என் மலர்
நீங்கள் தேடியது "Rajnath Singh"
- இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.
- நாட்டின் எல்லைகளை துணிச்சலுடன் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:
தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு பரப்பினார். தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாராயண குரு, பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே சமநிலையைப் பராமரித்தார். இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளது.

கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் நாராயண குரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுகிறது.
உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்சார்பு கொள்கையை ஊக்குவிப்பதன் காரணமாகவே ராணுவ பலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார் என பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.
- அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது என்றார்.
இடாநகர்:
அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா போரை விரும்பாத நாடு. அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது.
இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.
போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
- கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது.
- இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது
போபால்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அவமதிக்கப்படுகிறது. ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று?
முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்பட பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- உள்நாட்டிலும் இந்திய முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன.
- அதேநேரம் இந்தியா வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
புதுடெல்லி:
உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டிலும் இந்திய முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இந்தியா வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு நடந்துள்ளது. இது நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பிரதமர் மோடியின் உத்வேகமூட்டும் தலைமையின் கீழ், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என நம்பிக்கையும் தெரிவித்து இருந்தார்.
இந்தியா கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.12,814 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கும், வெளிநாட்டு ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கும் எட்டுவதை இலக்காக அரசு நிர்ணயித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
முந்தைய 2020-21-ம் ஆண்டில் ரூ.8,434 கோடி, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.9,115 கோடி அளவுக்கும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.
- பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை.
- சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார். காக்வாட் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் மத ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கட்சி என்று ஒன்று இருந்தால் அது காங்கிரஸ். அக்கட்சி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பெயரில் அரசியல் செய்கிறது. இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் செய்யவே கூடாது. முஸ்லிம் சமுதாயத்தை கவரும் நோக்கத்தில் அவர்களுக்கு மத அடிப்படையில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கியது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருந்தால் அதை நாங்கள் வரவேற்று இருப்போம். ஆனால் இந்திய அரசியல் சாசனம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது இல்லை. பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் எங்கள் கட்சியின் குணம் என்னவென்று தெரியும்.
சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை. நாங்கள் நீதி மற்றும் மனித தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். அந்த கொள்கைகள் அடிப்படையில் தான் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்கள் பா.ஜனதாவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை வழங்கி தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
- இந்தியா சார்பில் ரோந்து கப்பலை மாலத்தீவுக்கு பரிசாக வழங்குகிறார்.
- இந்த பயணத்தை முக்கியமான மைல்கல் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
புதுடெல்லி :
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டை நாடாகவும். நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு விளங்குகிறது. அங்கு நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டு செல்லும் அவர், 3-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதில் முக்கியமாக அந்த நாட்டு அதிபர் இப்ராகிம் முகமது சொலியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார்.
இதைப்போல மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், ராணுவ மந்திரி மரியா திதி ஆகியோரையும் சந்திக்கிறார்.
இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தின்போது மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு அதிவேக ரோந்துக் கப்பல் மற்றும் தரையிறங்கும் வாகனத்தை இந்தியா சார்பில் பரிசாக வழங்குகிறார். நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களின் திறனை வளர்க்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டின்படி இந்த தளவாடங்கள் வழங்கப்படுகின்றன.
மாலத்தீவுக்கு ராஜ்நாத் சிங் மேற்கொள்ளும் இந்த பயணத்தை முக்கியமான மைல்கல் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் மாலத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா உதவியுடன் நடைபெறும் மாலி இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மாலிக்கும், அருகில் உள்ள தீவுக்கூட்டங்களுக்கும் இடையே 6.75 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' திட்டத்தில் அதிகமாக பயன்பெறும் நாடாக மாலத்தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.
- ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலியானார்கள். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அறியவும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.
இதே போல ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர்.
- கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.
புதுடெல்லி :
தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதன் 25-வது ஆண்டு விழாவும் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர். கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.
இந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். இத்தகைய வரலாறு மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்.
ஆனால், 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். அதாவது, நாங்கள் அமைதியை விரும்பும் நாடாக இருக்கலாம். ஆனால், நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் எரிக்கப்படுவதையோ, சோமநாதர் ஆலயம் மீண்டும் சூறையாடப்படுவதையோ சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அச்செய்தி.
இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உரிய பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது.
- பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது.
புனே :
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காண்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சைபர்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.
மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு தற்போது சுயசார்பு தன்னிறைவு பெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் இந்தியா வந்துள்ளார்.
- லாயிட் ஆஸ்டினுடன் ராஜ்நாத் சிங் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:
அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வந்தார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார்.
இதுதொடர்பாக அமெரிக்க மந்திரி லாய்ட் ஆஸ்டின் தனது டுவிட்டர் பதிவில், 'பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்துள்ளேன்' என பதிவிட்டிருந்தார். அவருக்கு டெல்லியில் முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது குறித்து பேசப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், டெல்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தோ- பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விஷயங்களை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.
- நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
- கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.
பெங்களூரு :
இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:-
பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி செய்வது மிக முக்கியமானது. இந்த நோக்கத்தில் பாதுகாப்பு துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசு முடிவுகளால் இலக்கை அடைகிறோம். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
உலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமது ராணுவத்தில் தொழில்நுட்ப ரீதியாக நவீனமயத்தை அறிமுகம் செய்து வருகிறோம். ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, நடப்பு ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய 75 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர முயற்சிகளால் நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நமது பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது நாட்டின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது நமது நாட்டின் பாதுகாப்புத்துறை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடையும் முயற்சிக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். நாம் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடு தான் முதன்மை என்ற ஒரு நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். அப்போது தான் தற்சார்பு நிலையை நாம் அடைய முடியும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜூன் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
- தாம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் (ஜூன் 20-ம் தேதி) சென்னை வர உள்ளார்.
ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத்சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.