என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100148"

    கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவன் மீது ஒழுங்கீன புகார் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை பயன்படுத்துதல், சக மாணவர்களை செல்போனை பார்க்க வைத்து தொந்தரவு செய்வது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேலி, கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார்.

    இந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் நேற்று பள்ளிக்கு வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சி.டி.வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பரிதா பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபாபதி, துணைத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கல்வி அலுவலர் வீரமணி கூறுகையில், ’பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். #tamilnews
    ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர்களுக்கும், பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய மறுமலர்ச்சி, சாதி பேதமற்ற சமத்துவ உணர்வு, மத பேதமற்ற மானிட சமுதாயத்தின் மாண்பு அனைத்திற்கும் தேவையானது ஆசிரியர்கள் நடத்தும் கல்விப்புரட்சி என்பதை நானறிவேன்.

    ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது; மதித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

    ஆகவே, அந்த பாராட்டுதலில் தி.மு.க.வும் இணைந்து, இன்றைய தினம் ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர் பெருமக்களை வாழ்த்தி, பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்காக அவர்களின் சீரிய நலன்களுக்காக தி.மு.க. எந்நாளும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersDay #MKStalin
    அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அடித்து காயப்படுத்தியதால் பெற்றோர்கள் அத்திரமடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.கோம்பை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே இவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் புகாரளித்து வந்தனர்.

    இவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் துறை ரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் கடந்த 6-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகாரளித்தனர்.

    நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் 4 பேரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்துள்ளார். காயமடைந்த மாணவர்கள் திவாகர், மருதுபாண்டி, சபரி உள்பட 4 பேர் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

    தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் தூண்டுதலின் பேரில்தான் ஆசிரியர் பெரியசாமி மாணவர்களை தாக்கியதாக பெற்றோர்கள் ஆத்திரமடைந்து இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சபரி தனக்கு இந்த பள்ளியில் படிக்க பயமாக இருக்கிறது என்று கூறி மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீதும் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாலமுருகன், சண்முகம் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

    இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுப்பாமல் அங்குள்ள கோவிலில் நிறுத்தி வைத்தனர். இதனால் ஆசிரியர் ஒருவர் அவர்களை மிரட்டி பள்ளிக்குள் போக வைத்துள்ளார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீதும், பள்ளி மீதும் புகார் வந்து கொண்டிருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தும் நிலைக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளப்படுவார்கள்.

    புகார் தெரிவித்த பெற்றோர்கள் இன்று எரியோடு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நரியன் புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் அன்பரசன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    அதன்பேரில் கடந்த 19-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தி, அன்பரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்பரசனுக்கு உடந்தையாக, பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் செயல் பட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதனிடையே 2 பேர் மீதும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தலை மறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    வளநாடு அரசு பள்ளியில் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப கோரி பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள தேனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவிகள்படித்து வருகின்றனர். இதில் மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஆனால் ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மற்றொரு ஆசிரியையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.

    இதையறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியில் திரண்டு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 156 மாணவ, மாணவிகள் படித்து வரும் பள்ளியில் 6 ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு ஆசிரியை பணியிட மாற்றம் செய்யபட்டு உள்ளார்.

    அவருக்கு பதில் உடனே மாற்று ஆசிரியரை பணியில் அமர்த்த வேண்டும், இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை (டிசி) தாருங்கள், நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    தஞ்சையில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். #TrainAccident
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜமூர்த்தி(வயது54). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தினமும் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜமூர்த்தி புறப்பட்டார்.

    தஞ்சை-திட்டை இடையே கும்பகோணம் பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை ராஜமூர்த்தி கடந்து சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அந்த பகுதியில் நின்ற சிலர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் ராஜமூர்த்தி பலியானார். இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #TrainAccident 
    லாலாபேட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாற்றப்பட்ட ஆசிரியருக்கு பதில் புதிய ஆசிரியர் வேண்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாட பிரிவு மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கரூர் கலெக் டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாடப்பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் மாறுதல்ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் மாற்று ஆசிரியர் நியமிக்கபடவில்லை மேலும் தேர்வு நெருங்கி வருவதால் அந்தபாடம் மட்டும் நடத்தபடாமல் இருக்கிறது என்று மனுவில் கூறியிருந்தனர்.

    அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    இதனை தொடர்ந்து அன்று மாலை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கபீர் ஆகியோர் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளிடம்பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது, மாற்று பணியில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்து, இரண்டு நாட்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். இனி தொடர்ந்து வேளாண் பாட பிரிவு செயல்படும் என்று உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையின் போது தலைமை ஆசிரியர் மாலா, உதவி தலைமை ஆசிரியர் மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    மாணவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சி கடந்த வாரம் வேகமாக பரவியது. இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பழனி கல்வி மாவட்ட அலுவலர் கருப்புசாமிக்கு, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளிக்கு நேரில் சென்று கருப்புசாமி விசாரணை நடத்தினார். பின்னர், முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரும் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவன், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவனுடன் அவனது பெற்றோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் மாணவனின் தந்தை கூறியிருப்பதாவது:-

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனது மகனை ஆசிரியர் ஒருவர் ஓய்வு அறைக்கு அழைத்து சென்று, அவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பள்ளிக்கு சென்ற எனது மகனை சக மாணவர்கள் ‘எனக்கும் மசாஜ் செய்துவிடு’ என்றுகூறி கேலி செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்கிறான்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் எனது மகனை அழைத்து மசாஜ் செய்தது நாடகத்திற்காக எடுக்கப்பட்ட ஒத்திகை என்று கூறுமாறும், இல்லையென்றால் உன்னை பள்ளியில் படிக்க விடமாட்டேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

    இதனால், அவன் பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறான். எனது மகனின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு கவலையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அதிகாரி செல்வம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கியு ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி எடுத் துரைக்கப்பட்டது. இது ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புத்தகம் எடுத்து செல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் கியுஆர் கோடு மூலம் காணொலி மூலம் பாடத்திட்டத்தை அறிந்து படித்தல் மூலம் அதனை புரிந்து, அறிந்து படிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    6-வகுப்பு ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கீழப்பழுவூர் சாமி பள்ளியிலும் பாட புத்தகம் குறித்த ஆசிரியர்களுக்கு விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட திட்டங்கள் மாணவர் களின் திறனானது மேம்படுத்தப்படும். மாணவர்கள் தங்களை அனைத்து விதத்திலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் போட்டி போட முடியும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி கூறினார். 
    பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார். #TeacherBhagavan
    பள்ளிப்பட்டு:

    பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.

    ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பகவான்.



    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.



    பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

    மாணவர்கள் - ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் பகவான் கூறுகையில்:-



    மாணவர்களின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது பணியை தான் செய்தேன். எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. ஒரு நண்பனாக இருந்து பாடம் நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்காக மாணவர்கள் அழுதது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.

    இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச்செல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இருப்பினும் அரசு உத்தரவை ஏற்று தான் ஆக வேண்டும்.

    எனக்கு நண்பர்களும், தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் எட்டாக்கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் இன்று அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்தவர் உசேன். துபாயில் எலட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு ஏற்கனவே 20 வயதில் இளம்பெண் உள்ளார்.

    இந்நிலையில் சல்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமானார் ஒரே பிரசவத்தில் 2 ஆண், 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். அவர்களுக்கு முகமது பாசிம், முகமது பிசாம், பாத்திமா பனினா, பாத்திமா ஹம்னா என்று பெயரிட்டு வளர்த்தனர்.

    தற்போது அவர்களுக்கு 4 வயதாகிறது. இதனையொட்டி அவரது பெற்றோர் சங்கரங்குளம் கோக்கூன் அரசு பள்ளியில் அவர்களை எல்.கே.ஜி.யில் நேற்று சேர்த்தனர். பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளையும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

    ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் ஒரே சீருடையில் பள்ளிக்கு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். #tamilnews
    குளச்சல் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளியில் தெற்கு புத்தளத்தைச் சேர்ந்த பொன்ராஜதுரை (49) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பொன் ராஜதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி, பெற்றோரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

    கல்வி அதிகாரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டும், ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி, குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) வேணுகோபால் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யும் படி அறிவுறுத்தினர். அதன்படி பெற்றோரும் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து பொன் ராஜதுரை மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது பொன் ராஜதுரை திடீரென மயங்கி விழுந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் பொன் ராஜதுரை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாகர்கோவில் ஜெயிலில் பொன்ராஜதுரை அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×