என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Protest"

    • அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌.
    • சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருந்து வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌. அதன் பேரில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். பின்னர் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் சுற்றி சுற்றுச்சுவர் இருந்து வந்த நிலையில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌. அப்போது சுற்றுச்சுவர் இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மாற்று வழி மூலம் செல்வதற்கு அதிகாரிகள் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பள்ளியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தல்
    • போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி அருகே அலசந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப்

    கழிவறை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. மழை தண்ணீர் வகுப்பறைகள் ஒழுகுகிறது. சுற்றுச்சுவர் இல்லை எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நாராயணபுரத்தில் இருந்து இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு டவுன்பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக சரி செய்வதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வில்லாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

     மதுரை

    மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரில் மழை நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் சரி வர அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகள் தொடர் கதையாக உள்ளன.

    மதுரை மாநகராட்சி 86-ம் வார்டான வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் தவிர கொசுத்தொல்லை உள்பட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது தொடர்பாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, வில்லாபுரம் ஆர்ச் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • பண்ருட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி விரிவாக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக பஞ்சரான சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பண்ருட்டி எல் என் புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிலிள் செல்வோர் நடந்து செல்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எல் என் புரம் பகுதியில் புழுதி புயலுடன் காற்று வீசும். இதனால் நடந்து செல்வோர் மோட்டார் சைக்கிலிள் செல்வோர்களின் கண்களை பட்டு நோய் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த சேதமான சாலையால் மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் இந்த சாலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திடீரென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

    சேதமான சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் கூறிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். காலை 9:00 மணி முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்தை சரி செய்தனர். ஆனால் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
    • குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பொதுமக்கள் சாா்பில் என்.மாணிக்கராஜ், சிவகுமாா் ஆகியோா் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -

    ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இந்தப் பகுதியில் காவல் நிலையம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் தனிநபா் ஒருவா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவா்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.இந்த பகுதியை சுற்றிலும் ஏற்கெனவே 3 செல்போன் கோபுரங்கள் உள்ளன. ஆகவே, குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    வடவள்ளி,

    கோவை பூலுவபட்டி அருகே உள்ள சித்தரசாவடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்தபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    பெண் விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வழியாக தான் செல்லகின்றனர். மேலும் அந்த பகுதி வளைவான பகுதி என்பதால் அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று திடீரென டாஸ்மாக் கடை முன்பு சென்ற பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    • ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தாரமங்கலம் நகராட்சி 27 -வது வார்டு பொதுமக்கள் 100- க்கும் மேற்பட்டோர் சம்பவத்தன்று காலை திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை வசதியின்றி அவதிப்பட்டு வருவதாகவும், மழைகாலங்களில் நகர பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரும், சாக்கடை கழிவுகளும் கலந்து குடியிருப்பு வீடுகளில் புகுந்தும் தேங்கியும் வருவதால் இங்கு கடந்த 2 மாதங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறோம் எனவும்,  இந்த நிலையை போக்க இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு சாக்கடை அமைத்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறினர்.

    இதனால் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், 27 வது -வார்டு கவுன்சிலர் லட்சுமிஈஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், முரளிதரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சாக்கடை பணிக்கு உண்டான ஒப்பந்தம் பெறப்படவில்லை என்றும், தற்போது சாலை விரிவாக்க பணிக்கு மட்டுமே பணி நடைபெறுவதால் சாக்கடை பணியை மேற்கொள்ள இயலாது என்று கூறியதால் பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். சாலை விரிவாக்க பணி முடிந்து விட்டால் சாக்கடை பணியை கிடப்பில் போட்டு விடுவார்கள் என்றும், புதிய சாக்கடை அமைக்காமல் சாலை பணியை மேற்கொள்ள விடமாட்டோம் என்று கூறினர்.

    இதையடுத்து சாலை விரிவாக்க பணியை தற்காலிகமாக பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.
    • விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    கோவை,

    கோவை சூலூர் பாரப்பட்டி ஊராட்சியில் உள்ளது குளத்துப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ெபாதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோவை சூலூர் தாலுகாவில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம் வி. குளத்துப்பா ளையம், புளிய மரத்து பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 421.41 ஏக்கரில் மிகப்பெரிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளதாக அறிந்தோம்.

    மேற்கண்ட நிலத்தின் மி அருகே வாரப்பட்டி, பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், புளியமரத்துப்பாளையம், குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இக்கிராமங்களில் சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.மேலும் செலக்கரிச்சல் ஊராட்சி, மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஆகிய கிராமங்கள் இப்பகுதியை சுற்றி உள்ளது.

    இப்பகுதிகளில் மிக குறைவான மழைப்பொழிவு காரணமாக நாங்கள் அனைவரும் காய்கறி, தென்னை, வாழை சார்ந்த விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு, கோழி வளர்த்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.

    கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கப்பெரும் நீரை குடிநீராகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    இந்த இடத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையத்தில் பவுண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வர உள்ளதாக தெரிந்து கொண்டோம். மேற்கண்ட ஆலைகள் அமைந்தால் அவர்கள் வெளியேற்றும் கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்தால் உபயோகமற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

    மேலும் தொழிற்சா லையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

    எங்கள் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைக்க நிலம் கையகப்படு த்துவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவதை தவிர்த்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைப்பதை தவிர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும்படியும் எங்களின் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு உதவும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும்.

    தென்திருப்பதி 4 ரோடு பகுதியில் இருந்து ஆலாங்கொம்பு 3 ரோடு வரை பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலையில் கழிவு நீர் ஓடுகிறது.

    இதனால் அந்த சாலை மேலும் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் குண்டும் குழியுமாக சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து உடனே சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் காரமடை பிள்ளுகடை முக்கில் இருந்து சிறுமுகை நீலிப்பாளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
    • இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.

    ஏலம்

    கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு, 2 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஏரியிலும் நாட்டு இன மீன்கள் அதிகளவில் உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் 2 ஏரியிலும் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டு வருகிறது.

    பொதுபணித்துறைக்கு சொந்தமான 2 ஏரிகளிலும், ஓமலூர் வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பாசி குத்தகை விடப்பட்டது. அதன்படி குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்திற்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கடந்த 2 ஆண்டுகள் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் போராட்டம்

    இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. முன்னதாக காலையில் பெரிய ஏரிக்கு நடைபெற்ற ஏலத்தில் 8 பேர் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில், சுப்ரமணி என்பவர் 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மாலையில் சின்னஏரிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் தாசில்தார் வள்ளமுனியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில், இங்கு ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியே சென்று, அவர்கள் தனியாக ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ஏலம் விட்டு பணத்தை பாகம் பிரித்து கொள்கின்றனர்.

    சுகாதார சீர்கேடு

    அதனால், ஏலம் விடாமல் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடித்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், ஏரியில் மீன் பிடி உரிமை எடுக்கும் ஏலதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி, குப்பை, காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால், தண்ணீர் வளம் பாதிக்கிறது, ஏரியில் துணி துவைத்து குளித்தால் கூட மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடி ஏலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

    அமைதி கூட்டம் நடத்திய பிறகு மீண்டும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
    • ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    உடுமலை :

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விரைவாக நடந்து வருகிறது.

    இதற்காக அதிக அளவில் மண் மற்றும் சரளைக்கற்கள்,ஜல்லிக்கற்கள் போன்றவை தேவைப்படுகிறது.இவற்றை கொண்டு செல்ல பெரிய அளவிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களால் இயக்கப்படும் இந்த லாரிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஆறுமுகம் நகர் பகுதியை ஒட்டி மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவே இந்த சாலை உருவாக்கப்பட்டது.அதிக பட்சம் 10 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய கிராமத்து சாலையில் 50 டன்னுக்கு மேல் எடையுடன் கூடிய கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலை பல இடங்களில் சேதமடைந்து மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது.

    அந்த பள்ளங்களை சீரமைக்கக் கோரி கடந்த முறை போராட்டத்தில் ஈடுபட்ட போது மண் கொட்டி பள்ளங்களை மூடி விட்டார்கள். தற்போது லாரிகள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் மண் புழுதி பறக்கிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் புழுதி படிந்து மாசடைகிறது.

    அத்துடன் மண் புழுதியை தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய நிலையால் பல்வேறு விதமான சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் மண் புழுதியால் அருகிலுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் பாழாகி வருகிறது. இலைகளின் மீது தூசி படிவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

    மல்பெரி இலைகளில் தூசி படிவதால் அவற்றை உண்ணும் புழுக்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வாழைத்தார்களில் புழுதி படிந்திருப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். இதனால் செலவு செய்து தண்ணீரை பீய்ச்சியடித்து கழுவி வைத்தோம். ஆனால் மீண்டும் புழுதி படிந்து விட்டது.

    தீவனத்துக்காக வளர்க்கும் யானைப்புல் போன்றவற்றில் மண் படிந்து கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே லாரிகளில் மண்ணை மூடி கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக வேகத்தில் இயக்குவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். புழுதி பறப்பதைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்ட விவசாயி மீது வாகனத்தை ஏற்றி விடுவேன் என்று மிரட்டுவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    ×