search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ. விசாரணை
    X

    பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ. விசாரணை

    • பொய் வழக்கில் பொன் மாணிக்கவேல் தன்னை கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
    • காதர் பாட்சாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன் மாணிக்கவேலிடம் விசாரணை நடத்தினர்.

    தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல்.

    இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது கோடிக்கணக்கான மதிப்பில் கடத்தல் சிலைகளை அதிரடியாக பறிமுதல் செய்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது செய்யப்பட்டார். இதே போன்று வேறு ஒரு வழக்கிலும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பொன் மாணிக்கவேல் ஐ.ஜி.யாக இருந்தபோது தான் காதர் பாட்சா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காதர் பாட்சா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பொய் வழக்கில் பொன் மாணிக்கவேல் தன்னை கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு பொன் மாணிக்கவேலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொன் மாணிக்கவேலிடம் இன்று விசாரணை நடத்தினார்கள். பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், காதர் பாட்சாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொன் மாணிக்கவேலிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணைக்கு பிறகே சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? என்பது தெரியவரும்.

    Next Story
    ×