search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Python"

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, பாம்புகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தாளவாடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இதனால் வனவிலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த செசன் நகர் அருகே டி.எம்.எஸ். தோட்டம் பகுதி யில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. இந்த மலைப்பாம்பு கோழிகள், ஆட்டை மிகவும் சுலமாக விழுங்கி விடும் அளவிற்கு பெரிதாக இருந்தது.

    சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து உள்ளனர்.

    • கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம் பட்டி அருகே தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் குடித்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 55), விவசாயி. இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

    வீட்டை ஒட்டி உள்ள தாழ்வாரப் பகுதியில் பசுக்களையும் கன்றுகளையும் கத்தி பராமரித்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டின் தாழ்வார பகுதியில் கட்டியிருந்த கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு குழுவினர் சங்கப் பிள்ளை தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பாம்பு, காப்பு காட்டு பகுதியில் விடப்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் மழையால் ஐயாற்றுப் நீரோட்டம் வழியாக கொல்லிமலை பகுதியில் இருந்து மலை பாம்பு வந்திருக்கலாம் எனவும், தொழுவப் பகுதியில் கட்டி இருந்த பசுங்கன்றை விழுங்க வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பகுதி நேற்று நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.

    • 2000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
    • வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையின் போது காதர் மொய்தீன் என்பவர் சிக்கினார். இவர் மலேசியாவில் இருந்து 2000 நட்சத்திர ஆமைகளை கொண்டு வந்த போது பிடிபட்டார். அவற்றை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் புழல் லட்சுமி புரம் பொருமாள் கோவில் 2-வது தெருவில் ரவிக்குமார் என்பவர் கடல்வாழ் உயிரினம் மற்றும் மலைப்பாம்பு ஆகியவற்றை வைத்திருப்பதாக தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் வனத்துறையினர் நேற்று அந்த வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு மலைப்பாம்பும், 150 நட்சத்திர ஆமைகளும் அங்கு இருந்தன.

    மேலும் சில சாதாரண ஆமைகளும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தேடி வருகிறார்கள்.

    • வனத்துறையினர் அதிரடி சோதனை.
    • வனத்துறையினர் பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு தளியகோணம் பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்துச் சென்றிருப்பதாக வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மலைப்பாம்பை பிடித்ததாக கூறப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது42) என்பவரின் வீட்டுக்கு பாலப்பல்லி வனச்சரக அதிகாரி ரதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அதிரடியாக சென்றனர்.

    அப்போது அங்கு ராஜேஷ் இல்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முன்னிலையில் வனத்துறையினர் சோதனை செய்தனர். இதில் ராஜேஷ் வீட்டின் சமையலறையில் மலைப்பாம்பு சமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    பின்பு தணியகோணம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேசை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது தளியகோணம் வயல் பகுதியில் மலைப்பாம்பை பிடித்ததாகவும், அதனை வைத்து "ஸ்பெஷல் டிஷ்" தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மலைப்பாம்பு இறைச்சி அறிவியல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோலேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷ் இரிஞ்சாலக்குடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வனச் சட்டங்களின்படி பாம்புகளை கொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
    • சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

    இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.

    சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

    • மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தரேச விஸ்வா. இவரது வீட்டில் இருந்த 5 கோழிகள் ஒன்றின் பின் ஒன்றாக காணாமல் போனது.

    இதனைத் தேடி அவரது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை ஓரமாக சென்றுள்ளார். அப்போது வயல்வெளி பகுதியில் விலங்குகள் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி தப்ப முடியாத நிலையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.

    இந்த மலைப்பாம்பு தான் அவரது வீட்டில் இருந்த கோழிகளை தின்றுவிட்டு வேறு கோழி கிடைக்காததால் இரை தேடி வயல்வெளி பக்கம் வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாம்பை பார்க்க குவிந்தனர். குலையன்கரிசல் ஊர் பகுதியில் இந்த மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • நகர முடியாமல் 3 மணிநேரம் தவிப்பு
    • வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தையொட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

    வனத்தை ஒட்டியுள்ள இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி மான், மயில், மலைப்பாம்பு மற்றும் விஷபாம்புகள் இறையை தேடி வருகிறது.

    கிராமத்திற்கு நுழையும் மலைப்பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரிய ஏரியூர்கிராம மக்கள், சுடுகாட்டு அருகே உள்ள வன பகுதி வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று மரத்திற்கு அடியில் உணவு செறியூட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    3 மணி நேரத்துக்கு மேலாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    இதற்கிடையில் மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திக்கி, திணறியது.

    ஒரு கட்டத்தில் மலை பாம்பு விழுங்கிய புள்ளிமானை, வெளியே கக்கியது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு, வனத்துறையினரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

    காலதாமதமாக வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வனத்துறையிடம் ஒப்படைப்பு
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி விவசாய நிலத்தில் 13 அடி நீளம் உள்ள பெரிய மலை பாம்பு சிக்கியது.

    இந்த பாம்பை ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் வனத்துறை ஊழியர்கள் ஆம்பூர் காப்பு காட்டில் அந்த பாம்பை விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.
    • 10 அடி நீளமுள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு குட்டியை பாதி விழுங்கி விட்டு அசையமுடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த சிலர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பிடம் இருந்து செத்த நிலையில், ஆட்டுக்குட்டியை இழுத்து வெளிேய கொண்டு வந்தனர். தொடர்ந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்புக் காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு 8 மணியளவில் பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

    • யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்
    • வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.25 லட்சம்

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர்.

    இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும். இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர்.

    புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

    16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர்.

    போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

    • ஜெயராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
    • மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.

    இதை பார்த்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து பார்த்தனர். அப்போது, மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அட்டுக்கல் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

    ×