என் மலர்
நீங்கள் தேடியது "Republic Day"
- இந்தியாவின் அடுத்த குடியரசு தினவிழா 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுதின விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இந்தியாவின் அடுத்த குடியரசு தினவிழா 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசிக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2022 - 23 காலத்தில் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் போது நட்பு நாடாக எகிப்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது.
- கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. இதன்மூலம், தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா, அசாம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
- 2022-ல் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
புதுடெல்லி :
குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் (தற்போது கடமையின் பாதை) மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு (2022) இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.
மேலும், மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், "குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எந்த எந்த மாநிலங்கள் சார்பில், என்ன என்ன அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும்? என்பதை அந்த குழுவே முடிவு செய்யும்" என கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை முன்னிலைப்படுத்திய இந்த ஊர்தி தமிழகத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜபாதை சீரமைக்கப்பட்டு 'கடமையின் பாதை' ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பையும், வீரர்களின் சாகசங்களையும் பார்க்கிறார்.
இந்த நிகழ்வில் இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்க உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா கால வழிகாட்டல்களை பின்பற்றியும், அணிவகுப்புக்கான பல்வேறு விதிமுறைகளை பின்பற்றியும் ஊர்திகளை வடிவமைக்குமாறு இந்த மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஊர்திகள் வடிவமைக்கும் பணிகள் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெறும். பணிகள் முடிந்ததும் அலங்கார ஊர்திகளுக்கான குழு அவற்றை பார்வையிட்டு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.
- 6-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது.
- அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டா–டப்படுகிறது.
எனவே அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் இயங்கு வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்.
- கிராம சபை கூட்டங்கள் முடிந்ததும், பிரச்சினையின்றி முடிந்ததா என உறுதி செய்ய வேண்டும்.
குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது உள்ளிட்ட 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், மேற்குறித்த பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு, அரசால் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எவ்வித பிரச்சினைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாத வாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனை/ பயிற்சி அளித்து எவ்வித புகார்களுமின்றி எதிர்வரும் 26-ந்தேதி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், எதிர்வரும் 26-ந்தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் பார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்யுமாறும் இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு உடனுக்குடன் அனுப்புவதோடு எதிர்வரும் குடியரசு தினம் அன்று கிராம சபை முடிந்தவுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைபெற்றுள்ளதா என்பதனை உறுதி செய்து விரிவான அறிக்கை அனுப்பவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
திருப்பதி:
குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின விழா அன்று அந்தந்த மாநில கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். குடியரசு தின விழாவில் கவர்னர் உரையை மாநில அரசு தயாரித்து வழங்க வேண்டும்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின விழா விவரங்கள் மற்றும் உரை விவரங்களை கேட்டு மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவை மாநில அரசு அங்குள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடத்துவதை தவிர்த்தது. இதையடுத்து குடியரசு தின விழா அங்குள்ள ராஜ் பவனில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
இதனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் அம்மாநில முதலமைச்சர்களுடன் கவர்னர்கள் மோதல் போக்கை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் சந்திரசேகர் ராவ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் மத்திய அரசு மீதும் கவர்னர்கள் மீதும் குற்றம்சாட்டி பேசினர்.
முதலமைச்சர்கள் மற்றும் கவர்னர்கள் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின உரை கேட்டு கடிதம் எழுதி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
இந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா்.
விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இதைப்போல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை சோதிக்கின்றனா். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனா்.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான, 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.
- குடியரசு தின நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்படுகிறது.
- நேப்பியர் பாலம், போர் நினைவுச்சின்னம் வழியாக சென்று தீவுத்திடல் பகுதியில் ஒத்திகை முடிந்தது.
சென்னை:
ஜனவரி 26-ந்தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்படுகிறது. இதையொட்டி ஒத்திகை நிகழ்ச்சிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இன்று ஒத்திகை நடத்தப்பட்டது. எப்போதும் கலங்கரை விளக்கம் அருகில் இருந்து ஒத்திகை புறப்பட்டு நடத்தப்படும்.
இந்த நிலையில் இன்று காலை மெரினா நீச்சல் குளம் சர்வீஸ் ரோடு பகுதியில் இருந்து குடியரசு தின விழா ஒத்திகை இன்று தொடங்கியது. அங்கிருந்து காமராஜர் சாலையை வந்தடைந்தது. போலீசார் ஒத்திகையை நடத்தினர்.
நேப்பியர் பாலம், போர் நினைவுச்சின்னம் வழியாக சென்று தீவுத்திடல் பகுதியில் ஒத்திகை முடிந்தது. வருகிற 22, 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடத்தப்படுகிறது. மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இந்த ஒத்திகை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- சிவகங்கை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
- இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குடியரசு தினம் அன்று காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல்.
அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,ஜல் ஜீவன் இயக்கம்,பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவற்றை கிராம சபைக் கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
நெல்லை:
குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென்மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (06054) வருகிற 29-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் -நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க கோவை போத்தனூரைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.
- கடந்த 4-ந் தேதி டெல்லியில் நடந்த 4-வது சுற்றுக்கு தேர்வாகி வென்றோம்.
கோவை:
வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை எடுத்து கூறும் வாகன ஊர்வலம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் கவுரவமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க கோவை போத்தனூரைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளனர். இதில் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து நாட்டிய பள்ளியின் கலை இயக்குனர் மீனாட்சி சாகர் கூறியதாவது:-
எங்கள் நாட்டிய பள்ளி மாணவிகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த குழுவில் மொத்தம் 10 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.
5 பேர் வேலை பார்க்கின்றனர். 4 பேர் கல்லூரி படித்து வருகிறார்கள். ஒருவர் பள்ளி மாணவி ஆவார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் எங்கள் குழுவினரும் பங்கேற்க வேண்டும் என்றும் விரும்பினோம். இதற்காக முதலில் எங்கள் குழுவின் பரதநாட்டிய நடனத்தை வீடியோவாக அனுப்பி வைத்தோம்.
அதில் தேர்வு பெற்று தஞ்சாவூரில் நடந்த மாநில மற்றும் தென் மாநிலங்கள் அளவிலான போட்டியில் பங்கேற்றோம். அந்த 2 போட்டியிலும் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 4-ந் தேதி டெல்லியில் நடந்த 4-வது சுற்றுக்கு தேர்வானோம். அதிலும் வென்றோம்.
தற்போது டெல்லி இந்தியா கேட் அருகே, கர்தவ்யா பாதையில் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.
சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் கவர்னரை மாற்றக்கோரி தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
அது மட்டுமின்றி கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் மத்திய அரசு பயன்படுத்தும் அசோக சின்னமும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதன் வெளிப்பாடாக இப்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரித்து வருகிறார்.
கிண்டி கவர்னர் மாளிகையில் வருகிற 26-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்கள் என்றும் தமிழக அரசு இலட்சினையும் (முத்திரை) அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.