search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு"

    சேலத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய தஞ்சையை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் 4 ரோடு பகுதியில் பிரபல தனியார் ஜவுளிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுக்க இந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில் 3 பெண்கள் துணி எடுப்பது போன்று கடைக்கு சென்றனர்.

    பின்னர் கடையில் பல்வேறு இடங்களுக்கு சென்று துணிகளை பார்வையிட்டு ஒவ்வொன்றின் விலையை கேட்டனர். ஆனால் அவர்கள் துணிகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்களை நோட்டமிட்டபடி இருந்தனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் ஆளுக்கு ஒரு சேலையை எடுத்து அதை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது ஊழியர்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து கடை மேலாளர் சற்குணம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரா (வயது39), ராதா (32), நிர்மலா (34) என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் சேலை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
    பென்னாகரம், பெரும்பாலை பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட்டுகள் அடிக்கடி திருட்டு போனது. இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் பருவதனஅள்ளி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி பகுதியை சேர்ந்த மஞ்சு (வயது 28), பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன்(28) என்பதும், பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி மற்றும் கர்நாடக மாநிலத்தில் மொபட்டுகள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆண்டிமடம் அருகே ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீடுகளில் 21 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பரணி மஹால் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி அலமேலு(48). இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். விக்னேஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகனுடன் திருப்பதி சென்றார். இந்நிலையில் நேற்று காலை செல்வராஜின் வீட்டில் வேலை செய்யும் பெண் அங்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் கவரப்பாளையத்தில் உள்ள செல்வராஜின் உறவினருக்கு தகவல் தெரிவத்தனர்.

    அவர் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) மோகனதாஸ், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.பின்னர் திருப்பதியில் உள்ள செல்வராஜிக்கு செல்போனில் தகவல் தெரிவித்து, அவரிடம் போலீசார் விசாரித்ததில் பீரோவில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீரோவில் பார்த்தபோது பணம் மற்றும் நகை இல்லை. இதனால் அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    செல்வராஜின் மகள் திருமண செலவிற்கு வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, அவர் லோன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு, திருப்பதி சென்று திரும்பி வந்த பின்னர், கடன் பெற்றவர்களிடம் பணத்தை கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றதால், செல்வராஜ் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளிவரை சென்று விருத்தாச்சலம் ரோட்டில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கொல்கத்தாவில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சூரக்குழியில் உள்ள வீட்டில் அவருடைய மனைவி விஜி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாடியில், அரசு அலுவலராக பணிபுரியும் அருள்மேரி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் விஜி, தனது குழந்தைகளை திருக்களப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, சங்கரை காண கொல்கத்தா சென்றுள்ளார்.

    விஜி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாடியில் தனியாக இருப்பதற்கு பயந்த அருள்மேரி நேற்று முன்தினம் இரவு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் படுத்திருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவருடைய வீடு மற்றும் சங்கர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம், 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    மேலும் அருள்மேரி வீட்டின் கதவையும் உடைத்து வீட்டிற்குள் இருந்த ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை செய்து மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் ஆண்டிமடம் பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்ததாக இரும்பு கடை வியாபாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1ஐ சேர்ந்தவர் மணி(வயது 53). இவருக்கு சொந்தமான வீடு, ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது. இந்த வீட்டை பூட்டிவிட்டு மணி, வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த பித்தளை குடங்கள், வெள்ளிப்பொருட்கள், லாரியின் உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதேபோல் பக்கத்தில் பூதேரியை சேர்ந்த ரகு(36) என்பவருடைய வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்ததும் ரகு, வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மின்மோட்டார், தாமிர கம்பிகள், இரும்பு பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, சசி குமார், ஏட்டு மணிமாறன் ஆகியோர் விரைந்து வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் மர்மநபர்கள் அடுத்தடுத்த 2 வீடுகளில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து மணி, ரகு ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வானூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர், திண்டிவனத்தில் உள்ள மயிலம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் வியாபாரி ராமு(28), இவருடைய உதவியாளர் சதாம்உசேன்(25) ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் அதனை கடைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் திருட்டு நகைகளை வாங்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து வினோத் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் செவ்வாப்பேட்டை போலீசார் பெருமாள்பட்டு, செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் திருவள்ளூரை அடுத்த நெமிலிச்சேரி நாகாத்தம்மன் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது. அவர் வினோத் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தான் திருடிய நகைகளை திருவள்ளூரை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள மாதர்பாக்கத்தை சேர்ந்த பவர்லால் (47) என்பவரின் அடகு கடையிலும், காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த கருப்பையா(62) என்பவரின் நகைக்கடையிலும் விற்றதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் பவர்லால், கருப்பையா மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர். 
    வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தபட்டிருந்த 6 மோட்டார்சைக்கிளை ஒரே நாளில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர் மற்றும் பேஸ்-2 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், ரவி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிள்ளையார்குப்பம் சாலை சந்திப்பில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சங்கரன்பாளையத்தை சேர்ந்த சூர்யா (வயது 20), தொரப்பாடி பல்லவன் நகரை சேர்ந்த குமரன் (21), வேலூரை சேர்ந்த அஜித் (18) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர், பேஸ்-2 பகுதி ஆகிய இடங்களில் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும், அதனை சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் பாலாற்றங்கரையோரம் பதுக்கி வைத்துள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். 
    கோத்தகிரியில் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் பணியில் இருந்து நின்றுள்ளார். இவர் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் கியாஸ் சிலிண்டர்களை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டர் காணாமல் போனதாக ஏஜென்சி மேலாளர் விஸ்வநாதன் கோத்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரஞ்சித்குமார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டரை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர் அருகே பள்ளி மாணவியிடம் நூதன முறையில் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Theftcase

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ரம்யா என்ற மாணவியிடம் சைக்கிள் நூதன முறையில் திருடப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளி வளாகத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவிகளிடம் நான் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறேன். அவசர வேலையாக வெளியில் செல்வதாகக் கூறி அங்கிருந்த மாணவி ரம்யாவிடம் புது சைக்கிளை வாங்கி கொண்டு சென்றார். மதியம் வரை திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாணவி பின்னர் அங்கிருந்து சக மாணவிகளிடம் தெரிவித்தும் ஆசிரியரிடம் கூறினார். பின்னர் விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இங்கு பணிபுரியவில்லை என்று தெரியவந்தது.

    மாணவியின் பெற்றோர்கள் பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவிகளிடமும் அப்பகுதி பெற்றோர்களிடமும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

    ×