என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி உயிரிழப்பு"

    • பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
    • ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.

    இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.

    • அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
    • மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.

    இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி சத்து மாத்திரை கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என மாணவ-மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள், 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரையை சாக்லெட் சாப்பிடுவது போன்று போட்டி போட்டு 30 முதல் 60 வரை மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த 6 பேரும் ஊட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு, ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சேலம் தாண்டி வரும்போது அந்த மாணவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மற்றொரு மாணவியின் உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சம்பவம் நடந்த கடந்த 6-ந்தேதி கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றும், பள்ளிக்கூட பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

    மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் தொடர்பாக ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இதற்காக மாணவி சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருடன் தங்கி இருந்த தோழி ஒருவர் மீட்டு ஆட்டோ மூலம் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எனவே மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர். இதனையடுத்து மாணவியை அவரது தோழி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சரவணம்பட்டி போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கியது யார் என்றும், அவர் காதல் பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கர்ப்பம் அடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
    • ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா. இவர்களது மூத்த மகள் ஹேமிதா (வயது19).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம்ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடிவந்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஹேமிதா உடல் மீட்கப்பட்டது. அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

    இதற்கிடையே மகள் ஹேமிதா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயது முதலே படித்து வந்துள்ளார். அப்போது டியூஷன் மாஸ்டர் அஜய் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

    இந்த காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர். அதன் பிறகு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் ஹேமிதா கல்லூரிக்கு சென்றபோது ஹேமிதாவை மீண்டும் அஜய் சந்தித்து காதலை வளர்த்து உள்ளார். ஆனால் ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனை அவரின் பெற்றோர் வாங்கிக்கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது

    இதையடுத்து ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஹேமிதா மர்மமான முறையில் இறந்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து டியூசன் மாஸ்டர் அஜய்யிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹேமிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறினால் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஏன் வரவேண்டும்.

    அதிகாலை 4 மணிக்கே அவரை வெளியே அழைத்தது யார்? யாரை சந்திக்க சென்றார்? அவரை யாரேனும் தற்கொலை செய்து கொள்வதற்காக தூண்டினார்களா? அல்லது காதலித்து வரும் அஜய்யை பார்ப்பதற்காக அதிகாலை வந்தாரா? என பல கோணங்களில் பல்லாவரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதன் பின்னரே ஹேமிதா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.

    இது தொடர்பாக ஹேமிதா பயன்படுத்திய செல்போன் மற்றும் காதலன் அஜய் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள உரையாடல் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மாணவி உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

    அதில் ஒருவரான மேகனா (வயது 13) அதே பகுதியில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

    உடனடியாக அவரது பெற்றோர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஓய்வெடுக்க கேட்டுக்கொண்டனர்.

    ஆனாலும் காய்ச்சல் சரியாகவில்லை. தொடர்ந்து அதிகமானதோடு நேற்று இரவு அபாய கட்டத்திற்கு சென்றார். இதனால் பதட்டம் அடைந்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தந்தை பாண்டி மகளை அழைத்துச் சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மேகனா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பிணமாக வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

    முன்னதாக அரசு மருத்துவமனையில் மாணவி மேகனாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகும் முன்பு அவர் பலியாகி விட்டார். இருந்த போதிலும் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சிருஷ்டி தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனா. இவரது மனைவி சுமா.

    இந்த தம்பதியின் மகள் சிருஷ்டி (வயது 13). இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி சிருஷ்டி பள்ளிக்கூடத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயத்தில் தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனே அப்பகுதி மக்கள் சிருஷ்டியை மீட்டு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்துபோனதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது. 

    • மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
    • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திடீரென மாணவி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
    • 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
    • ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பதனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியின் ஒரே மகள் தேஜஸ்வினி (வயது 6). இவள் சாம்ராஜ்நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் நேற்று காலை சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க தேஜஸ்வினி வெளியே வந்துள்ளாள். அப்போது திடீரென்று அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது தேஜஸ்வினி மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பருவமழை காலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் மட்டுமின்றி அரியவகை நோய்களும் பரவுவது வாடிக்கையாக உள்ளது. இப்படியெல்லாம் நோய் இருக்கிறதா? என்ற ஆச்சரியப்படும் வகையில் பலவித தொற்று நோய்கள் பரவும் மாநிலமாக கேரளா இருக்கிறது.

    இந்தநிலையில் "குய்லின் பார் சிண்ட்ரோம்" என்ற வினோத நோய்க்கு பள்ளி மாணவி ஒருவர் பலியாகி இருக்கிறார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மூவாட்டுப்புழா வாழக்குளம் பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் பெயர் கவுதமி பிரவீன்(வயது15). காஞ்சிரப்பள்ளியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டயம் மருத்துவக்கல்லுரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அரியவகை நோயான "குய்லின் பார் சிண்ட்ரோம்" பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை மாதமாக வென்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    "குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி தசை பலவீனத்தை ஏற்படுத்தும். கூச்ச உணர்வு, உடல் பலவீனம், உடலை முடக்குதல் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகும்.

    "குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் குறித்து மருத்துவ துறையில் கூடுதல் பேராசிரியராக பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் கூறும்போது, "நீண்டகால சிகிச்சை பெறுவதன் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நோய் எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடும். ஆனால் தொற்று நோய் கிடையாது" என்றார்.

    ×