search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100849"

    • 7 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

    தஞ்சாவூர்:

    காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

    மாநில பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் , மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மதிவாணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மது அலி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், மாதவன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர. மோகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டிலே குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

    உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.

    மேலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்றைய தினம் டெல்டாவிலிருந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது.

    அதாவது வாக்குறுதி மட்டுமே கொடுத்துள்ளார்கள். ரத்து செய்வோம் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

    இதனை முழுமையாக நம்ப முடியாது. ஏனென்றால் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள எழுத்துப்பூர்வ மான வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

    அதுபோல் நிலக்கரி சுரங்கம் ரத்து என்கிற வாக்குறுதி ஆகி விடுமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் மத்திய பா.ஜ.க.வின் வாக்குறுதிகளை நம்ப மாட்டோம்.

    எனவே இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்லடத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் கணவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் திவ்யா (24) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

    காதல் திருமணத்துக்கு ஆனந்த் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஏற்றுக் கொண்டனர்.

    திவ்யா பல்லடத்தில் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்த் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

    இதில் திவ்யாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆனந்த் கூறினார். இதற்கு ஆதரவாக அவரது பெற்றோர் நாகராஜ், விசாலாட்சி ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட திவ்யா தனது கணவர் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து நியாயம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆகியோர் ஆனந்த் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்வதாக கூறினர்.

    இதனையடுத்து தர்ணா போராட்டதை கைவிட்ட திவ்யா கணவருடன் வீட்டுக்கு சென்றார்.

    இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    அதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை” என கூறினார். 
    விருத்தாசலம் அருகே நள்ளிரவில் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை காந்தி (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் கடத்தியதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த நேமம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தில்லை காந்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியதாக தான் தில்லைகாந்தியை பிடித்து வந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உள்ளோம். அவரை விட முடியாது என்று போலீசார் கூறினர். இதனால் பொதுமக்கள் நள்ளிரவு 12 மணி வரை போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காவிரி பாசன விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் ராயநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ராயநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கருணாநிதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் ராயநல்லூரை சேர்ந்த மணிமாறன் தலைமையில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    ஆரல்வாய்மொழி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே அழகியநகரைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 35).

    இவர் வெள்ளிச்சந்தை காலனி பகுதியை சேர்ந்த வினோதினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் தற்போது வெள்ளிச்சந்தையில் தங்கி இருந்தனர்.

    கடந்த 15-ந்தேதி இளையராஜா அந்த பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இளையராஜாவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையை கைப்பற்றி விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் இளையராஜா தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது உடலில் போதை மருந்து பரவி இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போலீசார் இளையராஜாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. இன்று 3-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைவர் அழகிரி படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்பு த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக த.மா.கா.வினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் த.மா.கா.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அப்போது திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners
    மதுரை:

    மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுக்க சென்ற காவலர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர்.



    இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiCentralPrison #MaduraiPrisoners

    புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த அந்த சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன.

    இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும், கல்வீச்சில் போலீசாரின் 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச்சொல்லி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லெட்சுமி, லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கருப்புக்குடிப்பட்டியில் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை அழைத்து கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே பொன்னமராவதி நகரை அமைதிப்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

    வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுக்கோட்டையை அடுத்த கவிநாடு கண்மாய் முக்கம் அருகே குடுமியான்மலை மற்றும் இலுப்பூர் செல்லும் சாலையில் எந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்கள் மீது கற்களை வீசினார்கள்.

    இதில் 3 அரசு பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமச்சந்திரன் என்பவர் சப்-காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது36). என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவர் அங்குள்ள எந்திரத்தில் வால்வுகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இன்பராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே இன்பராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இன்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     


    இதுதொடர்பாக கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த இன்பராஜுக்கு ஜெபா அன்ன பூர்ணம் என்ற மனைவியும், ஜெபிஷா, ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே இன்பராஜின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.

    அணுமின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலியான இன்பராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அணுமின் நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடந்ததால் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதுகாப்பாக செல்ல அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை அருகே கண்டெய்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். #MakkalNeedhiMaiam
    கோவை:

    கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கண்டெய்னரில் பண்டல், பண்டலாக பணம் கொண்டு செல்லப்பவடுதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், லாரியை திறந்து சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கண்டெய்னர் லாரி கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று கலெக்டர் ராஜா மணி முன்னிலையில் கண்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்த போது, அதில் டீத்தூள் பண்டல்கள் மட்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கண்டெய்னரில் இருந்த டீத்தூள் பண்டல்களை வேறு லாரியில் ஏற்றி அனுப்பினர்.

    இதற்கிடையே லாரி டிரைவரான பிரகாஷ்(36) குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முகமது சாஜித் மற்றும் அவருக்கு துணையாக வந்தவர்கள் லாரியை சிறை பிடித்து, சேதப்படுத்தியதோடு, தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

    புகாரின்பேரில் முகமது சாஜித் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பெரோஸ்கான்(22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தடுத்து நிறுத்துதல், தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சொத்துக்களை சேதப்படுத் துதல் உள்ளிட்ட 6 பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோவை ஜே.எம்.7 மாஜிஸ் திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் தி.மு.க. நிர்வாகிகள் குறிச்சி பிரபாகரன், இளைஞர் அணியை சேர்ந்த கோட்டை அப்பாஸ் மற்றும் மசூத், யாசர், வானவில் கனகராஜ், புவனேஸ்வரன், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், ரமணி, கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MakkalNeedhiMaiam
    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும் என வலியுறுத்தி தனியார் விமானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
    மதுரை:

    சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த சிலர் திடீரென எழுந்து நின்றனர்.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என  அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
    ×