என் மலர்
நீங்கள் தேடியது "slug 114456"
சென்னை பூந்தமல்லி கலைமகள் நகர், 1-வது தெருவில் வசித்து வருபவர் கிருபாவதி(வயது 45). இவருடைய மகள் அரிபிரியா. இவருக்கு திருமணமாகி 1½ வயதில் பிரக்யா என்ற பெண் குழந்தை உள்ளது. அரிபிரியா, வேலைக்கு செல்வதால் பேத்தி பிரக்யாவை, கிருபாவதி கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிரக்யா, திடீரென வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் எட்டிப்பார்த்தபோது, கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவதி, அலறி அடித்தபடி ஓடிச்சென்று சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்காமல் பேத்தியை பத்திரமாக மீட்டார்.
கிணற்றுக்குள் தவித்த அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் இறங்கி, குழந்தையை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் கிருபாவதியை கிணற்றுக்குள் இருந்து மேலே கொண்டு வரமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி கிருபாவதியை பத்திரமாக மீட்டனர்.
அந்த கிணறு சுமார் 40 அடி ஆழமும், 3 அடி அகலமும் கொண்டதாகும். கிணற்றில் 4 அடி தண்ணீர் இருந்தது. கிணற் றுக்குள் குழாய்கள், மோட்டார் இருந்தது. கிணற்றுக்குள் விழும்போது குழந்தை இதில் எதன் மீதும் மோதாமல் தண்ணீரில் விழுந்துள்ளது.
மேலும் கிணற்றுக்குள் குழந்தை விழுந்த உடன் கிருபாவதியும் உள்ளே குதித்து தனது பேத்தியை காப்பாற்றி விட்டதால் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கிணற்றுக்குள் குதித்ததில் கிருபாவதிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிணற்றில் விழுந்த பேத்தியை அதன் பாட்டி சற்றும் யோசிக்காமல் உள்ளே குதித்து காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 33), தொழிலாளி. சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் உள்ள நாரைகுளம் பகுதியை சேர்ந்த தினகரன் (28). இவர்கள் இருவரும் பாண்டியநெல்லூர் சுடுகாடு அருகே உள்ள மதுபானகடையில் தனித்தனியே மதுகுடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் இருந்த கிணற்றில் இருவரும் விழுந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவர்களை மேலே தூக்கி வந்தனர். அப்போது சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகரனை கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மணல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). இவரது மனைவி ராமலட்சுமி (27).
கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராமலட்சுமி வேலைக்கு சென்று வந்தார். அப்போது தனது 2 மகன்களையும் தாய் வீட்டில் விட்டுச் செல்வார்.
நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராமலட்சுமி மகன் ஆறுமுகம் (9) இல்லாததை கண்டு அவனை தேடினார். ஆனால் தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஊருக்கு ஓதுக்குப்புறமாக உள்ள சண்முகம் என்பவரது பம்புசெட் கிணற்றில் சிறுவன் ஆறுமுகம் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குளிக்கச்சென்றபோது தவறி விழுந்து ஆறுமுகம் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மகள் சர்மிளா (வயது 10). இவள் சிங்காரபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கொல்லகொட்டாயில் உள்ள விவசாய நிலம் பக்கமாக மாணவி சர்மிளா நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக அவள் தவறி விழுந்தாள். சர்மிளாவுக்கு நீச்சல் தெரியாததால் அவள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர்.
சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செட்டியப்பட்டியில் 70 அடி ஆழ கிணற்றில் ஒரு வாலிபர் தவறி விழுந்து விட்டதாக மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார்.
அந்த வாலிபரின் பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த பஷிர்(வயது 35) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பஷிர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்ல ரெயில் டிக்கெட் எடுத்து விட்டு இடையில் செட்டியப்பட்டியில் இறங்கியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த நபரிடம் தன்னை ஒரு இடத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். இதனிடையே சந்தேகமடைந்த அந்த நபர், செல்போனை எடுத்து பேச முயன்ற போது, தன்னை பற்றித்தான் யாரிடமோ பேச போகிறார் என்று எண்ணி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ தரை மட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
பஷிர் சென்னையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு பயணித்துள்ளார். இடையில் அவர் மணப்பாறையில் இறங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.
இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.
அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.
அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.
இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் விஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). கட்டிட தொழிலாளி.
இவர் மதுரவாயல் 4-வது தெரு வேல் நகரில் வசித்து வரும் ஓய்வு பெறும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார்.
கடந்த 7-ந்தேதி பணியில் ஈடுபட்டபோது ரமேஷ் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதியழகன் வீட்டில் இருந்து கிணற்றில் அழுகிய நிலையில் ரமேசின் உடல் மிதந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ரமேசின் உடலை மீட்டனர்.
விசாரணையில் ரமேஷ் பணியில் ஈடுபட்டபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாகி இருப்பது தெரிந்தது. 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு இல்லாமல் கட்டிட பணியில் ஈடுபட்டதாக காண்டிராக்டர் விநாயகம் மற்றும் மதியழகனை போலீசார் கைது செய்தனர்.