என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "project"
- இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
- தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம் குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டார்.
விழாவின்போது அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விழாவில் பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, 'நாம் மரத்தை வளத்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார்.
அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.
தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார்.
முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.
2002-ம் ஆண்டு முதல் ஈஷா சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
- மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை (20.6 கி.மீ.) திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிக்கல்களால் அந்த பணி முடங்கியது.
இதைத் தொடர்ந்து தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. இதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம்- மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் மொத்தம் 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த தூண்கள் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டது குறித்து சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் சென்னை துறைமுகம்- மதுர வாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வர உள்ளன. மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கி உள்ளனர்.
சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்து உள்ளது. மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளன. அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது.
துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்றனர்.
- 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்.
- அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதனால், போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. அதனால், விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.
- வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர்.
- தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதற்குள் பதினெட்டாவது மக்களவை தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்தலை எப்போது நடத்தலாம்? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இருந்த போதிலும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன.
கேரள மாநிலத்தில் தற்போதைய ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. முக்கிய அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி? தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம் பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். அந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்திரயானை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சோம்நாத்.
இது நாடு முழுவதும் மட்டுமின்றி, சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் அவரது செல்வாக்கு உயர வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த சோமநாத் தான் சரியான வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.
அது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது. திருவனந்தபுரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சசிதரூர் 4-வது முறையாக தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
2009 மற்றும் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜ கோபால், சசிதரூரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். இதனால் தற்போது சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசி தரூர் சோதனையை சந்திக்கக் கூடும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.
இதனால் திருவனந்தபுரம் தொகுதியில் சோமநாத்தை நிறுத்தும் முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.
- பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.[
- பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது.
திருப்பூர்:
மத்திய ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா, இயக்குனர் அனில்குமார், துணை செயலர் பிரசாந்த்குமார் மீனா ஆகியோர் திருப்பூர் வந்திருந்தனர். ஏற்றுமதியாளர்களை சந்தித்து, பாரத் டெக்ஸ் - 2024 கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
திருப்பூர் கே.எம்., நிட்வேர் யூனிட்டுக்கு சென்ற குழுவினர், பின்னலாடை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோரை சந்தித்து தொழில் நிலவரம் குறித்து பேசினர்.
சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், திருப்பூர் தொழில் குழுமம் மட்டுமே வர்த்தகர்களின் பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ஒட்டுமொத்தமாக, பைபர் துவங்கி, முழுமை பெற்ற ஆடையாக உற்பத்தி செய்வது வரையில், அனைத்து தொழில்நுட்பங்களிலும் வளம் குன்றா வளர்ச்சி நிலையை பின்பற்றி முன்னோடியாக விளங்குகிறது என்றார்.
ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.
திருப்பூர் தொழில் நகரம், 15 ஆண்டுகளாக, பசுமை சார் உற்பத்தியை வெற்றிகரமாக செய்து வருகிறது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்ப சுத்திகரிப்பு, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் உற்பத்தி என பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.
ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா பேசியதாவது:-
தற்போதைய இந்திய ஜவுளி வர்த்தகத்தில், 2024ல் நடக்கும், பாரத் டெக்ஸ் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிய வேண்டும். ஏற்றுமதியாளர், கட்டாயம் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
திருப்பூர் கிளஸ்டர், வளம் குன்றா வளர்ச்சி என்ற பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது. புகழ்பெற்ற திருப்பூர் தொழில் நகரம், மற்ற பிராண்ட் நிறுவனங்களுக்காக, பின்னலாடை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, திருப்பூருக்கென பிரத்யேக பிராண்ட்களை கட்டமைக்க திட்டமிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
- சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு செய்யும் திட்டம் 160 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைமேடு பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் பாலம் வரையிலான 6.5 கி.மீ., தூரத்துக்கு ஆற்றின் இரு கரைகளிலும் தார் ரோடு அமைக்கப்படுகிறது. இது தவிர கரையை பலப்படுத்தும் விதமாக கான்கிரீட் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் வந்து சேரும் கழிவு நீர் கால்வாய்கள், துணை கால்வாய் (பேபி கால்வாய்) மூலம் ஆங்காங்கே சேகரம் செய்து, பம்பிங் செய்யப்பட்டு, சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. 6 இடங்களில் இம்மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் 20 சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் ஏற்கனவே கரையோரம் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் வகையில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இருப்பினும் தார் ரோடு முன்னர் திட்டமிட்ட அகலம் 7 மீட்டர் தற்போது 10 மற்றும் 14 மீ., என மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில் பொழுதுபோக்கு அம்சத்துக்கான நிதியாதாரம் தார் ரோடு பணிக்கு மாற்றப்பட்டு விட்டது.இருப்பினும் நொய்யல் கரையில் மரங்கள் நட்டு பராமரித்தல், பூங்கா அமைத்தல், நடைப் பயிற்சி மேடை, வாகன பார்க்கிங், கேண்டீன் உள்ளிட்ட சிறு கடைகள், அலங்கார விளக்குகள், ஓய்வு எடுக்க இருக்கை வசதிகள், ஆங்காங்கே நிழல் தரும் அலங்கார குடைகள்,
சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், ஆம்பி தியேட்டர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தி திருப்பூர் மக்களின் சிறந்து பொழுது போக்கு இடமாக இதை மாற்ற வேண்டும் என்ற திட்டம் உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் விதமாக பகுதி வாரியாக மாதிரி வடிவங்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் அமைப்புகள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் பங்களிப்பை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் ஒரு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான இறுதி வடிவம் முடிவாகும்.இத்திட்டம் முழுமை பெறும் நிலையில், நொய்யல் கரை மேம்படுத்தும் மாநகராட்சி மக்களின் கனவு மிக விரைவில் நிறைவேறும். இந்த இடம் மாநகரில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் முக்கிய இடத்தை பெறும் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.
- தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி யில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2-ம் கட்டமாக 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சேது நாதன், மயிலம் எம்.எல்.ஏ. சிவகுமார், சேர்மன்கள் சொக்கலிங்கம், யோகேஸ்வரி மணிமாறன்,நிர்மலா ரவிச்சந்திரன், தயாளன், ராஜாராம்,ராஜலட்சுமி வெற்றிவேல் , மாவட்ட பொருளாளர் வக்கீல் ரமணன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் தமிழரசன்,தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, திண்டிவனம் தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன்- ஆ.ராசா எம்.பி. பங்கேற்பு
- 8 கி.மீ நடைபயணத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஊட்டி,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடப்போம் நலம் பெறுவோம் என்னும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலையில் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் நோக்கமானது பொது மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தொற்றா நோய்கள் குறித்து காரணிகள், தொற்றா நோய்களை தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏற்கனவே தொற்றா நோய் உள்ளவர்கள் உடல் நிலையை சீராக வைக்கவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நடைபயணம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் தொடங்கி, எமரால்டு ஹைட்ஸ் கலைக்கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எச்.பி.எப். வழியாக இந்து நகர் குடியிருப்பு வரை சென்று மீண்டும் அதே வழியாக மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.
சுமார் 8 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகராட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
- இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
- தியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில், தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவிநாசி - 314, தாராபுரம் - 288, குடிமங்கலம் -1 74, காங்கயம் - 298, குண்டடம் - 484, மடத்துக்குளம் - 84, மூலனூர் - 50, பல்லடம் - 215, பொங்கலூர் - 261, திருப்பூர் - 231, உடுமலை - 303, ஊத்துக்குளி - 249, வெள்ளகோவில் - 194 என 3,145 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்க அனுமதிக்கப்பட்டது.
தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க, கூடுதல் செலவு ஏற்பட்டதாலும், திறந்தவெளி மலம் கழிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 3,145 கழிப்பறைகள் கட்ட மானியம் ஒதுக்கப்பட்டது. அதாவது தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டது.
நிதியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது. கடந்த மாத நிலவரப்படி, 1,701 கழிப்பறைகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதற்காக 2.04 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், பணி முழுமையாக நிறைவு பெற்றால் மட்டுமே மானிய தொகை விடுவிக்கப்படும்.அதன்படி 40 சதவீதம் அளவுக்கு நிலுவை இருக்கிறது. இருப்பினும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை 100 சதவீதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
- காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
காங்கயம்,அக்.22-
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொடுமுடியில் தலைமை நீரேற்று நிலையம், அருகில் இச்சிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையம், அடுத்து திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் மேட்டுக்கடை, வாலிபனங்காடு, பச்சாபாளையம் நீருந்து நிலையங்கள், காங்கயம் அய்யாசாமி நகா் காலனி நீா் விஸ்தரிப்பு நிலையம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
1998 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 2013 ல் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 1,790 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு தினசரி 40.45 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். 25 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இத்திட்ட கான்கிரீட் குழாய்களில் தொடா்ந்து நீா்க்கசிவு ஏற்படுவதால் நிா்ணயிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை.
இதையடுத்து ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பணிகளின் அனைத்து நிலைகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டாா்.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் செல்லமுத்து, மேற்பாா்வைப் பொறியாளா் மதியழகன், நிா்வாகப் பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
- குன்னூர் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி கூடுதல் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யாமல் உள்ளதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
குன்னூரில் ரூ.13 கோடியில் ஹைட்ராலிக் கார் பார்க்கிங் திட்டம், 350 வாகனங்கள் நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
குன்னூர் பஸ் நிலை யத்தை விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல் கட்டமாக ரூ.1 கோடியும், 2-வது கட்டமாக ரூபாய் 11.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குன்னூர் பஸ் நிலையம் விரிவாக்கப்பட்டு 26 பேருந்துகள் நின்று செல்ல கட்ட திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஆற்றோரத்தில் எவ்வாறு பஸ் நிலையம் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், துறை அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டருடனும் பேசி ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும.
மேலும் இங்குள்ள தீயணைப்பு துறை அலு வலகத்தையும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்று ஓரப் பகுதி என்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் கோட்டாட்சியர் பூஷண குமார், தாசில்தார் கனிசுந்தரம். பொறுப்பு ஆணையாளர் ஏகராஜ், நகர செயலாளர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்