என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road"

    • ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.

    இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.

    இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • நெல்லை மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
    • மழை பெய்தாலே அங்குள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் நெல்லை, தச்சநல்லூர் பகுதிகளில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்த நிலையில் மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக டவுன் ஆர்ச் முதல் மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வரையிலும் மிகவும் மோசமாக இருந்த சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் காட்சி மண்டபத்தில் தொடங்கி பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் வரையிலும் உள்ள சாலை மேடு, பள்ளங்களாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த சாலை எப்போது சீரமைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நடந்து செல்வதற்கு கூட முடியாத அளவுக்கு இந்த சாலை இருப்பதாகவும், சிறிய அளவு மழை பெய்தாலே அங்குள்ள பெரிய அளவு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அய்யூப் நெல்லை மற்றும் பேட்டை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • பெரம்பலூர் மாவட்டத்தில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலைவிதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எஸ்பி மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தி நடைமுறை ப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதிய அபராத தொகை விதிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்வது, வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 756 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
    • நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.

    உடுமலை:

    உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.

    திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல்.
    • அரசு வேலை, தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை பேச அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து 23 -வது வார்டு கவுன்சிலர் துளசி மணி பேசினார். அப்போது 23 -வது வார்டு தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். அங்கேரிபாளையம் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட வருவதில்லை. ஆகையால் பணிகள் தரமற்ற முறையில் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் தினமும் அதை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி:-

    38வது வார்டில் மங்களம் ரோடு குறுகளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பின்னர் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் சென்று அடையவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளாக காணப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் ,தெரு நாய்களை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கருத்தடை செய்து ஐந்து நாட்கள் பராமரித்து அதனை உரிய முறையில் மீண்டும் அந்த இடத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    51 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில்,

    152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல். அரசு வேலை ,தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 152-வது அரசாணையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய போதுமான நிதி உள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

    4-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 40 மீட்டர் பணிகள் மட்டும் தான் செய்ய வேண்டியது உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.

    • சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்களால் பரபரப்பு
    • கூட்டை அழிப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் பால் பண்ணை அருகில் அமைந்துள்ள ஒரு புளிய மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த நிலையில் அந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு கணவர் பெயர் அம்மாசி, பிரபாகரன் மற்றும் சிலரை தேனீகள் சுற்றி வலளத்து கொட்டின. இதனால் உடல்வலி, மயக்கும் ஏற்பட்டதால் அவர்களை அங்குள்ள மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தேனீ கூட்டை அழிப்பதற்கு தீயணைப்பு நிலையம் அலுவலரிடம் வயலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
    • தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    • சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.

    இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    • குண்டும், குழியுமான சாலைகளால் ராமேசுவரம் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலாகும். இங்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதே போல் பிரசித்த பெற்ற தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்றவை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலைவசதிகள் ராமேசுவரத்தில் இல்லை என்பது கவலைக்குறியது.

    ராமேசுவரத்தில் 35 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் ராமேசுவரம் நகருக்கு வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரத்தில் உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ராமேசுவரம் சாலையில் பயணம் என்பது சாகச பயணமாக மாறி வருகிறது. பள்ளத்தல் ஏறி, இறங்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமேசுவரம் நகரில் பாதாள பணிக்காக பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து என்பது சிரமாக மாறி உள்ளது. ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி கார்னர் நகராட்சி அலுவலகம் வரை 2 பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.

    ராமேசுவரத்தில் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இந்தியாவில் ஆன்மீக நகரங்களில் முக்கியமானதாக உள்ள ராமேசுவரத்தில் தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • 10 ஆண்டு–களுக்கு மேலாக இருந்த

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டு–களுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கந்தர்வ–கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கரம்பக்குடி தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மேற்கண்ட பாதையை அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதனால் பல ஆண்டு–களாக ஆண்டாள் தெரு மற்றும் அம்பு கோயில் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து நிலை மாறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய தார் சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் எடுத்தனர்.

    இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் - துறையூர் இருவழிச் சாலை திறக்கப்பட்டது
    • நடைபெற்ற அரசு விழாவில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கிலோ மீட்டர் இருவழித்தட சாலை திறக்கப்பட்டதையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பாக சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மூலம் பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சாலையை ரூ.2.09 கோடியில் நிலம் எடுத்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம், குரும்பலூர் நகரப்பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 12 சிறுபாலங்கள், 53 குறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலை வழிகளில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் பிளிங்கா விளக்குகள், உயர்மின்கோபுர விளக்குகளும், குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியும், சாலையோர மின்விளக்குகளும், கழிவறை, தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகளுடன் கூடிய பஸ் நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.

    அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாவில் இந்த சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து ஆலம்பாடியில் அச்சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • புதியபுத்தூரிலிருந்து தட்டப்பாறை வரை 3கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    புதியம்புத்தூர்:

    கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லாமல் வடக்கில் இருந்து வரும் பஸ்கள் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை, புதியம்புத்தூர் ,புதுக்கோட்டை, ஏரல் வழியாக திருச்செந்தூர் சேர்ந்தால் தூரம் குறைவு. லாரிகள், தனியார் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கிறது.

    இந்த சாலையை அகலப்படுத்தும் பணியும், இந்த சாலையில் உள்ள பாலங்களை இரு மடங்கு ஆக்கும் பணியும் நடந்து வருகிறது. அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் புதியபுத்தூரிலிருந்து தட்டப்பாறை வரை 3கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதியம்புத்தூரில் இருந்து பிரசன்னா மேல்நிலைப்பள்ளி வரை உள்ள ஒரு கிலோமீட்டர் ரோடு படுமோசமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை சரி செய்யாமல் இருப்பது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக ஒரு கிலோ மீட்டர் சாலையில்சீரமைக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×