமலிருப்பது வருந்தத்தக்க நிகழ்வு.
அந்த கோவில் சோழ தமிழ் பேரரசர் பராந்தக தேவர் காலத்தில் கட்டப்பட்டது என்பது இந்த கோவில் கல்வெட்டு சான்று ஆவணப்படி அறுதியிட்டு கூறமுடியும், காஞ்சீபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
இது சம்பந்தப்பட்ட கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஜரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக தேவரின் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இந்த கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணில் இருந்து மறைந்து விட்டது. கோவிந்தவாடி கிராமம் 1,071 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிந்தபாடி என்றும் திருமால்புரம் திருமால்பேரு என்றும் இந்த கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும்; களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் அடிச்சுவடு கூட தெரியாமல் மறைந்துள்ளது. கோவிந்தபாடி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோவிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் நலிவடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது என்றும் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தில் இருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.
திருப்பணி என்ற பெயரில் களவாடபட்டு அதன் விளைவாக மறைந்து போன இந்த குற்றத்தகவலை அன்று முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மறைத்தது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்.
எனவே இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தபட்ட கோர்ட்டுக்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோழ பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தற்போது வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்