search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114339"

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை.
    • எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது.

    கொழும்பு :

    இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினை தொடர் கதையாகவே நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக நேற்று அவர் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு விரும்புகிறேன். அப்படி தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது சர்வதேச நிதியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துகிறோம்.

    அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது. பெரும்பான்மை சிங்களர், தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களைப் பாதுகாத்து நாம் முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.

    நாட்டில் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்கின்றனர்.

    சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே நமது அடுத்த பணி. 2024-ம் ஆண்டுக்குள் தேவையான சட்டத்தை உருவாக்கி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி இருந்தார்.

    ஆனால் இதற்கு சிங்களர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அனைத்துக்கட்சி கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்கு சிங்கள கட்சிகள் செவிசாய்க்குமா என்பது போகப்போக தெரியும்.

    • இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
    • நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.

    கொழும்பு :

    மே தினத்தையொட்டி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.

    அதில், 'நம் நாடு கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளானது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக நாம் காத்திருந்தபோது, தொழிலாளர்கள் அதற்கு துணிவோடும், பொறுமையோடும் ஆதரவு அளித்தனர். தற்போது மே தினத்தை கொண்டாடும் வேளையில், இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.

    வருகிற 2048-ம் ஆண்டு, சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது இலங்கை ஒரு வளர்ந்த நாடாகும். அதற்கான பணியில் நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட இந்த அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அவர்களை வாழ்த்துகிறோம்.'

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரிந்தது.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்ட 'க்யூ பிரிவு' போலீசார், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் சட்டவிரே ாதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி கண்காணித்து வந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு காங்கயம், காடையூரில் தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த தசிக்குமார், 36 என்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரி ந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளி தசிக்குமாருக்கு மூன்று ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    • இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.

    இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    கொழும்பு:

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ஆட்டோவில் வைக்கப்பட்டி ருந்த பெட்டி, பைகளில் ஐஸ் பெட்டிகள் இருந்தன. அவைகளை சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது.

    போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் பிரபல போதை பொருள் கடத்தல் காரர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    இந்த போதைப் பொருள், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த படகுக்கு போதைப் பொருள் மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் படகில் இருந்து ஐஸ் போதை பொருளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

    போதைப் பொருள் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும், வேதாரண்யத்தில் இருந்து கடத்தி யது யார்? ஆகியவை குறித்து விசாரணை நடக்கிறது.

    • பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
    • வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கொழும்பு :

    வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன.

    கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.

    கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மூவர் காயமடைந்தனர்.

    வெள்ளம் காரணமாக கண்டி-மாத்தளை சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. எனவே மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    மத்திய இலங்கையின் சில பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.

    4 மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தொடர் கனமழையால் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆறுகளுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை வழியாக நகர்ந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசும்.

    அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
    • கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    • இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.

    இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

    இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது.

    இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதைத்தொடர்ந்து சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

    ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

    இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பேர் மட்டுமே சென்றனர். முதல் விமானம் காலை 10.15 மணிக்கு தாமதமாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது.

    வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு இருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.

    சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது.
    • தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

    கொழும்பு:

    இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.

    இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

    தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.

    2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது.
    • இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

    கொழும்பு :

    கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியும் இலங்கையை பாதித்து உள்ளதால், நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக ஸ்தம்பித்து உள்ளது. இதனால் சர்வேதச பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை 'வேர்ல்டுபேக்கர்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணி இடத்தை பிடித்து உள்ளது.

    குறிப்பாக முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான கலாசாரம் பவுத்தமாக இருக்கும் நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால், பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டு உள்ளது.

    இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. அந்த இணையதளத்தின் வரிசைப்படுத்தலை சுட்டிக்காட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    • இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
    • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கொழும்பு :

    இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இலங்கையில் கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் 36 சுகாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் நோய் கண்டறிவதற்கான கருவிகள் கூட இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

    இலங்கை சுகாதாரத்துறைக்கு மேற்படி கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான தொகை பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனங்கள் தற்போது கருவிகளை வழங்குவது இல்லை என தெரிய வந்துள்ளது.

    எனினும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×